நகைச்சுவையோடு ஆன்மிகம் வளர்த்த வாரியார் சுவாமிகள்!

நகைச்சுவையோடு ஆன்மிகம் வளர்த்த வாரியார் சுவாமிகள்!
Kaushik S

மிழகத்தில் எத்தனையோ ஆன்மிக சொற்பொழிவாளர்கள் உள்ளனர். ஆனால்,  ஆன்மிக விஷயங்களை நகைச்சுவையோடு மக்களுக்குக் கொண்டு செல்வது என்பது மிக அரியக் கலை. அதுவும் ஆறு வயது சிறுவர்கள் முதல் அறுபது வயதைக் கடந்தவர் வரை எல்லோரும் மனம் விட்டுச் சிரிக்கும்படி உரையாற்றுவது மிகவும் கடினம்தான் என்றே கூற வேண்டும். நமது தமிழகத்தில், 'அருள் மொழி அரசு',  'திருப்புகழ் ஜோதி' என்று பட்டம் பெற்ற திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்தான் அப்படிப்பட்ட சொற்பொழிவாளர்.

1906ம் ஆண்டு ஆகஸ்ட் 25ம் நாள் மல்லையதாசனுக்கும் கனகவல்லி அம்மைக்கும் வேலூர் மாவட்டம், காங்கேயநல்லூர் கிராமத்தில் பிறந்த கிருபானந்த வாரியார் சமயம், இலக்கியம் மட்டுமின்றி, பேச்சுத் திறன், எழுத்துத் திறன், இசை போன்ற பல துறைகளிலும் ஆழ்ந்த புலமை பெற்றவர். பள்ளிக்கே செல்லாத இவர், தனது தந்தையிடமே அனைத்துக் கலைகளையும் கற்றுத் தேர்ந்தார். இவர் சிறந்த முருக பக்தர். அதனாலேயே திருமுருக கிருபானந்த வாரியார் என்று அனைவராலும் அழைக்கப்பட்டார். தினமும் ஆன்மிக சொற்பொழிவுகளை நிகழ்த்துவதையே தவமாகக் கொண்டு வாழ்ந்தவர். எட்டு வயதிலேயே கவி பாடும் ஆற்றலைப் பெற்ற இவர், தன்னுடைய 12ம் வயதிலேயே பதினாயிரம் பண்களை மனப்பாடம் செய்தவர்.  இவர் இயற்றிய வெண்பாக்கள் ஆயிரத்துக்கும் மேல் இருக்கும். சிறந்த சங்கீத ஞானம் வாய்க்கப்பெற்ற அவர் கதாகாலட்சேபம் செய்யும்பொழுது திருப்புகழ், தேவாரம், திருவாசகம், திருவருட்பா  முதலான தோத்திரப் பாடல்களை இன்னிசையுடன் பாடுவார்.

இவருடைய பிரசங்கங்கள் பெரும்பாலும் பேச்சுத் தமிழிலேயே அமைந்திருந்த காரணத்தால் பாமரர்களும் அவர்பால் ஈர்க்கப்பட்டு, அவருடைய பேச்சைக் கேட்க ஆர்வத்துடன் ஓடோடி வந்தனர்.  வாரியார் சுவாமிகள் பாமர மக்களும் புரிந்து கொள்ளூம் வண்ணம் 500க்கும் மேற்பட்ட ஆன்மிக மணம் கமழும் கட்டுரைகளும், 150க்கும் மேற்பட்ட நூல்களும் எழுதியுள்ளார்.

