மதுரை ஸ்ரீ மீனாட்சி அம்மன் கோயில் தங்க விமானம் மற்றும் கோபுரங்களுக்கு அப்படி என்ன சிறப்பு?

Madurai Sri Meenakshi amman Temple
Madurai Sri Meenakshi amman Temple
Published on

துரை என்றாலே முதலில் நினைவுக்கு வருவது, மீனாட்சி அம்மன் கோயில்தான். மதுரை முழுவதும் பல இடங்களில் கோயில்கள் இருந்தாலும் மீனாட்சி அம்மன் கோயிலின் சிறப்பே தனிதான். சிவபெருமான் தனது 64 திருவிளையாடல்கள் நிகழ்த்தியது இந்தக் கோயிலைச் சுற்றிதான். ஓர் ஆண்டில் 274 நாட்கள் திருவிழா நடக்கும் தலம் இது ஒன்றுதான். தமிழ் மாதங்கள் தோறும் திருவிழாக்கள் நடைபெறுவதால் மதுரைக்கு திருவிழா நகரம் என்றும் பெயர் உண்டு. இப்படி பல்வேறு பெருமைகளை கொண்ட மீனாட்சியம்மன் கோயில் உலகப் பிரசித்தி பெற்றதாக உள்ளது. இந்நிலையில் மீனாட்சி அம்மன் கோயிலில் தங்க விமானங்கள் மற்றும் கோபுரங்களுக்கு இன்று பாலாலயம் நடைபெற்றிருக்கிறது.

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்று 12 ஆண்டுகளான நிலையில், கோயில் வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டு அதனை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக கும்பாபிஷேகம் ஆகம விதிப்படி நடத்தப்படவில்லை. இந்த நிலையில் கும்பாபிஷேகம் திருப்பணிகள் மேற்கொள்வதற்காக முதற்கட்டமாக 5 கோபுரங்களுக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம்  4ம் தேதி விமான பாலாலயம் நடைபெற்று, அதன் தொடர்ச்சியாக கோயிலின் தங்க விமானங்கள், விமானங்கள் மற்றும் கோபுரங்களுக்கு இன்று பாலாலயம் நடைபெற்றிருக்கிறது. அப்படி என்ன மீனாட்சி அம்மன் கோயில் கோபுரங்கள் மற்றும் விமானங்களுக்கு சிறப்பு என்பதை இந்தப் பதிவில் காண்போம்.

மீனாட்சி அம்மன் கோயிலை நினைத்தால் அனைவருக்கும் நினைவுக்கு வருவது அதன் கோபுரங்கள்தான். இந்த கோபுரங்களில் எண்ணற்ற சிற்பங்களும் உள்ளன. சிவமகாபுராணம், திருவிளையாடற்புராணம், லிங்கபுராணம், தேவி மகாத்மியம் முதலிய புராணங்கள் தொடர்பான சிற்பங்கள் இதில் இடம் பெற்றிருக்கின்றன. கோயிலின் வெளி மதிலில் 4 திசைகளிலும் 4 கோபுரங்கள் உள்ளன. இவை வெளிகோபுரங்கள் என்று அழைக்கப்படுகின்றன. ஒவ்வொரு கோபுரமும் 60 அடி உயரமுள்ள ஒரே கல்லினால் செய்யப்பட்ட வாயிற் தூணோடு தொடங்கி, படிப்படியாக பல அடுக்குகளைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. 4 வாயில்களும் உயர்ந்த உறுதியான கதவுகளைக் கொண்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
தினம் ஒரு ஆப்பிள் சாப்பிடுவதால் உண்டாகும் இனிப்பான 13 நன்மைகள்!
Madurai Sri Meenakshi amman Temple

மீனாட்சி அம்மன் கோயிலில் உள்ள கோபுரங்கள் சங்க காலத்திற்கு முன்பே கட்டப்பட்டவை. சுமார் 2300 முதல் 3600 ஆண்டுகளுக்கு பழைமையானவை எனவும் ஆராய்ச்சி குறிப்புகள் கூறுகின்றன. சுவாமி கோபுரம் தொடங்கி, கிழக்கு ராஜ கோபுரம், தேரடி மண்டபம், ஆறுகால் மண்டபம், அம்மன் சன்னிதி கோபுரம், மேற்கு இராஜ கோபுரம், வீர வசந்தராயர் மண்டபம், மீனாட்சி நாயக்கர் மண்டபம் என மொத்தம் 12 கோபுரங்களை உள்ளடக்கியது மதுரை மீனாட்சி அம்மன் கோயில். இதில் தெற்கு கோபுரம் மிகவும் உயரமானது. 170 அடி உயரம் கொண்ட இக்கோபுரம், 9 நிலைகளைக் கொண்டது.

மதுரை மீனாட்சி ஆலயம் பல சிறப்புகளைக் கொண்டுள்ளது.15 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இக்கோயில், எட்டு கோபுரங்களையும் இரண்டு தங்க விமானங்களையும் உடையது. சுந்தரேஸ்வரருக்கு மேலே உள்ள விமானம் இந்திரனால் அமைக்கப்பட்டது. எனவே இங்குள்ள கருவறை விமானங்கள், இந்திர விமானம் என்று அழைக்கப்படுகிறது. 32 சிங்கங்களும், 64 சிவகணங்களும், 8 வெள்ளை யானைகளும் இந்த கருவறை விமானங்களைத் தாங்குகின்றன. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலை விமானத்தில் பறந்து பார்க்கும் போது, அந்தக் கோபுரங்கள் மட்டும் தக... தக...வென ஜொலிக்கும். அது மீனாட்சி அம்மன், சுவாமி சுந்தரேஸ்வரரின் மூலஸ்தான தங்க கோபுரங்கள். இதில், சுவாமியின் மூலஸ்தானமான தங்க கோபுரத்தைத்தான் யானைகள், சிங்கங்கள், பூதங்கள் தாங்குவது போல் கலைநயத்துடன் வடிவமைத்து இருக்கின்றனர். பாதுகாப்பு கருதி, தற்போது இதை கோயில் மாடிக்கு சென்று தரிசிக்க அனுமதிப்பதில்லை.

மதுரை மாநகரின் அடையாளமாக ராஜகோபுரங்கள் விளங்கி வருகின்றன. தூரத்தில் நின்று பார்த்தால் கூட கம்பீரமாகக் காட்சி அளிக்கும் இந்த கோபுரங்களை பக்தர்கள் தொலைவில் நின்று வணங்குவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com