சைவ ஆலயங்களில் நடைபெறுவது கும்பாபிஷேகம். வைணவ ஆலயங்களில் நடைபெறுவது ஸம்ப்ரோக்ஷணம். இவை இரண்டுக்கும் தமிழில், ‘குடமுழுக்கு’ என்றுதான் பெயர்.
கும்பாபிஷேகம் நடத்துவதில் மூன்று வகைகள் உள்ளன.
1. முற்றிலும் புதிதாக ஒரு கோயில் கட்டி முடித்து அதற்கு நடத்தப்படுவது நூதன அஷ்டபந்தன கும்பாபிஷேகம்.
2. ஏற்கெனவே உள்ள பழைய கோயிலில் சிலவற்றைப் புதுப்பித்து, திருப்பணிகள் செய்து முடித்து நடத்துவது புனருத்தாரண கும்பாபிஷேகம்.
3. மிகவும் பழைமையான கோயில் சிதிலமடைந்து நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு புதுப்பித்து நடைபெறுவது ஜீர்ணோத்தாரண கும்பாபிஷேகம்.
குறைந்தபட்சம் ஒவ்வொரு கோயிலுக்கும் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது கும்பாபிஷேகம் நடத்திட வேண்டும் எனக் கூறுகின்றன சைவ - வைணவ ஆகமங்கள்.
ஏன் இந்தப் பன்னிரண்டு ஆண்டுகள்?
கோயில் மூலவர் விக்கிரகங்கள் கருங்கல்லினால் வடிக்கப்பட்டவை. சன்னிதிகளில் அவற்றைப் பிரதிஷ்டை செய்யும்போது, அதன் ஆதார பீடங்களில் மந்திரங்கள் பதிவான எந்திரங்கள் வைக்கப்படும். அதன் மேலே அஷ்டபந்தன மருந்து சாத்தபட்டு, அதன் மீதுதான் சுவாமி விக்கிரகங்கள் பிரதிஷ்டை செய்யப்படும். அந்த அஷ்ட பந்தன மருந்துக்கும், அந்த எந்திரத்துக்கும் முழு சக்தி பன்னிரண்டு ஆண்டுகள் வரைக்கும்தான். மீண்டும் அஷ்டபந்தன மருந்து சாத்தவும், எந்திரம் பதிக்கவும்தான் இந்த கும்பாபிஷேக நடைமுறை ஆகமங்களில் வகுக்கப்பட்டுள்ளது.
அச்சமயம் விக்கிரகங்களை பூஜித்து அகற்றி, பாலாலயம் செய்து அப்படியே அத்திப் பலகையில் அந்த தெய்வங்களின் உருவங்களை வரைந்து, கோயிலில் வேறொரு இடத்தில் துணை ஆலயம் அமைப்பார்கள்.
கும்பாபிஷேகத் திருப்பணிகள் நிறைவு பெறும்போது, மீண்டும் அதன் பீடங்களில் எந்திரம் மற்றும் அஷ்டபந்தன மருந்து சாத்தி விக்கிரகங்களை பிரதிஷ்டை செய்வார்கள். அப்போது கோயில் கோபுரக் கலசங்கள், சன்னிதி விமானங்களின் கலசங்களில் வரகு தானியம் நிரப்புவார்கள். இடி மற்றும் மின்னல் தாக்குதலைத் தாங்கும் சக்தி வரகு தானியத்துக்கு உண்டு.
யாகசாலை அமைத்து, புனித நீர் கொண்டுவரப்பட்டு, யாக குண்டங்களில் அக்னி வளர்த்து, யாக பூஜை செய்து, புனித நீரினை கோயில் கோபுரக் கலசங்களில் ஊற்றிக் கும்பாபிஷேகம் அல்லது ஸம்ப்ரோக்ஷணம் நடைபெறும்.