'கைத்தல நிறைகனி அப்பமொடவல் பொரி' என்ற விநாயகர் துதிப்பாடலை கேட்டாலோ அல்லது எங்கேயாவது படித்தாலோ திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்தான் நினைவுக்கு வருவார்.  வாரியார் சுவாமிகள் கோடிக்கணக்கான தமிழர் உள்ளங்களில் நற்பண்புகளையும், நன்னெறிகளையும் வளர்த்தவர். பக்திக்கு ஒழுக்கம் முக்கியம் என்று வலியுறுத்திய இவர், எளிமையின் வடிவமாகத் திகழ்ந்தார். ஆன்மிக சொற்பொழிவாற்றும்போது இடையிடையே தரமான நகைச்சுவையைக் கலந்து எல்லோரையும் மனம் விட்டு சிரிக்கவும் சிந்திக்கவும் வைப்பதில் வல்லவர்.

ஆன்மிக சொற்பொழிவுகளின்போது வாரியார் சுவாமிகள் தனது கழுத்தில் போடப்படும் மாலையைக் கழற்றாமல் அணிந்தபடியே உரையாற்றுவது வழக்கம். ஒரு முறை திருவாரூரில் சொற்பொழிவு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது ஒரு அன்பர் வாரியார் சுவாமிகளுக்கு தனது கையால் ஒரு மாலை போட ஆவல் கொண்டு மேடை அருகிலேயே நின்று கொண்டிருந்தார். ஆனால், ஏற்கெனவே வாரியார் சுவாமிகளின் கழுத்தில் மாலை இருந்ததால் தனது கையில் இருந்த மாலையை அணிவிக்காமல் தயக்கத்துடன் கையில் வைத்தபடியே நின்று கொண்டிருந்தார். இதனைப் புரிந்துகொண்ட சுவாமிகள், தனது கழுத்தில் இருந்த மாலையைக் கழற்றி தனது அருகில் அமர்ந்திருந்த அன்பர் கழுத்தில் போட்டு விட்டார்.  உடனே மாலையுடன் காத்திருந்த அந்த அன்பர் மேடையேறி வாரியார் சுவாமிகள் கழுத்தில் மாலையைப் போட்டார். உடனே வாரியார் சுவாமிகள் கூட்டத்தைப் பார்த்து நகைச்சுவயாக, "எப்போதுமே நம்மிடம் இருப்பதை யாருக்காவது கொடுத்தால்தான் அடுத்தவர்கள் நமக்குக் கொடுப்பார்கள்" என்றார். அவர் நகைச்சுவை பேச்சை ரசித்து கூட்டத்தில் பெரும் சிரிப்பலைகள்!

ஒரு கோயிலில் திருவிளையாடல் புராணம் சொற்பொழிவு நிகழ்த்திக் கொண்டிருந்தார். சொற்பொழிவுக்கு நடுவே திடீர், திடீரென்று அவையோரைப் பார்த்துக் கேள்விகள் கேட்பது அவர் வழக்கம். சரியாக விடை சொல்பவர்களுக்கு புத்தகங்கள் பரிசளிப்பார். அன்று சிவபெருமானின் பெருமைகளை எடுத்துக்கூறிய வாரியார் சுவாமிகள் திடீரென்று ஒரு சிறுவனைப் பார்த்து, "தம்பி! முருகனின் அப்பா பெயர் என்ன?" என்றார். அது திருவிளையாடல் சினிமா வந்த நேரம். அதில் நடிகர் சிவாஜி கணேசன் முருகனுக்கு அப்பாவாக நடித்திருபார். அந்த சினிமாவைப் பார்த்திருந்த அந்தச் சிறுவன், ‘சிவாஜி’ என்று பதில் கூற, எல்லோரும் 'கொல்'லென்று சிரித்து விட்டனர். வாரியார் சுவாமிகள் அவர்களை அடக்கி விட்டு, "அவன் சரியாத்தானே சொல்லியிருக்கான்? நாம நேருஜி, காந்திஜி என்று மரியாதையாகத்தானே சொல்வது வழக்கம். அதான் முருகனின் தந்தை சிவாவை அவன் சிவாஜின்னு சொல்லியிருக்கான்!" என்று கூற, கூட்டம்  மகிழ்ச்சியுடன் இந்த நகைச்சுவையை ரசித்து ஆர்ப்பரித்தது.

