வெள்ளெருக்கு என்னும் தாவரம் கிராமங்களில் சர்வ சாதாரணமாக வளர்ந்து கிடக்கும் புதர் வகை செடியாகும். இதில் நீல நிறம், வெள்ளை நிறம், நீலமும், வெள்ளையும் கலந்த நிறம் என்று 9 வகையான பூக்கள் பூப்பதாகச் சொல்லப்படுகிறது. அதில் நீல எருக்குக்கு, ‘ராமர் எருக்கு’ என்று கூட பெயர்கள் சொல்வதுண்டு. எருக்கம்பூ மாலை பிள்ளையாருக்கு மிகவும் உகந்ததாகும். பிள்ளையார் சதூர்த்தியன்று எருக்கம்பூ இல்லாமல் பிள்ளையாருக்கு பூஜை செய்ய மாட்டார்கள். இந்த எருக்கம்பூ சிவபெருமானுக்குமே உகந்ததாகும்.
மூலிகைகளிலேயே அதிக சக்தி வாய்ந்த வெள்ளெருக்கை ‘தேவ விருட்சம்’ என்று கூறுவார்கள். இந்த வெள்ளெருக்கு சங்கையே பஸ்பமாக்கும் சக்தி கொண்டது. இதில் இருக்கும் இன்னொரு அதிசயம் என்னவென்றால், பொதுவாக செடிகள் தண்ணீர் இன்றி வாடிவிடும். ஆனால், வெள்ளெருக்கு செடி 12 ஆண்டுகள் வரை தண்ணீர் இன்றி செழிப்பாக வாழுமாம். இது சூரிய ஒளியிலிருந்து தண்ணீரை கிரகித்து வாழக்கூடியது என்று கூறுகிறார்கள். இந்த வெள்ளை எருக்கை மருத்துவத்திற்கு பெரிதும் பயன்படுத்தினர். யானைக்கால் வந்தவர்களுக்கு இது பெரிதும் பயன்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
வெள்ளெருக்கில் பிள்ளையார் செய்து வீட்டில் வைத்து வழிப்படுவது விசேஷ பலன்களைக் கொடுக்கும். அதிலும் வெள்ளெருக்கு பிள்ளையார் செய்யும்போது கவனிக்க வேண்டியது, தண்டுப் பகுதியிலிருந்து செய்யப்படும் பிள்ளையார் சீக்கிரம் உதிர்ந்து போய்விடும். வெள்ளெருக்கின் வேர்ப்பகுதியிலிருந்து செய்யப்படும் பிள்ளையார் தெய்வீக சக்தியும், ஆகர்ஷன சக்தியும் கொண்டவராக விளங்குவார் என்று கூறப்படுகிறது. இந்த வெள்ளெருக்கு பிள்ளையாரை 3 அங்குலத்திற்கு மேல் வைத்து பூஜிப்பது நல்லது.
ஆகர்ஷன சக்திகள் எட்டு வகைப்படும். அதில் தனாகர்ஷன சக்தி இந்த வெள்ளெருக்கு பிள்ளையாரை வைக்கும்போது கிடைக்கிறது. இதனால் தனம், செல்வசெழிப்பு வந்து சேரும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வெள்ளெருக்கு பிள்ளையாரை வீட்டின் பூஜையறையில் வைத்தும், தொழில் செய்யும் இடத்திலும் வைத்து தினமும் வழிப்பட்டு வந்தால் செல்வச் செழிப்பு பெருகும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. பில்லி, சூன்யம், துர்சக்திகள், கண் திருஷ்டி விலகும்.
இந்த வெள்ளெருக்கு பிள்ளையாரை வீட்டில் பிரதிஷ்டை செய்வதற்கும் சில முறைகள் இருக்கின்றன. ஒரு வெள்ளிக்கிழமையில், ராகு கால நேரத்தில் சந்தனம், மஞ்சளை தண்ணீர் விட்டு குழைத்து பிள்ளையார் மீது தடவி நிழலில் காயவைத்து எடுத்து வந்து பின்பு சந்தனம், குங்குமம் இட்டு பூஜையறையில் வைத்து தீப தூபம் காட்ட வேண்டும். முதல் முறையாக பிரதிஷ்டை செய்பவர்கள்,
‘ஓம் நமோ ஹேரம்ப மதமோதித ஹஸ்தி முகாய
மம ஸ்வர்ண ப்ராப்தம் குருகுரு ஸ்வாஹா!’
எனும் கணபதி மந்திரத்தை 108 முறை சொல்வது நல்லது.
அப்போது வீட்டில் அகல் விளக்கை ஏற்றி பூஜை செய்வது நல்லது. தொடர்ந்து முயற்சி செய்தும் நடக்காத காரியங்களும் வெள்ளெருக்கு பிள்ளையாரை வழிபட்டால் நிச்சயமாக நடக்கும். இது தடைகளை நீக்கி காரிய சித்தியை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
இத்தகைய நன்மைகளை தரக்கூடிய வெள்ளெருக்கு வேரை வீட்டின் வாசலில் கூட கட்டி வைப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வெள்ளெருக்கு அவ்வளவு சுலபமாக கிடைக்காது என்பதால் நன்றாகத் தெரிந்த நம்பகத்தன்மையானவர்களின் மூலம் வாங்குவது சிறந்தது.