வரம் தருவாய் வரலட்சுமி தாயே!

வரம் தருவாய் வரலட்சுமி தாயே!
Published on

ஷ்ட ஐஸ்வர்யங்களையும் அள்ளி வழங்கும் ஸ்ரீ மகாலட்சுமியை குறித்துதான் வரலட்சுமி பூஜை செய்யப்படுகிறது. வரலட்சுமி விரதம் கொண்டாடப்படும் நாள் அன்றுதான் பாற்கடலில் இருந்து ஸ்ரீ மகாலட்சுமி தோன்றியதாகப் புராணங்கள் கூறுகின்றன.

இந்த மகாலட்சுமியை தனலட்சுமி, தானிய லட்சுமி, தைரிய லட்சுமி, ஜெயலட்சுமி, வீரலட்சுமி, சந்தான லட்சுமி, கஜலட்சுமி, வித்யாலட்சுமி என்று அஷ்ட லட்சுமிகளாக வழிபடுகிறோம். இந்த எட்டு லட்சுமிகளையும் மனதார வேண்டிக்கொண்டு பூஜை செய்தால், இல்லத்தில் எப்பொழுதும் செல்வம் நிறைந்து, நிலைத்து இருக்கும் என்பது ஐதீகம்.

சிரவண மாதம் எனப்படும் ஆடி அல்லது ஆவணி மாதத்தில் பௌர்ணமிக்கு முன்பாக வரும் வெள்ளிக்கிழமையில் வரலட்சுமி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. சுமங்கலிகள் அனுஷ்டிக்க வேண்டிய சிறப்பான விரதம் இது. இதை செய்வதன் மூலம் சுமங்கலித்துவம் வளரும் குடும்ப நலன் பெருகும்.

வரலட்சுமி பூஜை செய்யும் முறை எப்படி வழக்கத்தில் வந்தது என்பதைப் பார்ப்போம்.

மகத நாட்டைச் சேர்ந்த சாருமதி என்னும் பெண் மிகுந்த பக்தி உள்ளவளாகத் திகழ்ந்தாள். அவள் தனது கணவர், மாமனார், மாமியார் ஆகியோரை மனித வடிவில் பாராமல் தெய்வமே அவர்கள் உருவில் வந்திருப்பதாகக் கருதி ஆத்மார்த்தமாக பணிவிடைகளைச் செய்து வந்தாள். சாருமதியின் இயற்கையான இந்த சுபாவம், ஸ்ரீ மகாலட்சுமிக்கு மிகவும் சந்தோஷத்தைக் கொடுத்தது. ஒரு நாள் மகாலட்சுமி தாயார் சாருமதியின் கனவில் தோன்றி, ஸ்ரீ வரலட்சுமி ரூபத்தில் அருள்புரிந்தாள்.

அதோடு, ‘என்னை துதித்து விரதம் மேற்கொள்பவர்களின் இல்லத்தில் நான் நிரந்தரமாக வசிப்பேன்’ என்று அன்னை கூறினாள். வரலட்சுமி பூஜையைப் பற்றியோ விரத முறையைப் பற்றியோ எதுவுமே அறியாத சாருமதி, அதை எப்படிச் செய்ய வேண்டும் என அன்னையிடம் கேட்டபொழுது, அந்த விரதத்தை எப்படி மேற்கொள்ள வேண்டும் என்று தாயார் விரிவாகக் கூறினாள். அதை சாருமதியும் உள்வாங்கிக் கொண்டு அந்த விரதத்தை மேற்கொண்டு செய்து வரலானாள். இப்படி பிறந்ததுதான் இந்த வரலட்சுமி விரதமும், அதற்குண்டான பூஜையும்.

