வியாக்ரபாதர் என்ற பெயரை நாம் அடிக்கடி கேள்விப்பட்டிருக்கிறோம். இவர் சிவபெருமானை நோக்கித் தவமியற்றி, தனக்கு புலிக்கால்கள் வேண்டுமெனக் கேட்டு வரமாகப் பெற்ற ஒரு முனிவர். இவர் எதற்காக புலிக்கால்களை வரமாகப் பெற்றார் என்பதை அறிந்து கொள்ளுவோமா?
மத்யந்தனர் என்பவரின் மகனே வியாக்ரபாதர். இவருடைய இயற்பெயர் மழன். மழன் தனது தந்தை மத்யந்தனரிடம் வேதங்களைப் பயின்றார். அப்போது ஒருநாள் மழன் தனது தந்தையிடம், ‘இறைவனை அடைய தவம் செய்தால் போதுமா?’ என்று கேட்க, அவரோ தனது மகனிடம், ‘தவம் செய்தால் சொர்க்கம் மட்டுமே கிடைக்கும். ஆனால், சிவ வழிபாட்டை முறையாகச் செய்பவர்களுக்கு மறுபிறவி இல்லாத நிலை ஏற்படும்’ என்று எடுத்துரைத்தார். இதற்குப் பிறகு மழன் சிவ வழிபாட்டில் தனது கவனத்தைச் செலுத்த ஆரம்பித்தார். அவருடைய ஆழ்ந்த சிவ வழிபாட்டினை கவனித்த முனிவர்கள் அவரை, ‘மழ முனிவர்’ என்று அழைத்தார்கள்.
மழ முனிவர் பல சிவ தலங்களுக்கும் சென்று வழிபட ஆரம்பித்தார். ஒரு சமயம் தில்லைவனம் என்ற பகுதியை அடைந்த அவருக்கு, அங்கு உயரமாக வளர்ந்திருந்த மரங்களிலிருந்து பூக்களைப் பறித்து ஈசனுக்கு வழிபாடு செய்ய வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது. சிவ வழிபாட்டிற்குச் செலுத்தப்படும் பூக்களானது தேன் குடிக்க வரும் வண்டுகளால் எச்சில்பட்டு அசுத்தமாகிவிடக் கூடாது என்பதற்காக அதிகாலை நேரத்தில் அந்த மரங்களில் ஏறி பூக்களைப் பறிக்கத் தொடங்கினார். மரம் ஏறும் அனுபவம் இல்லாத காரணத்தினால் அவரது கை, கால்களில் கீறல்கள் ஏற்பட்டு காயங்கள் உண்டாயின. அதிலிருந்து வழிந்த இரத்தத் துளிகள் அவர் பறித்த பூக்களிலும் ஒட்டிக் கொண்டன.
அதிகாலை நேரத்திலேயே பூக்களைப் பறித்ததால் பின்னர் இறைவனுக்குச் சூட்டும் போது வாடிப்போவதைக் கண்டு வருந்தினார். என்ன செய்யலாம் என்று யோசித்து கடைசியில் மரங்களில் எளிதில் ஏறுவதற்கு வசதியாக புலியின் கால்களும் இருட்டில் பூக்களைப் பறிக்கும்போது தெளிவாகக் காண்பதற்காக இருட்டிலும் நல்ல கண் பார்வைத் தெரிய வேண்டும் என்று சிவபெருமானிடம் தவமியற்றி வேண்டினார். அவருடைய வேண்டுதலை நிறைவேற்ற எண்ணம் கொண்ட சிவபெருமான், அவருக்கு நேரில் காட்சியளித்து வேண்டிய வரத்தைத் தந்தருளினார்.
இதன் பின்னர் அவருடைய கால்கள் புலிக்கால்களாக மாறின. இருட்டிலும் தெளிவாகக் காணும் கூரிய பார்வையும் கிடைத்தது. வியாக்ரம் என்றால் சமஸ்கிருத மொழியில் புலி என்று பொருள். புலியின் கால்களை உடையவர் என்பதால் இவர் வியாக்ரபாத முனிவர் என்று அழைக்கப்பட்டார். தமிழில் புலிக்கால் முனிவர் என்று அழைக்கப்படுகிறார்.
