
என் உறவினர் ஒருவர் சமீபத்தில் சேலம் அனையம்பட்டியில் உள்ள தன் குலதெய்வக் கோயிலுக்கு போயிருந்தார். பூஜைகளை முடித்த பின் தன் சகோதரருடன் அருகில் ஓடும் சுவேதா நதியைப் பார்க்க போனபோது ஆற்றங்கரை ௐரமாக ஒருவர் ஆடுகள் மேய்த்து கொண்டு இருந்தார். உறவினரின் சகோதரர் ஆடு மேய்ப்பவரை சுட்டிக் காட்டி “இவர் சில மாதங்களுக்கு முன் திருவாசகம் படிக்கவேண்டும் என என்னிடம் கேட்டார். நான் வாங்கிக் கொடுத்தேன்” என்று சொல்லி அவரை அருகில் அழைத்து “திருவாசகம் படிக்கத் தொடங்கி விட்டீர்களா என்று கேட்டார். அவர் வணங்கி தன் கையில் வைத்திருந்த மஞ்சள் நிறப் பையிலிருந்து திருவாசகப் புத்தகத்தை எடுத்துக் காண்பிக்க, பார்த்து வியந்த உறவினர் “நமச்சிவாய வாழ்க” எனச் சொல்ல அவர் உடனே “நாதன் தாள் வாழ்க “ எனறு கூறி திருவாசகத்தின் முதல் பத்து வரிகளை மடமடவென்று சொல்லியிருக்கிறார். (மாணிக்கவாசகர் இயற்றிய திருவாசகம் சிவபெருமான் மீது பாடப்பட்ட பாடல்களின் தொகுப்பு ஆகும்.)
திருவாசகம், மனிதனின் உள்ளத்தில் புகுந்துள்ள சிற்றியல்புகளை களையும் முறைகள், இறையாகிய பரம்பொருளை நாடுகிறவர்கள் பெறவேண்டிய பேரியல்புகள் பற்றிக் கூறுகிறது.
திருவாசகம் படிப்பதால் ஆன்மீக ரீதியாக பல நன்மைகள் கிடைக்கும். முற்பிறவி மற்றும் இக்காலத்தில் உள்ள வினைகள் நீங்கும், மனதுக்கு அமைதி கிடைக்கும். திருவாசகத்தை தினமும் படித்து வந்தால் இம்மை, மறுமை பலன்கள் கிடைக்கும்.
சிவ பக்தரான உறவினர், ஆடு மேய்ப்பவர் மேலும் கூறியதைக் கேட்டு மிகுந்த ஆச்சரியம் அடைந்தார் “என் வயது 68. எனக்கு குடி, சிகரெட், சுருட்டு என அனைத்து கெட்ட பழக்கங்களும் இருந்தன. இந்த தம்பி திருவாசகப் புத்தகத்தைக் கொடுத்ததிலிருந்து தினமும் ஆடு மேய்த்தபடியே ஒவ்வொரு வரியாக மனப்பாடமாக படித்து வருகிறேன். இப்போது குடி, சிகரெட்டையெல்லாம் விட்டு விட்டேன். வெற்றிலை மட்டும் போடுகிறேன். மனம் அமைதியாக இருக்கிறது” என்று சொல்லியிருக்கிறார்.
“என்ன படித்திருக்கிறீர்கள்?” எனக் கேட்க “இரண்டாம் வகுப்பு வரைப் படிச்சேன். பிறகு ஆடு மேய்க்க வந்து விட்டேன். திருவாசகத்தை எழுத்துக் கூட்டி படிக்கிறேன். நான் நிறைய தப்பு செஞ்சிருக்கேன். நான் இதைப் படிக்கலாமா? சாமி குத்தமாகி விடுமா?" என அவர் கேட்க, உறவினர், “ நீங்கள் நல்லதைத் தான் செய்கிறீர்கள்... நல்லவையே நடக்கும். அந்த ஈசனின் அருளால் தான் உங்கள் கைகளில் திருவாசகம் தவழ்கிறது. இதனைப் படிப்போரின் வாழ்வில் நன்மைகள் பெருகும், பாவங்கள் நீங்கும், மனதுக்கு அமைதி கிடைக்கும். இதை படிப்பதால் சிவபெருமானின் அருள் பரிபூர்ணமாக உங்களுக்கு கிட்டும்” என்று வணங்கி விட்டு வந்தார்.
ௐம் நமச்சிவாய.