திருமணமான பெண்கள் தங்கள் திருமணத்தை அடுத்து வரும் வரலட்சுமி விரதத்தில் இருந்து, ஒவ்வொரு வருடமும் இந்த பூஜையைச் செய்ய வேண்டும். சிலர் இல்லங்களில் இந்த பூஜை செய்யும் வழக்கம் இல்லாமல் இருக்கலாம். இந்த பூஜை செய்யும் வழக்கம் உள்ளவர்கள், தவறாமல் இதை மேற்கொள்ள வேண்டும். அந்த நாளில் பெண்களுக்கே உண்டான வீட்டு விலக்கு இருந்தால், அதைத் தொடர்ந்து வரும் அடுத்த வெள்ளிக்கிழமையில் இந்த பூஜையைச் செய்யலாம். இந்த பூஜையில் வைக்கப்படும் நோன்பு சரடானது ஒரு ரக்ஷையாக பாவிக்கப்படுகிறது. பூஜை முடிந்த பிறகு, திருமணம் ஆன பெண்கள் கணவன் கைகளால் அந்த ரக்ஷையை வலது மணிக்கட்டில் கட்டிக்கொள்ள வேண்டும். சிறு பெண்களுக்கு தாயாரோ அல்லது வீட்டில் முதிர்ந்த சுமங்கலிகள் இருந்தாலோ அவர்கள் கையால் கட்டிக் கொள்ளலாம்.

பூஜை முறையை எல்லோராலும் மிகவும் விரிவாகச் செய்ய முடியாவிட்டாலும், ஈடுபாட்டோடு செய்தல் மிகவும் முக்கியம்.  பூஜை செய்வதோடு நிறுத்தி விடாமல், அன்னைக்கு ஆரத்தி எடுத்து, சுமங்கலிகளுக்கு வெற்றிலை பாக்கு, பழம், ரவிக்கை துண்டு மற்றும் மங்கலப் பொருட்களை பிரசாதமாகக் கொடுக்க வேண்டும்.

விரத தினத்தன்று மகாலட்சுமி வரலாறு, மகாலட்சுமி சம்பந்தப்பட்ட பாடல்கள் முதலியவற்றைப் பாடி, ‘வரலட்சுமியே எங்கள் வீட்டில் நிரந்தரமாகக் குடியேறி எல்லா ஐஸ்வர்யங்களையும் அருள வேண்டும்’ என்று மனம் உருக வேண்டிக்கொள்ள வேண்டும். பூஜைக்குப் பயன்படுத்திய பச்சரிசி, தேங்காய் முதலியவற்றை, பாயசம், சர்க்கரைப் பொங்கல் போன்ற இனிப்பு கலந்த பண்டங்களாகச் செய்து சாப்பிட வேண்டும்.  உப்பு சேர்த்த பண்டங்கள் செய்து, சாப்பிடக் கூடாது.

இந்த பூஜை செய்வதால் என்ன பயன்? இந்த விரதத்தை கடைபிடிக்கும் குடும்பத்தில் உள்ள குழந்தைகளுக்கு, நல்ல ஞானம் கிடைக்கும். விரும்பிய நலன்கள் எல்லாமே நல்லபடியாக அமையும்.  சுமங்கலிப் பெண்களுக்கு, சுமங்கலி பாக்கியம் நிலைக்கும். இதில் பங்கேற்கும் கன்னிப் பெண்களுக்கு நல்ல கணவர் அமைவார். குடும்ப நலன் பெருகும். வரலட்சுமி விரதம் மேற்கொள்ளும் சகோதரிகள், பூஜை முடியும் வரை எலுமிச்சம் பழ ஜூஸ், மோர் போன்ற புளிப்பு சேர்ந்த பானங்கள் எதையும் அருந்தக்கூடாது என்பது மிகவும் முக்கியம். அதுபோல், புளிப்பு கலந்த பழங்களையும் சாப்பிடக்கூடாது.

பலவிதமான மேன்மைகளையும் நன்மைகளையும் அருளும் இந்த வரலட்சுமி பூஜையை எல்லோரும் முழு மனதுடன் அனுசரித்து, அஷ்ட லட்சுமிகளின் கருணைக்கு பாத்திரமாக வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com