ஸ்படிக மாலையால் கிடைத்த விஷ்ணு சஹஸ்ரநாமம்!

Vishnu Sahasranamam
Vishnu Sahasranamamhttps://ta.quora.com

காஞ்சி மகாபெரியவரிடம் ஒரு சமயம் நிருபர் ஒருவர் பேட்டி எடுத்தார். மகாபெரியவர் நிருபரிடம், “மிகவும் பழைமையான முதன் முதலில் தோன்றிய வாய்ஸ் ரெக்கார்டர் எது தெரியுமா” என்று கேட்டார்.

நிருபருக்கு பதில் தெரியவில்லை. மீண்டும் காஞ்சி பெரியவர் மற்றொரு கேள்வியை அவரிடம் கேட்டார்.

“விஷ்ணு சஹஸ்ரநாமம் நமக்கு எப்படிக் கிடைத்தது?”

அதற்கு அந்த நிருபர் குருக்ஷேத்ரப் போரில் அம்பு படுக்கையில் கிடந்த பீஷ்மரால் விஷ்ணுவின் ஆயிரம் திருநாமங்களும் நமக்குக் கிடைத்தது” என்றார்.

காஞ்சி பெரியவர் மீண்டும் ஒரு கேள்வியை கேட்டார், “நீங்கள் சொன்னது சரிதான். ஆனால், குருக்ஷேத்ரத்தில் அனைவரும் பீஷ்மர் சொன்ன விஷ்ணு சஹஸ்ரநாமத்தை பக்தியோடு கேட்டுக் கொண்டிருந்தபோது அதனை குறிப்பெடுத்ததோ எழுதிக் கொண்டதோ யார் என்று கேட்டார்?”

இந்தக் கேள்விக்கு நிருபரிடம் பதில் இல்லை. அதற்கான பதிலை காஞ்சி பெரியவரே சொன்னார். “பீஷ்மர் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் புகழையும் பெருமைகளையும் விஷ்ணு சஹஸ்ர நாமத்தால் விளக்கிக் கொண்டிருந்தபோது பஞ்சபாண்டவர்கள்
ஸ்ரீ கிருஷ்ணர் உட்பட அனைவரும் வேறு எந்த நினைப்புமின்றி அவரையே உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தனர். பிதாமகர் பீஷ்மர் ஆயிரம் நாமங்களையும் சொல்லி முடித்த பின்தான் அனைவரும் விழிப்படைந்தனர்.

முதலில் தருமர் பேசினார். ‘பிதாமகர் ஸ்ரீ வாசுதேவரின் ஒப்பற்ற பெருமை வாய்ந்த ஆயிரம் புனித நாமாக்களைச் சொன்னார். அவற்றைக் கேட்பதில் கவனமாக இருந்த நாம் அனைவரும் அவற்றை குறிப்பெடுக்கவோ எழுதிக்கொள்ளவோ தவறிவிட்டோம். அதனால் தற்போது நாம் அந்த அற்புதமான விஷயத்தை இழந்து நிற்கின்றோம்’ என்றார்.

அப்போதுதான் அனைவரும் எப்படிப்பட்ட தவறு நேர்ந்து விட்டது என்று உணர்ந்து திகைத்தனர். பிறகு யுதிஷ்டிரர் ஸ்ரீ கிருஷ்ணரிடம், ‘ஆயிரம் புனித நாமாக்களை மீட்டுத் தர தாங்களாவது உதவக் கூடாதா?’ என்று கேட்டார்.

ஸ்ரீ கிருஷ்ணர் வழக்கம் போல், ‘என்னால் மட்டும் என்ன செய்ய முடியும்? உங்கள் எல்லோரையும் போல நானும் ஆச்சாரியார் பீஷ்மரைத்தான் பார்த்துக் கொண்டிருந்தேன்’ என்றார்.

அனைவரும் சேர்ந்து ஸ்ரீ கிருஷ்ணரிடம், ‘வாசுதேவா, நீங்கள் அனைத்தும் அறிந்தவர். உம்மால் இயலாதென்பது எதுவுமே இல்லை. தாங்கள் தயை கூர்ந்து எங்களுக்கு உதவ வேண்டும். அந்த ஒப்புயர்வற்ற பெருமை வாய்ந்த பரந்தாமன் ஆயிரம் புனித நாமாக்களை மீட்டுத் தர வேண்டும். அது தங்களால் மட்டுமே முடியும்’ என்று  வேண்டினர்.

அதற்கு ஸ்ரீ கிருஷ்ணர், ‘இதனை செய்ய முடிந்த ஒருவர் உங்களுக்குள்ளேயே இருக்கின்றார்’ என்றார். எவருக்கும் ஒன்றும் புரியவில்லை. கிருஷ்ணரே தொடர்ந்தார், ‘சகாதேவன் அதனை மீட்டு சொல்ல, வியாசர் எழுதுவார்’ என்றார்.

இதையும் படியுங்கள்:
‘கத்புட்லி’ பொம்மலாட்டம் பற்றித் தெரிந்து கொள்ளுவோமா?
Vishnu Sahasranamam

அனைவரும் சகாதேவனால் எப்படி சகஸ்ரநாமத்தை மீட்க முடியும் என்பதை அறிய ஆவலாக இருந்தனர். அதைப் புரிந்துகொண்ட ஸ்ரீ கிருஷ்ணர், மேலும் கூறினர். ‘உங்கள் அனைவரில் சகாதேவன் மட்டுமே சுத்த ஸ்படிக மாலை அணிந்திருக்கிறான். அமைதியான சூழ்நிலையில் எழும் சப்தங்களை கிரகித்து கொள்ளும் குணம்  ஸ்படிகத்திற்கு உண்டு. ஸ்வதம்பரராகவும் ஸ்படிகமாகவும் இருக்கும் சிவபெருமானை தியானித்து அந்த சப்தங்களை மீட்க முடியும். அதன்படி சகாதேவன் சிவபெருமானை பிரார்த்தனை செய்து தியானித்து ஸ்படிகம் உள்வாங்கியுள்ள சகஸ்ர நாமத்தை சப்த அலைகளாக மாற்ற, அதனை வியாசர் எழுதிக்கொள்வார்’ என்றார்.

இதையடுத்து, சகாதேவனும் வியாசரும் பீஷ்மர் சகஸ்ரநாமம் சொல்லிய அதே இடத்தில் அமர்ந்தனர். சிவபெருமானை பிரார்த்தித்து தியானம் செய்து சகஸ்ர நாமத்தை மீட்கத் தொடங்கினான் சகாதேவன். இப்படித்தான் நமக்கு விஷ்ணுவின் சகஸ்ர நாமம் கிடைத்தது. எனவே, ஸ்படிகம்தான் முதல் வாய்ஸ் ரெக்கார்டர்” என்று கூறி முடித்தார் காஞ்சி மகா பெரியவர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com