மாதங்களில் சிறந்தது மார்கழி. பகவான் கண் விழிக்கும் நேரம். பீடைகள் போகக்கூடிய மாதம். அதாவது, பீடுடைய மாதம் மார்கழி. ஆடி, புரட்டாசி, மார்கழி மாதங்களில் தெய்வ சிந்தனையுடன் இருப்பதற்காக இம்மாதங்களில் வீடுகளில் விசேஷங்கள் நடத்துவதில்லை.
அறிவியல் ரீதியாக மார்கழி மாதம் ஓசோன் மண்டலம் பூமிக்கு மிக அருகில் இருக்கும். எனவே, இம்மாதத்தில் அதிகாலை எழுந்து வாசலில் கோலமிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.
கல்யாணம் ஆகாத கன்னிப்பெண்கள் நல்ல கணவர் கிடைக்கவும், திருமணமானவர்கள் இல்வாழ்க்கை சிறக்கவும் காலையில் நீராடி திருப்பாவை, திருவெம்பாவை பாடிட, சகல செல்வங்களும் கிடைக்கும்.
மார்கழி மாதம் தேவர்களுக்கான அதிகாலை பொழுது. அதாவது, தேவர்கள் விழித்திருக்கும் காலம். நமக்கு ஒரு வருடம் என்பது தேவர்களுக்கு ஒரு நாளாகும். தனுர் மாதம் முழுக்கவே காலை 4 மணிக்கு எழுந்து விடுவது நல்லது. மார்கழி மாதம் 30 நாட்களும் நோன்பு இருந்து இறைவனை வழிபட்டு கடைசி நாள் ஆண்டாள் பெருமாளுடன் ஐக்கியமாகி விடுகிறாள். இது நமக்கு உணர்த்தும் உண்மை என்னவென்றால் ஜீவாத்மா பரமாத்மாவுடன் ஐக்கியம் அடைய சிறந்த பக்தி தேவை என்பதே.
கார்த்திகை மாதத்தில் மாலையில் விளக்கேற்றுவதுபோல், மார்கழி மாதம் காலையில் வீட்டு வாசலில் இரண்டு அகல் விளக்குகள் ஏற்றுவது வழக்கம். முன்பெல்லாம் மார்கழி மாதத்தில் விடியற்காலையில் தெருவில் பஜனை செய்து கொண்டு, இறைவனின் நாமங்களை பாடிக் கொண்டு செல்வது வழக்கம். இப்பொழுது இவை அவ்வளவாக எல்லா இடங்களிலும் நடைபெறுவதில்லை.
மார்கழி ஸ்பெஷலாக இசைக்கச்சேரிகள், பஜனைகள், நாமஸ்மரணம் ஆகியவை எல்லா இடங்களிலும் சபாக்களிலும் நடைபெறுகின்றது.
தனுர் மாதம் முழுவதும் விடியற்காலை 4 மணிக்கு கோயில்கள் திறந்து விடுகின்றன.விடியற்காலை எழுவதும், பிரம்ம முகூர்த்தத்தில் விளக்கு ஏற்றுவதும், கோயிலுக்குச் சென்று வருவதும் ஆரோக்கியம் மற்றும் மன தைரியத்தை ஏற்படுத்தும். உடலுக்கு நிறைய எனர்ஜியும் கிடைக்கும். மார்கழி மாதத்தில்தான் வைகுண்ட ஏகாதசியும், ஆருத்ரா தரிசனமும் (திருவாதிரை) நடைபெறுகின்றது.
மார்கழி மாதம் ஒரு ஆன்மிக மாதம். நிறைய வழிபாடுகள் செய்து இறை சிந்தனையுடன் இருந்தால் இறையருளை பெற்று சகல நலன்களும் பெறலாம்.
மார்கழி மாதத்தில் செய்யச் சிறந்தவை: கோயில்களுக்கு செல்வது, தீர்த்த யாத்திரை போவது, குலதெய்வ வழிபாடு செய்வது, பிரம்ம முகூர்த்தத்தில் அதாவது விடியற்காலையில் பூஜை அறையிலும், வாசலிலும் விளக்கேற்றுவது.
செய்யக்கூடாதவை: கிரகப் பிரவேசம் செய்வது, விசேஷங்கள் செய்வது, அசைவ உணவு உண்பது, தலை முடியை கட்டாமல் அவிழ்த்து விட்டுக் கொண்டிருப்பது.