

திருமலை திருப்பதியை கலியுக வைகுண்டம் என ஆன்றோர்கள் போற்றி புகழ்வது உண்டு. திருப்பதிக்கு சென்று வந்தாலே வாழ்க்கையில் மிகப் பெரிய திருப்பம் ஏற்படும் என்பார்கள். திருப்பதி கோவில் மட்டுமல்ல திருக்கோவிலில் இருக்கக்கூடிய தீர்த்தங்களும் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகின்றன. திருப்பதி மலையில் 365க்கும் மேற்பட்ட மிக முக்கியமான புண்ணிய தீர்த்தங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. அவற்றில் சில தீர்த்தங்கள் மிகவும் முக்கியமானதாகவும், அவற்றில் நீராடுவது பக்தர்கள் மத்தியில் புனிதமானதாகவும் கருதப்படுகிறது. இந்த தீர்த்தங்களைப் பற்றியும், அதில் நீராடுவதன் பலனையும் பார்க்கலாம்.
சுவாமி புஷ்கரணி
ஆதிவராக மூர்த்தி சன்னிதிக்கு அருகில் இந்த தீர்த்தம் உள்ளது. இதனை ‘தீர்த்தங்களின் அரசி’ என்று அழைக்கிறார்கள். இங்கு சரஸ்வதிதேவி தவம் இயற்றியதாக தல புராணம் சொல்கிறது. மிகவும் புனிதத்துவம் பெற்ற தீர்த்தம் இது.
குமார தீர்த்தம் :
மாசி மாதம் மகம் நட்சத்திரம் வரும் தினத்தன்று (மாசி பவுர்ணமி), சகல தீர்த்தங்களும் வந்து இந்த தீர்த்தத்தில் தீர்த்தமாடுவதாக ஐதீகம். எனவே இந்த நாளில் மனதிற்கு உற்சாகமும், உடலுக்கு இளமையும் தரும் இத்தீர்த்தத்தில் நீராடுபவர்கள், ராஜசூய யாகம் செய்த பலன் கிடைக்கும் என்று கூறுவார்கள்.
தும்புரு தீர்த்தம் :
திருப்பதி மலையில் உள்ள பாபநாசம் மலைப்பகுதியில் இருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவில் அடர்ந்த காட்டுப்பகுதியில் நீளமாக பிளவுபட்ட மலையின் அடிப்பகுதியில் தும்புரு தீர்த்தம் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஏழுமலையானின் தெப்ப உற்சவம் நிறைவடைந்த மறுநாள் ஏற்படும் பௌர்ணமி நாளன்று பக்தர்கள் திருப்பதி மலையில் உள்ள தும்புரு தீர்த்தத்திற்கு பாதயாத்திரை ஆக சென்று புனித நீராடுவது வழக்கம். இங்கு வந்து பங்குனி பௌர்ணமி மற்றும் உத்திர நன்னாளில் நீராடுபவர்களுக்கு மறு பிறப்பு இல்லை, பரமபதம் வேண்டாமலேயே கிட்டிவிடும் என்று வராஹ புராணம் கூறுகிறது.
கபில தீர்த்தம்:
திருப்பதி மலையடிவாரத்தில் உள்ள அலிபிரி பகுதியில் உள்ள இந்த தீர்த்தம் "ஆழ்வார் தீர்த்தம்" என்றும் அழைக்கப்படுகிறது. மாதவன் என்னும் அந்தணன் பெண் பித்தனாய் அலைந்து நோய்வாய்ப்பட்டான். திருமலைக்கு சென்றால் தீர்வு கிடைக்கும் என்று எண்ணி, இங்கு வந்தான், கபில தீர்த்தத்தில் நீராடி பிண்டதானம் செய்தான்.
நோய் தீர்ந்து சுகம் பெற்றான். திருமலைக்கு ஏறி பெருமாளை தரித்து மோட்சம் அடைந்தான். கபில முனிவர் இங்கு வந்து சிவனருள் பெற்றதால் இப்பெயர் பெற்றது.