வாரியார் சுவாமிகள் ஒருமுறை இராமாயண சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்தபோது கூட்டத்தில் சிலர் எழுந்து வெளியே செல்லத் தொடங்கினர்.  அவர்களைப் பார்த்து வாரியார் சுவாமிகள், "இராமாயணத்தில் அனுமனை 'சொல்லின் செல்வர்' என்ற பட்டப் பெயரிட்டு குறிப்பிடுவார்கள். எனக்கும் 'சொல்லின் செல்வர்' என்று பட்டம் கொடுத்திருக்கிறார்கள். அது ஏன் என்று இன்றுதான் எனக்குத் தெளிவாக விளங்கியது” என்று கூறி, சிறிது இடைவெளி விட்டு 'நான் சொல்லின் அவர் செல்வர்' அதனால்தான் இந்தப் பட்டம் கொடுத்திருக்கிறார்கள் என்று வெளியேறுகிறவர்களைப் பார்த்துக் குறிப்பிட்டார். கூட்டத்தில் ஒரே சிரிப்பலை. அதன் பிறகு தாங்கள் அமர்ந்திருந்த இடத்தை விட்டு ஒருவரும் எழுந்திருக்காமல் அவரது சொற்பொழிவைக் கேட்டனர்.

வாரியார் சுவாமிகள் திருமணம் ஒன்றுக்கு தலைமை தாங்க வந்திருந்தார். அதே திருமணத்துக்கு நடிகவேள் எம்.ஆர்.ராதாவும் வந்திருந்தார். இருவரும் சுவாரசியமாகப் பேசிக்கொண்டிருக்கும்போது பேச்சுக்கு இடையே எம்.ஆர்.ராதா கிண்டலாக, "நீங்க முருகனுக்கு ஆறு தலைகள் இருக்குன்னு சொல்றீங்க. அப்போ ராத்திரி எந்தப் பக்கமாகப் படுத்துத் தூங்குவார்?" என்று கேட்டார்.  வாரியார் சுவாமிகள் அவரைப் பார்த்து, "கொஞ்சம் இருங்க!" என்று சொல்லிவிட்டு மணப்பெண்ணின் பெற்றோரைக் கூப்பிட்டார்.

"நேற்று ராத்திரி தூங்கினீங்களா?" என்றார்.

"இந்தத் திருமணம் நல்லபடியா முடியணுமே என்கிற நினைப்பில் நாங்க பல நாட்களா தூங்கவில்லை" என்றார்கள் அவர்கள்.

உடனே வாரியார் சுவாமிகள் எம்.ஆர்.ராதா பக்கம்  திரும்பி, "கேட்டீங்களா? ஒரு பெண் கல்யாணத்தை நடத்தி வைக்க நினைத்த இவங்களுக்கே தூக்கம் வரவில்லை.  கோடானுகோடி பக்தர்களைக் காக்கும் ஆறுமுகப் பெருமான் எப்படித் தூங்குவார்?" என்றார். இதற்கு பதிலுரைக்க முடியாமல் திகைத்துப் போனார் எம்.ஆர்.ராதா. இதைப்போல தன்னிடம் கிண்டலாகக் கேள்வி கேட்பவர்களுக்கும் அவர்களும் ரசிக்கும்படி தடாலடியாக நகைச்சுவையாக பதில் கூறுவது வாரியார் சுவாமிகள் வழக்கம்.

வாரியார் சுவாமிகளுக்கு அண்ணாமலைப் பல்கலைக் கழகம், ‘டாக்டர்’ பட்டம் கொடுத்தது. காஞ்சி மஹாபெரியவர் அவரை, 'சரஸ்வதி கடாக்ஷமிர்தம்' என்று பாராட்டினார். திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளின் 117வது பிறந்த நாள் இன்று!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com