சிவ வழிபாட்டை தீவிரமாகச் செய்ய விரும்பிய வியாக்ரபாதர், துர்வாச முனிவரிடம் சீடராகச் சேர்ந்தார். துர்வாச முனிவர் வியாக்ரபாதருக்கு பல வழிபாட்டு முறைகளைக் கற்பித்தார்.
ஒருசமயம் திருப்பட்டூர் என்ற தலத்தில் எழுந்தருளியிருந்த காசி விஸ்வநாதரை பூஜித்து வந்தார். இத்தலத்தில் இருந்த நீர்நிலை வறண்டு போயிருந்தது. இதனால் இறைவனை அபிஷேகம் செய்து வழிபட இயலாமல் போனது. இந்த சமயத்தில் இந்திரன் தனது வெள்ளை யானையில் கயிலாயத்திலிருந்து தீர்த்தத்தை எடுத்துக் கொண்டு திருவானைக்காவலில் உள்ள ஜம்புகேஸ்வரர் ஆலயத்திற்குச் சென்று கொண்டிருந்தார். இது இந்திரனின் தினசரி வழக்கமாக இருந்தது. இந்திரன் வெள்ளை யானையின் மீது அமர்ந்து தீர்த்தத்துடன் செல்வதைக் கண்ட வியாக்ரபாத முனிவர், இந்திரனிடம் தீர்த்தத்தைக் கேட்டார். இந்திரன் தீர்த்தத்தைத் தர மறுக்க, கோபமடைந்த முனிவர், தனது புலிக்காலால் தரையைத் தோண்டினார். உடனே சிவபெருமானின் தலையில் இருந்த கங்கை நீர் கீழே இறங்கி வந்து தண்ணீர் பெருக்கெடுத்தது.
அந்த நீரைக் கொண்டு முனிவர் சிவ பூஜை செய்தார். அந்த தீர்த்தம் இப்போது புலிப்பாய்ச்சித் தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. வசிஷ்டர் தனது தங்கை ஆத்ரேயினை வியாக்ரபாதருக்கு மணமுடித்து வைத்தார். இருவருக்கும் உபமன்யு என்றொரு குழந்தை பிறந்தது.
வியாக்ரபாதர் சிவபெருமானின் ஆனந்தத் தாண்டவங்களை தரிசித்தத் தலங்கள், ‘நவபுலியூர்’ என்று அழைக்கப்படுகின்றன. தற்போது சிதம்பரம் என்றழைக்கப்படும் பெரும்பற்றப்புலியூர், கடலூருக்கு அருகில் அமைந்த திருப்பாதிரிப்புலியூர், வெள்ளாற்றின் தென்கரையில் அமைந்துள்ள எருக்கத்தம்புலியூர், ஓமாம்புலியூர், கானாட்டம்புலியூர், சிறுபுலியூர், அத்திப்புலியூர், பெரும்புலியூர், தப்பளாம்புலியூர் ஆகிய ஒன்பது தலங்களும் நவபுலியூர் என்று அழைக்கப்படுகின்றன.
திருச்சிக்கு அருகில் அமைந்துள்ள திருப்பட்டூர் என்ற தலத்தில் வியாக்ரபாதரின் ஜீவசமாதியும் பதஞ்சலி முனிவரின் ஜீவசமாதியும் அமைந்துள்ளன. பதஞ்சலி முனிவரின் ஜீவசமாதி பிரம்மபுரீஸ்வரர் கோயிலின் உள்ளே பிரம்மன் சன்னிதியின் அருகில் அமைந்துள்ளது. வியாக்ரபாதரின் ஜீவசமாதி பிரம்மபுரீஸ்வரர் கோயிலுக்கு அருகில் அமைந்துள்ள காசி விஸ்வநாதர் ஆலயத்தில் அமைந்துள்ளது.