ஆகாச கங்கை :
இது மலைக்கு மேலே அமைந்துள்ள ஒரு முக்கியமான தீர்த்தம். தினந்தோறும் அதிகாலையில் இந்த தீர்த்தத்தாலேயே வேங்கடவனுக்கு அபிஷேகம் நடைபெறுகிறது. சகல பாவங்களையும் போக்கும் இத்தீர்த்தத்தின் அருகில் எண்ணற்ற ரிஷிகள் தவமிருந்தனர்.
அந்தக் காலத்திலேயே திருமலை நம்பிகள் தினமும் இந்த தீர்த்தத்தில் இருந்து ஒரு பெரிய குடத்தில் வேங்கடவனுக்கு அபிஷேக தீர்த்தம் எடுத்துக்கொண்டு நடந்தே வருவாராம். கோவிலில் இருந்து சுமார் 2 மைல் தூரம் நடந்து வரும் இவரின் பக்தியை மெச்சி, அவருக்கு பெருமாள் காட்சி கொடுத்தார் என்று புராண வரலாறுகள் கூறுகின்றன. சகல சித்திகளையும் அளிக்கும் இத்தீர்த்தத்தில் சித்திரை மாதம் பவுர்ணமியன்று நீராடுவது மிகச் சிறப்பு.
பாண்டு தீர்த்தம் :
திருப்பதி மலையில் உள்ள பல தீர்த்தங்களில் இதுவும் ஒன்று. இது அகன்ற மற்றும் சக்திவாய்ந்த தீர்த்தங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. வைகாசி மாதம் வளர்பிறை துவாதசியுடன் கூடிய செவ்வாய்க்கிழமையில் பல தீர்த்தங்கள் இதில் கூடுவதால், அந்த நாளில் இந்த தீர்த்தத்தில் நீராடினால் இதற்கு முந்திய 21 முற்பிறவிகளில் செய்த பாவம் நீங்கி நல்வாழ்வு அமையும்.
பாபவிநாசன தீர்த்தம் :
பத்ரன் என்ற அந்தணண் தன் மனைவியருடன் வறுமையில் வாழ்ந்து வந்தான். அந்தண மனைவியருள் ஒருத்தி தன் தந்தையின் ஆலோசனைப்படி, பத்ரனை பாபவிநாச தீர்த்தத்தில் நீராடி பெருமாளை வழிபட்டு வரச்சொன்னாள். அவ்விதமே நீராடி தன் வறுமை நீங்கப்பெற்றான்.
இத்தீர்த்தம் இயற்கை எழில் கொஞ்சும் சூழ்நிலையில் அமைந்துள்ளது. மிக்க சுவையுடன் விளங்கும் தீர்த்தங்களில் இதுவும் ஒன்று. ஐப்பசி மாதம் வளர்பிறை சப்தமி திதியும், உத்திராட நட்சத்திரமும் கூடிய ஞாயிற்றுக்கிழமையில் இதில் சில தீர்த்தங்கள் ஒன்று கூடுகின்றன. அன்றைய தினத்தில் இதில் நீராடுவோர் ஞானம் பெறுவதுடன், பாவங்களை நீக்கி, மோட்சத்தை அளிக்கும் சக்தி வாய்ந்ததாக நம்பப்படுகிறது. அதுமட்டுமின்றி இழந்த சொத்தை மீண்டும் பெற இத்தீர்த்தத்தில் நீராடி பவானி கங்கை அம்மனை வழிபாடு செய்ய வேண்டும் என்பது ஐதீகம்.
ஐப்பசி மாதத்தில் வளர்பிறை சப்தமியும், உத்திராட நட்சத்திரமும், ஞாயிற்றுக்கிழமையும் சேர்ந்து வரும் நாளிலும், இதே மாதத்தில் வளர்பிறை துவாதசி திதியும், உத்திரட்டாதி நட்சத்திரமும் கூடி வரும் நாளிலும் பாபவிநாச தீர்த்தத்தில் நீராடினால் விருப்பங்கள் நிறைவேறும். வைகுண்ட பதவி கிடைக்கும்.