பெண்களுக்கு சுமங்கலித்துவம் தரும் விரலி மஞ்சள் மாலை மகிமை!

பெண்களுக்கு சுமங்கலித்துவம் தரும் விரலி மஞ்சள் மாலை மகிமை!

கிலம் அனைத்துக்கும் அன்னையாக இருந்து அரவணைத்துக் காப்பவள் அந்த உமையவள் அன்னை பார்வதி தேவி. அம்பிகை வழிபாட்டில் மிக முக்கியமான பூஜைப் பொருட்களாகத் திகழ்பவை மஞ்சள், குங்குமம், விபூதியாகும். இதில் முதலாவதாக இடம் பெறும் மஞ்சள் மங்கலத்தின் அடையாளப் பொருளாக விளங்குகிறது. கோயில்கள் மட்டுமின்றி, வீடுகளில் செய்யப்படும் பூஜைகளிலும் முதன்மையாக இடம்பெறுவது மஞ்சள்தான். பெண்களுக்கு சுமங்கலித்துவத்தை அடையாளப்படுத்துவதாகவும், மிகச் சிறந்த கிருமி நாசினியாகவும் மஞ்சள் திகழ்கிறது.

அம்பிகைக்கு உகந்த மங்கலப் பொருளாக விளங்கும் விரலி மஞ்சள் கிழங்கை மாலையாகக் கட்டி அம்மனுக்கு சாத்தி வழிபடுவதன் மூலம் திருமணத் தடை, கிரகக் கோளாறுகள், பிள்ளைப்பேறு, நிலைத்த சுமங்கலித்துவம் போன்ற பல்வேறு நலன்களைப் பெறலாம். அனைத்து வகையான பாபங்கள், சாபங்களைப் போக்கும் அற்புதப் பரிகாரமாக விளங்குகிறது அம்பாளுக்கு அணிவிக்கப்படும் விரலி மஞ்சள் மாலை வழிபாடு.

இனி, இந்த விரலி மஞ்சள் மாலை வழிபாட்டை அம்பிகைக்கு எப்படிச் செய்வது என்பதைப் பார்ப்போம். ஒரு வெள்ளிக்கிழமை காலை நித்யக்கடன்களை முடித்துக்கொண்டு விரலி மஞ்சள் கிழங்குகளை ஒற்றைப்படை எண் கணக்கில் வரும்படி எடுத்துக்கொள்ள வேண்டும். பிறகு மஞ்சளில் தோய்த்த ஒரு சரடை (கயிறை) எடுத்துக்கொண்டு அதில் பூ கட்டுவதுபோல ஒவ்வொரு மஞ்சள் கிழங்காக வைத்து தொடுக்க வேண்டும். உங்கள் கைகளால் தொடுத்த அந்த மாலையை நீங்களே ஒரு அம்மன் கோயிலுக்குக் கொண்டு சென்று அர்ச்சகரிடம் கொடுத்து அம்பிகையின் திருக்கழுத்தில் சூட்டக் கொடுக்கலாம். அதனையடுத்து அம்பிகைக்குச் செய்யப்படும் தீபாராதனையைக் கண் குளிர தரிசனம் செய்து அம்பிகையிடம் வேண்டுதலைச் சொல்லி வழிபட வேண்டும்.

இப்படியாக, தொடர்ந்து ஒன்பது வெள்ளிக்கிழமைகள் அம்பிகைக்கு மஞ்சள் கிழங்கு மாலை அணிவித்து வழிபட்டு வந்தால் எத்தகைய தீய சக்திகளும் உங்களை விட்டு அகன்று, உள்ளத்தில் நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். அதுமட்டுமின்றி, உங்களது அனைத்துப் பிரச்னைகளும் தானாவே நீங்கி, உங்கள் வேண்டுதல் அனைத்தும் பலித்து சந்தோஷமான வாழ்க்கை அமையும் என்பது ஐதீகம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com