உயிரோட்டமான முருகப்பெருமான் அருளும் திருத்தலம்!

Uyirottamaana Murugaperuman Arulum Thiruthalam
Uyirottamaana Murugaperuman Arulum Thiruthalamhttps://www.micoope.com
Published on

முருகன் என்றதும் நம் நினைவிற்கு வருவது அறுபடை வீடுகள்தான். அதைத் தவிர, இன்னும் நிறைய பழைமையான மற்றும் சக்தி வாய்ந்த முருகன் கோயில்கள் இருந்தாலும், அவை குறித்தான ஆச்சரியத் தகவல்கள் பலருக்கும் அவ்வளவாகத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அப்படி அதிகம் அறிப்படாத ஒரு முருகன் திருத்தலம் குறித்த விஷயங்களை இந்தப் பதிவில் காண்போம்.

நாகப்பட்டினம் மாவட்டம், எட்டுக்குடி என்னும் திருத்தலத்தில் அமைந்துள்ளது அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். இக்கோயில் 14ம் நூற்றாண்டில் வாழ்ந்த அருணகிரிநாதரின் பாடல்கள் மூலமாகவே பிரபலமடைந்தது. இத்தலம் காவடி எடுக்கும் திருவிழாவிற்கு மிகவும் பெயர் போனதாகும். இங்குள்ள முருகன் வள்ளி, தெய்வானையுடன் மயில் மேல் அமர்ந்து காட்சி தருகிறார். இந்த மூவரும் அமர்ந்திருக்கும் மயிலுக்கு தரையிலிருந்து ஆதாரம் அதன் இரண்டு கால்கள் மட்டுமே என்பது மிகவும் ஆச்சர்யமாக உள்ளது.

எட்டுக்குடி கோயிலில் உள்ள தனித்துவம் என்னவென்றால், பெரும்பாலான கோயில்களில் முருகன் அமர்ந்திருக்கும் மயிலானது வலது பக்கம் திரும்பியிருக்கும். ஆனால், எட்டுக்குடியில் மட்டும் மயில் இடது பக்கம் திரும்பியிருக்கும். இது கந்த புராணத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது. எட்டுக்குடி முருகன், சிக்கல் முருகன், எண்கண் முருகன் ஆகிய மூன்று சிலையையும் ஒரே சிற்பியே செதுக்கினார் என்பது கூடுதல் தகவல்.

ஒரு சமயம் நாகப்பட்டினத்தின் அருகில் சிற்பி ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் அழகிய முருகன் சிலை ஒன்றை செதுக்கினார். அப்போது ஆட்சியில் இருந்த பராந்தக சோழன் அந்தச் சிலையின் அழகில் மயங்கி இதுபோன்று இன்னொரு சிற்பத்தை அந்த சிற்பி வடித்துவிட கூடாது என்பதற்கு அவரது இரு கைகளில் உள்ள கட்டை விரலை வெட்டி விடுகிறான். இதனால் வருத்தமடைந்த சிற்பி அருகில் உள்ள கிராமத்திற்கு சென்று விடுகிறார். சிற்பி மிகவும் கடுமையாக முயற்சித்து இன்னொரு சிலையை வடிக்கிறார். அதை அந்த ஊரை ஆண்ட குறுநில மன்னன் பார்க்கிறான். அந்த சிலையில் ஒளி வீசுகிறது. மயிலுக்கு உயிர் வந்து பறந்து செல்கிறது. அதை பார்த்த அரசன் அதை ‘எட்டிப்பிடி’ என்று ஆணையிடுகிறான். அந்த மயிலை காவலர்கள் எட்டிப்பிடிக்கும்போது மயிலின் கால் சிறிதளவு உடைந்து விடுகிறது. பறந்துக்கொண்டிருந்த மயில் அந்த இடத்திலேயே சிலையாக மாறிவிடுகிறது.

இதையும் படியுங்கள்:
வலிகளைக் கண்டிக்கும் நொச்சி இலையின் மருத்துவ குணங்கள் பற்றி தெரியுமா?
Uyirottamaana Murugaperuman Arulum Thiruthalam

இந்த, ‘எட்டிப்பிடி’ என்னும் வார்த்தைதான் நாளடைவில், ‘எட்டுப்பிடி’ என்றும் பின்பு எட்டுக்குடி என்றும் ஆனது. அதுவே பிற்காலத்தில் ஊரின் பெயராக மாறியது. அந்த சிற்பி வடித்த இன்னொரு சிலையை எண்கண் என்னும் இடத்தில் வைத்தார். சிற்பி முதலில் வடித்த சிலையை சிக்கலிலும், இராண்டாவது வடித்த சிலையை எட்டுக்குடியிலும் வைத்தார். இந்த மூன்று தலங்களில் உள்ள முருகன் சிலையும் ஒரே முகச்சாயலை கொண்டிருக்கும்.

எட்டுக்குடி முருகன், பக்தர்கள் தன்னை எந்த கோலத்தை நினைத்து வழிபடுகிறார்களோ அந்தக் கோலத்திலேயே அவர்களுக்குக் காட்சி தரக்கூடியவர். குழந்தையாக நினைத்துப் பார்த்தால் குழந்தை வடிவிலும், இளைஞனாக நினைத்து பார்த்தால் இளைஞன் வடிவிலும், வயதானவராக நினைத்துப் பார்த்தால் வயோதிக தோற்றத்திலும் உயிரோட்டமாகக் காட்சி தருகிறார்.

சித்திரா பௌர்ணமியன்று இக்கோயிலில் விசேஷ வழிபாடு உண்டு. கோயிலின் முன்பு அமைந்திருக்கும் சரவண பொய்கையின் நீரில் கைப்பட்டாலே பாவம் தீரும் என்று நம்பப்படுகிறது. குழந்தைகளின் பயந்த சுபாவம் நீங்க, திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறப்பாக இருக்க இந்த எட்டுக்குடி முருகனை வேண்டினால் நிறைவேறும் என்று நம்பப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com