ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டத்தில் 1675ம் ஆண்டு பிறந்தவர் கோவிந்தன். இவர் இளம் பருவத்திலேயே சாஸ்திரங்கள், வேதங்கள், பாகவதம், இசை, பரத நாட்டியம் பயின்று சிறந்து விளங்கினார். சிறிது காலம் மண வாழ்க்கைக்குப் பின்னர் துறவறம் பூண்டார். வாரணாசியில் இருந்த சிவராம தீர்த்தர் என்ற மகானை சந்தித்து தீட்சை பெற்றார். அதன் பிறகு இவர் நாராயண தீர்த்தர் என்று அழைக்கப்பட்டார்.
குருவின் ஆணையை ஏற்று தென்னகத்திற்கு தீர்த்த யாத்திரை புறப்பட்டு வேங்கடம் வந்தடைந்தார். அங்கே அவருக்கு வயிற்று வலி உண்டானது. அந்த வலி நாளுக்கு நாள் அதிகரித்தது. இருப்பினும் வலியை பொறுட்படுத்தாமல் தன்னுடைய யாத்திரையைத் தொடர்ந்தார். ஒரு கட்டத்தில் தஞ்சாவூர் வந்து சேர்ந்தபொழுது இருள் சூழ்ந்ததால் அங்கிருந்த விநாயகர் கோயிலில் தங்கி, மறுநாள் காலை யாத்திரையை தொடர முடிவு செய்தார்.
அதேநேரம் நாராயண தீர்த்தருக்கு ஏற்பட்ட வயிற்று வலி கொஞ்சம் கூட குறைந்தபாடில்லை. வலியைப் பொறுக்க முடியாமல் வேங்கடவனின் நாமத்தை சொல்லியபடி கண்ணயர்ந்தார். அவரது கனவில் தோன்றிய வேங்கடவன், ‘மறுநாள் கண் விழித்துப் பார்க்கும்போது முதலில் தென்படும் விலங்கை பின்தொடர்ந்து செல்’ என்று கூறி மறைந்தார். காலையில் நாராயண தீர்த்தர் கண் விழித்தபோது அவரது கண்ணில் ஒரு வெள்ளை பன்றி தென்பட்டது. இறைவனின் கட்டளைப்படி அந்த வெள்ளைப் பன்றியை பின்தொடர்ந்தார் நாராயண தீர்த்தர்.
பூபதி ராஜபுரம் என்ற ஊரை அடைந்ததும் அங்கிருந்த பெருமாள் கோயிலின் உள்ளே சென்று வெள்ளைப் பன்றி மறைந்தது. இதைக்கண்டு திகைத்துப்போன நாராயண தீர்த்தர் வந்தது வராக பெருமாளே என்பதை உணர்ந்து கைகூப்பி வணங்கினார். அந்த நொடியே அவரது வயிற்று வலி காணாமல் போனது. அந்த ஆலயத்தில் கோயில் கொண்டிருந்த வேங்கடேச பெருமாளின் அருளால் ஈர்க்கப்பட்ட நாராயண தீர்த்தர் அங்கேயே தங்கினார். தினமும் கண்ணனை போற்றிப் பாடும் பஜனைகளை செய்து வந்தார்.
கோகுலத்தில் கண்ணன் நடத்திய லீலைகளில் ஒன்றான உறியடியை திருவிழாவாக ஆண்டுதோறும் நடத்தினார். வரகூர் வேங்கடேச பெருமாள் ருக்மிணி சத்தியபாமா சமேதராகத் தோன்றி, தன்னுடைய லீலைகளை கீர்த்தனங்களாகப் பாடும்படி நாராயண தீர்த்தருக்கு ஆணையிடவும் செய்தார். அதன் காரணமாக தோன்றியதுதான், ‘கிருஷ்ண லீலா தரங்கிணி.’
இந்த வரகூரில் உறியடித் திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெறுகிறது. ஒவ்வொரு வருடமும் காயத்ரி ஜப தினத்தன்று உறிமரம் நடுவது என்ற நிகழ்ச்சியுடன் இது தொடங்குகிறது. கோகுலாஷ்டமி அன்று இரவு 12 மணிக்கு ஸ்ரீ கிருஷ்ணர் ஜனனமும் அடுத்த நாள் காலை 11 மணியளவில் ஸ்ரீ கிருஷ்ணர் வெண்ணைத்தாழியுடன் அழகிய பல்லக்கில் வீதி உலா வருதலும், மாலையில் ஊர் எல்லையில் காளிந்தீ நதி என்ற கடுங்காலாற்றங்கரையில் ஸ்ரீ கிருஷ்ணருக்கு திருமஞ்சனமும் அன்று இரவு 11 மணிக்கு அலங்காரத்துடன் புறப்பட்டு உறிமரத்தின் அருகில் உள்ள கொட்டகையில் எழுந்தருளி உறியடி மற்றும் வழுக்கு மரம் ஏறுதல் ஆகிய நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன. வெண்ணைத்தாழி கிருஷ்ணர் திருவீதி உலா வரும்போது ஸ்ரீ கிருஷ்ணன் அணைத்து பிடித்து இருக்கும் தங்கம் வெள்ளி குடங்களில் வெண்ணை இட்டு மகிழ்கிறார்கள் பக்தர்கள். ஸ்ரீகிருஷ்ணரின் முன்னால் ஸ்ரீ கிருஷ்ண லீலா தரங்கிணி பாடப்படுகிறது.