விபூதி திருமண்ணின் மகிமை தெரியுமா?

காஞ்சி மகா பெரியவா ஜயந்தி (24.05.2024)
Kanchi Mahaperiyava
காஞ்சி மகா பெரியவா

‘விறகுக் கட்டையை அக்னியானது பஸ்பமாக்குவது போல், ஞானம் என்கிற அக்னி எல்லா கருமங்களையும் பஸ்பமாக்குகிறது’ என்று பகவத் கீதையில் பகவான் ஸ்ரீகிருஷ்ணன் அர்ஜுனனுக்கு உபதேசிக்கிறார்.

பஸ்பமாகிய விபூதி, இவ்விதம் கர்மங்களை எரித்த பின் நிற்கும் ஞானத்திற்கே அடையாளம் ஆகும். விபூதி என்பதும் ஐஸ்வர்யம் என்பதும் ஒரே பொருள் தரும். எந்த பொருளையும் தீயிலிட்டால் முதலில் அது கருப்பாக ஆகும். பிறகு இன்னும் அக்னியுடன் போட்டால் நீற்றுப் போகும். சுத்த வெளுப்பாக ஆகிவிடும். அப்புறம் தீயில் போட்டால் அது மாறாது. அதுவே முடிவான நிலை. இப்படி நீற்றுப்போனதே திருநீறு. நீறு பஸ்மம் எனப்படும். ஈஸ்வரன் மகாபஸ்பம். எல்லாம் அழிந்த பின்னும் எஞ்சி நிற்கிற அழியாத சத்தியமான மகாபஸ்மம் அவன்.

பஸ்மமாக நீற்று வெளுத்துப் போனதற்கு முந்திய மாறுதல் கருப்பு. அதுதான் கரி. நிலக்கரிதான் இவ்வுலக ஐஸ்வர்யத்தில் முதலிடம் பெற்றுள்ளது. ரொம்பவும் விலைமதிப்பான வைரமும் அதுதான். இந்த கரியாக மாறிய பொருளை விட மிகவும் உயர்ந்தது நீற்றுப்போன திருநீறு. திருநீற்றுக்கு மேலான பொருள் கிடையாது.

பல வண்ணங்களைக் கொண்ட பொருட்களை காண்கிறோம். ஆனால், இந்த வர்ணங்களை எல்லாம் வஸ்துவை எரித்த பின் மாறிவிடுகின்றன. எல்லாம் கடைசியில் வெளுத்துப் போய்விடும். நாம், ‘சாயம் வெளுத்து போய்விட்டது’ என்கிறோம். சாயம் என்பது வேஷம். வேஷம் போனபின் இருப்பதே மெய். மெய்யான ஆத்மாவின் தூய்மைக்கு அடையாளமாக இருப்பதே விபூதிதான்.

இதை, இந்த பொய்யான மெய் தேகம் முழுவதிலும் பூசிக்கொள்ள வேண்டும். எல்லாம் எரிந்த பின் எஞ்சி நிற்பது விபூதியின் வெண்மை ஒன்றுதான். மற்ற சாயம் எல்லாம் பொய் வெண்மையை உண்மை.

‘ஞானம் என்னும் தீ மூண்டபின் காரியங்கள் எல்லாம் பஸ்பமாகிவிடும்’ என்று ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா உபதேசித்ததில், பஸ்பம் ஆகிவிடும் என்றால் எல்லாம் அழிந்து, புத்தர் சொன்ன மாதிரி சூன்யம் ஆகிவிடும் என்று அர்த்தம் இல்லை. விறகு கட்டைகள் தீயில் எரிந்து போன பின் எல்லாமே சூன்யம் ஆகிவிடவில்லை. அப்போது எஞ்சி நிற்பது நீறு. அவ்வாறே ஞானம் என்னும் தீயில் கர்மாக்கள் யாவும் எஞ்சி நிற்கும். மிகுந்து நிற்பதே மகா பஸ்மமான பரமாத்மா.

விபூதியை தேகம் முழுவதும் பூசிக்கொள்ள வேண்டும். விபூதியை தரித்துக் கொள்வதினால் சகல ஐஸ்வர்யங்களையும் அடையலாம். பூத, பிரேத, பைசாச சேஷ்டைகளிலிருந்து காப்பாற்றும் பெரிய ரக்ஷையாக இருப்பது விபூதியே. வைஷ்ணவர்கள் திருமண் இடுவார்கள். துளசி செடியின் அடியில் உள்ள மண்ணை இட்டுக் கொள்வது வழக்கம்.

இதையும் படியுங்கள்:
வெற்றியடைய இந்த மூன்று பயங்களை கைவிடுங்கள்!
Kanchi Mahaperiyava

மண்ணை இட்டுக் கொள்வதும், திருநீறு இட்டுக் கொள்வதும் நமக்கு உயர்ந்த தத்துவத்தையே விளக்குகின்றன. மன்னனும் மாசறக் கற்றோனும் கடைசியில் பிடி சாம்பலாகத்தான் போகிறோம். வாழ்க்கை மாயமானது என்பதை விபூதி உணர்த்துகிறது. மண்ணிலே பிறந்த மரம் கடைசியில் மட்கி அதே மண்ணோடு மண்ணாகத்தானே ஆகிறது. நம்மை முடிவில் அடக்கிக்கொள்ளப் போகிற தத்துவம் அதுதான். இதை ஞாபகப்படுத்திக் கொள்ளவே நம்மில் சிலர் திருமண் அணிகிறோம்.

வில்வம் மகாலட்சுமி வசிக்குமிடம். பசுவும் மகாலட்சுமியின் வாஸ்து ஸ்தானம். விபூதி பசுவின் சாணத்தை அக்னியிலிட்டு பஸ்பமாக்குவதிலிருந்து உண்டாகிறது. பசுவின் சாணம் எல்லா துர்நாற்றங்களையும் போக்க உதவுகிறது. நமது உடல் பல துர்ற்றங்களை உடையது. இந்த உடலை சுத்தப்படுத்துவதோடு, ஆத்மாவையும் பரிசுத்தப்படுத்த வல்லது பஸ்மமாகிய திருநீறு. மகா பஸ்மமான பரமாத்மாவும் விபூதியும் ஒன்றானபடியால் விபூதி அணிவதால் ஈஸ்வரர் சாக்ஷாத்காரம் ஏற்படும்.

திருநீறு, திருமண் இவற்றை தரிப்பது பரமாத்மா சொரூபத்தின் உண்மையையும் உலகில் உள்ள பொருட்களின் அநித்தியுமான நிலையையும் நினைவூட்டுகிறது.

காஞ்சி மகா பெரியவா ‘தெய்வத்தின் குரல்’ நூலிலிருந்து…

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com