அறிவியல் ஆன்மிகம் என்பது என்ன? ஒரு விளக்கம்!

அறிவியல் ஆன்மிகம் என்பது என்ன? ஒரு விளக்கம்!

விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூரை சேர்ந்தவர் யோகி ஆடலரசன். பல் மருத்துவரான இவர், அறிவியல்பூர்வ ஆன்மிகத்துக்கான கல்வியை மக்களிடையே போதித்து வருகிறார். 'ஆன்-லைன்’ வாயிலாகவும் இதற்கான வகுப்புகளை நடத்தி வருகிறார். ‘கடவுளால் உருவாக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவியல்தான் மனிதன். மனித உடலுக்கு அழிவுண்டு; ஆன்மாவுக்கு அழிவில்லை; என்பதை வலியுறுத்துகிறார் யோகி ஆடலரசன்.

“இளம் வயதில் ஆன்மிகத்தை விட, அறிவியலையே நான் அதிகம் நேசித்தேன். ஒரு நாள் குடும்பத்துடன் எனது குலதெய்வம் கோயிலுக்கு சென்றபோது, எங்கிருந்தோ ஒரு அசரீரி குரல் எனக்குக் கேட்டது. ‘ஆன்மிகம் என்பது அறிவு சார்ந்தது. அறிவியலை அடிப்படையாகக் கொண்டது என்றது அந்தக் குரல். அதுமட்டுமின்றி, அந்த ஆன்மிக அறிவியலை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணிக்காக என்னை தேர்வு செய்திருப்பதாகவும், அதற்கான ஞானத்தை ஸித்தியில் கற்றுத் தருவதாகவும் அந்த அசரீரி வாக்கில் குறிப்பிடப்பட்டது.  

அதையடுத்து, அந்த அறிவியல் ஆன்மிகத்தை தொடர்ந்து பன்னிரண்டு ஆண்டுகள் படித்தேன். அதன் மூலம், ‘நம் உடல் என்பது இந்த உலகில் ஏதோ ஒரு காரண, காரியத்துக்காக இறைவனால் படைக்கப்பட்ட ஒரு கருவி என்பதையும், அந்த காரண, காரியத்தை அறிந்தால் நாம் ஒவ்வொருவரும் கடவுளாக மாறலாம் என்பதையும் முழுமையாக உணர்ந்தேன். அந்தக் கல்வியை ஒரு மாமாங்கம் கற்க வேண்டும். இதற்காக செய்யும் தொழில், குடும்பம், சொத்து, சுகம் என எதையும் விட்டு வெளியே வர வேண்டிய அவசியம் இல்லை.

இந்த அறிவியல் ஆன்மிகத் தேடலுக்கு குரு என்பவர் மிகவும் அவசியம். ஒரு மொபைல் போனை, 'சுவிட்ச் ஆன், சுவிட்ச் ஆப்’ செய்வது போல நமது உடலில் செய்யப்படுவதுதான் ஜீவ சமாதி என்னும் தத்துவத்தை ‘சைவ சன்மார்க்க கல்வி நிறுவனம்’ வாயிலாக நான் கற்றுத் தருகிறேன். எனது குரு யோகி அப்பர், வள்ளலார்தான். கடவுள் சொல்வதைச் செய்பவரே யோகி.

மரணமில்லா பெருவாழ்வு என்பது மனித உடலை தேவையானபோது உருவாக்கி, அழிப்பதே. இது கடவுளின் நிலை. அடுத்தது, மனித மனதில் ஏற்படும் மாசுக்களை அகற்றி, உடலில் ஏற்படும் நோய்களை நீக்குபவர்கள் சித்தர்கள். நம் உடல் என்பது கடவுளால் உருவாக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு கம்ப்யூட்டர் இயந்திரம். இதில் நம் காதுகள் - மைக், வாய் - ஸ்பீக்கர், கண்கள் - கேமரா, கிட்னி ஆர்.ஓ. சிஸ்டம், மூளை – சர்வர்.

அறிவியல் ஆன்மிகத்தை ஒவ்வொரு கட்டமாகத்தான் கற்க வேண்டும். கோயில் என்பது ஒரு கல்விக் கூடம். அதில் இருப்பவர்களே நமக்குக் கற்பிக்கும் குருக்கள். கடவுளை அடைய, கற்கும் கல்விக்கான சீருடையே காவி. நம்மை உருவாக்கிய கடவுள் எப்போதும் யாரையும் கைவிட மாட்டார். அறிவியல் ஆன்மிகத்தை ஐயம் தீரக் கற்றால் நாமே கடவுளாகவே மாறலாம்” என்கிறார் யோகி ஆடலரசன்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com