ஆன்மிக ரீதியாக சந்திர கிரகணம், சூரிய கிரகண நாட்கள் முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன. ‘இந்த கிரகணத்தையாவது வெறும் கண்ணால் பார்க்க முடியுமா? இந்த கிரகணத்தின்போது என்ன செய்ய வேண்டும்’ என்றெல்லாம் பல கேள்விகள் மனதில் எழும். இதுகுறித்து சில விஷயங்களை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
கிரகணம் என்றால் என்ன?
கிரகணம் என்பது இயற்கையாக நடைபெறும் ஒரு நிகழ்வு. ஓரிடத்திலிருந்து வரும் ஒளியை இன்னொரு பொருள் தடுக்கும்போது அதிலிருந்து வரும் ஒளியின் அளவு குறையும். இதனை கிரகணம் என்று அறிவியல் அழைக்கிறது. கிரகணம் இரண்டு வகைப்படும். அவை சூரிய கிரகணம், சந்திர கிரகணம் ஆகும். ஆண்டுதோறும் இந்த கிரகணங்கள் அவ்வப்போது நடைபெறும். இந்த வருடம் இந்த இரண்டு கிரகணங்களும் ஒரே மாதத்தில் வருகின்றன. அதுவும் இந்த மாதத்தில்தான்.
சூரிய கிரகணம் எப்போது?: அக்டோபர் 14ம் தேதி சனிக்கிழமையன்று சூரியனுக்கும் பூமிக்கும் இடையே சந்திரன் வரவுள்ளது. அப்போது சூரிய கதிர்களை சந்திரன் மறைக்கும்போது சூரிய கிரகணம் ஏற்படும். அந்த நேரத்தில் பூமியின் சில இடங்களில் நிழல் ஏற்படும். இந்திய நேரப்படி அக்டோபர் 14ம் தேதி இரவு 11:29 மணிக்கு தொடங்கி இரவு 11:34 மணிக்கு முடிவடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெருப்பு வளைய கிரகணம்: அக்டோபர் 14ம் தேதி நிகழும் சூரிய கிரகணம் வளையம் போன்று தென்படும். அப்போது நிலவு சூரியனின் நடுப்பகுதியை ஓரளவு மறைத்து நெருப்பு வளையம் போல் தோற்றமளிக்கும். இந்த அரிய நிகழ்வை வடக்கு மற்றும் தென் அமெரிக்காவில் மட்டுமே காண முடியும். இந்தியாவில் காண முடியாது.
சந்திர கிரகணம் எப்போது?: இதேபோன்று அக்டோபர் 28 மற்றும் 29ம் தேதிகளில் சந்திரனுக்கும், சூரினுக்கும் இடையே பூமி வரும்போது பூமியின் நிழல் சந்திரன் மீது விழுந்து சந்திர கிரகணம் ஏற்படுகிறது. இது சூரியன் – பூமி – சந்திரன் ஆகியவை ஒரே நேர்க்கோட்டில் வரும்போது நிகழும்.
இந்திய நேரப்படி அக்டோபர் 28, 2023 அன்று இரவு 11:31 மணிக்கு தொடங்கி அக்டோபர் 29, 2023 அதிகாலை 3:36 மணிக்கு இந்த சந்திரகிரகணம் முடிவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.