
நினைத்தாலே முக்தி தரும் அக்னி தலமாகவும், சிவபெருமான் வீற்றிருக்கும் தலங்களிலேயே மிகச் சிறப்பு வாய்ந்ததாகவும், கிரிவலம் என்றவுடன் நினைவுக்கு வரும் திருவண்ணாமலை திருத்தலம் பற்றி பலரும் அறியாத சில ரகசியங்களை இந்தப் பதிவில் தெரிந்து கொள்வோம்.
* திருவண்ணாமலை திருத்தலத்தில் திருப்புகழ், கந்தர் அனுபூதி, திருவம்மானை, திருவெம்பாவை அருணாச்சல அஷ்டகம் போன்ற புனித நூல்கள் பிறந்தன.
* பிரம்மன் மற்றும் திருமாலின் ஆணவத்தை ஈசன் அழித்த தலமாக திருவண்ணாமலை உள்ளது.
* சிவபெருமான், பார்வதி தேவிக்கு தனது பாதியை தந்து ஆட்கொண்ட திருத்தலம்.
* கார்த்திகை தீபத் திருநாளின் புராண நிகழ்வு நடைபெற்ற திருத்தலமாகப் போற்றப்படுவது திருவண்ணாமலைதான்.
* சைவ சமயக் குரவர்களான நால்வர் அப்பர், சுந்தரர், திருஞானசம்பந்தர் மற்றும் மாணிக்கவாசகர் சிவபெருமானின் புகழ் பாடிய தலம்.
* சிவகங்கை தீர்த்தம், பிரம்ம தீர்த்தம் என்ற இரண்டு பெரிய திருக்குளங்கள் திருவண்ணாமலையில் உள்ளது.
* திருவண்ணாமலை கோயிலில் 36 மண்டபங்கள், ஆயிரம் தூண்கள் கொண்ட ஆயிரங்கால் மண்டபம் 142 சன்னிதிகள் உள்ளன.
* ஆயிரங்கால் மண்டபத்தின் அடியில் பாலரமணர் தவம் செய்த பாதாள லிங்கம் மற்றும் 22 விநாயகர் திருச்சிலைகள் திருவண்ணாமலை கோயிலில் உள்ளது.
* திருவண்ணாமலை திருக்கோயிலில் உள்ள முருகப்பெருமான் ‘இளையனார்’ என்று அழைக்கப்படுகிறார்.
* முருகப்பெருமான் அருணகிரிநாதருக்குக் காட்சி தந்த திருவண்ணாமலையில் முருகப்பெருமாள் மூன்று இடங்களில் காட்சி தருகிறார்.
* வளைகாப்பு மண்டபத் தூணில் கம்பத்திளையனார் என்ற பெயரில் காட்சி தருகிறார்.
* சிவாலயங்களிலேயே காமதகனம் நடைபெறும் ஒரே சிவாலயம் திருவண்ணாமலை மட்டும்தான். அதேபோல், அருணகிரிநாதருக்கு விழா எடுக்கும் ஒரே தலமாகவும் திருவண்ணாமலை திகழ்கிறது.
* திருவண்ணாமலையை கிரிவலம் வரும்போது ஒவ்வொரு இடத்திலும் நின்று பார்த்தால் 27 வகையான தரிசனங்களைக் காண முடியும்.
* கார்த்திகை மகா தீப தரிசனத்தை காண்பவர்களுக்கு 21 தலைமுறைக்கு புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
* திருவண்ணாமலையின் கிழக்கே இந்திர லிங்கம், தென்கிழக்கில் அக்னி லிங்கம், தென்மேற்கில் நிருதி லிங்கம், தெற்கில் எம லிங்கம், மேற்கில் வருண லிங்கம், வடமேற்கில் வாயு லிங்கம், வடக்கில் குபேர லிங்கம், வடகிழக்கில் ஈசானிய லிங்கம் ஆகிய எட்டு வகையான லிங்கங்களை கிரிவலப் பாதையில் வலம் வந்து தரிசனம் செய்யலாம்.
* திருவண்ணாமலை கிருத யுகத்தில் அக்னி மலையாகவும், திரேதா யுகத்தில் மாணிக்க மலையாகவும் துவாபர யுகத்தில் தாமிர மலையாகவும் தற்போது கலி யுகத்தில் கல் மலையாகவும் திகழ்வதாகப் புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வளவு சிறப்பு வாய்ந்த திருவண்ணாமலையில் கிரிவலம் வந்து சாமி தரிசனம் செய்து சிவபெருமானின் பேரருளைப் பெறுவோம்.