
வீட்டில் செய்யப்படும் தினசரி பூஜைகளுக்கு தீபம் ஏற்றுவதற்கு விளக்கு, எண்ணெய், திரி, தூப தீபத்திற்கு தூபக்கால், தீபக்கால், தீபாராதனை தட்டு, நீர் நிரப்பிய சொம்பு, பூஜைக்கான படங்கள், அட்சதை, குங்குமம் போன்ற சில அடிப்படையான ஆராதனைப் பொருட்கள் தேவைப்படும். அப்படி பூஜைக்குத் தேவைப்படும் சில பூஜைப் பொருட்கள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
பூஜை தட்டு: அனைத்து விதமான அத்தியாவசிய பொருட்களையும் வைப்பதற்கு தேவையான ஒரு தட்டு. வெற்றிலைப் பாக்கு, பழம், தேங்காய் போன்றவற்றை வைத்துக்கொள்ள தேவையான ஒரு தட்டு.
தெய்வத்தின் படங்கள் அல்லது சிலைகள்: தினமும் நாம் விரும்பி வழிபடும் தெய்வத்தின் படம் அல்லது சிலை, முழுமுதற் கடவுளான விநாயகரின் படம் மற்றும் குலதெய்வத்தின் படம் போன்றவை இருப்பது அவசியம்.
விளக்கு: பூஜைக்கு வெள்ளி, பித்தளை அல்லது வெண்கலம் போன்ற விளக்குகளைப் பயன்படுத்தலாம். மண்ணகல் கூட பூஜைக்கு ஏற்றதுதான். அவரவர் வசதிக்கேற்ப விளக்குகளை வாங்கி சந்தனம், குங்குமம் வைத்து தினமும் புது திரி போட்டு நெய் அல்லது நல்லெண்ணெய் விட்டு விளக்கேற்றுவது சிறப்பு. குறிப்பாக, காலை, மாலை இரண்டு வேளையும் விளக்கேற்றது வீட்டில் சுபிட்சத்தைத் தரும்.
ஊதுபத்தி மற்றும் சாம்பிராணி: தினசரி பூஜையில் தூப தீப ஆராதனைக்கு நறுமணம் கமழும் ஊதுபத்தி, சாம்பிராணி ஏற்றி வைப்பது வீட்டை சுத்திகரித்து, புனிதமான சூழ்நிலையை உருவாக்குவதற்கு உதவும்.
மணி: பூஜை முடிந்து கற்பூர ஆராதனையின்பொழுது ஒலிப்பதற்குத் தேவையான மணி. நல்ல கணீர் என்று ஒலி எழுப்பக்கூடிய மணியை வாங்கி உபயோகிப்பது நல்லது. பூஜை செய்யும்பொழுதும், மங்கல ஆரத்தி எடுக்கும்பொழுதும் மணி ஒலிக்கச் செய்வது மங்கலகரமானதாகக் கருதப்படுகிறது.
கலசம் அல்லது தண்ணீர் குடம்: பூஜைக்கு சுத்தமான, புனிதமான நீர் வைப்பதற்கு அல்லது கலசம் வைத்து பூஜை செய்வதற்கு தேவையான ஒரு சிறிய பானை. இது வெள்ளி, வெங்கலம், தாமிரம் என எந்த உலோகத்திலும் இருக்கலாம்.
கற்பூரம்: பூஜை முடிந்து கடைசியாக கற்பூர ஆரத்தி காட்டுவதற்குத் தேவையான கற்பூரத்தை ஒரு சிறிய டப்பாவில் சேமித்து வைப்பது நல்லது. கற்பூரம் எளிதில் காற்றில் கரைந்து விடும். எனவே, அதனை அழகாக ஒரு சிறிய டப்பாவில் காற்று புகாமல் பத்திரப்படுத்துவது நல்லது.
மஞ்சள் பொடி, குங்குமம், சந்தனம்: மஞ்சள் பொடி, குங்குமம், சந்தனப் பொடி ஆகிய வாசனை திரவியங்கள் தினசரி பூஜைக்குத் தேவையான முக்கியப் பொருட்களாகும். விக்கிரகங்களை வைத்து ஆராதனை செய்பவர்கள் மஞ்சள் பொடி, சந்தனப் பொடி கொண்டு அபிஷேகம் செய்வதும், அபிஷேகம் முடிந்ததும் விக்கிரகங்களுக்கு சந்தனம், குங்குமம் வைத்து, பூ வைத்து அலங்கரிப்பதும் உண்டு.
புனித நூல்கள்: பகவத் கீதை, ராமாயணம், சுந்தர காண்டம் போன்ற புனித நூல்களை பூஜை அறையில் வைத்து பூப்போட்டு பூஜிப்பதும், விசேஷ தினங்களில் அதை எடுத்துப் படிப்பதும் உண்டு.
புனித நீர்: பூஜை அறையில் கங்கா ஜலம் அல்லது காவிரி, பிரம்மபுத்திரா போன்ற நதிகளின் புனித நீர் அடங்கிய சொம்பை வைத்திருப்பது வழக்கம்.
பூக்கள், பழங்கள் மற்றும் அட்சதை: பூஜை செய்வதற்கு மலர்கள் மற்றும் முனை முறியாத அரிசி (அட்சதை) இன்றியமையாதவை. மல்லிகை, முல்லை, சாமந்தி, ரோஜா, செவ்வந்தி போன்ற மலர்களை வாங்கிப் பயன்படுத்தலாம். கடவுளுக்கு சாத்துவதற்கும், அலங்காரத்திற்கும் பூக்கள் தேவை. தினசரி பூஜை முடிந்ததும் நைவேத்தியம் செய்வதற்கு வாழைப்பழம், ஆப்பிள், மாதுளை, கொய்யாப்பழம் என ஏதேனும் பழங்கள் தேவை.