லட்சுமணனின் ஏழு நாட்கள் உணவுப் பொட்டலங்கள் எங்கே?

லட்சுமணனின் ஏழு நாட்கள் உணவுப் பொட்டலங்கள் எங்கே?

ந்திரஜித் ஒரு வரம் பெற்றிருந்தான். அதாவது, ‘யார் ஒருவர் பதினான்கு வருடங்கள் சாப்பிடாமலும், தூங்காமலும் இருக்கிறாரோ அவரால் மட்டுமே தன்னை ஜெயிக்க முடியும்’ என்கிற வரம்தான் அது. ராவணனை வெற்றி கொண்ட பின்பு, ஸ்ரீராமரும்  லட்சுமணரும் சீதையுடன் அயோத்திக்கு திரும்பினார்கள். அயோத்தி மக்கள் மிகவும் உற்சாகத்துடன் அவர்களுக்கு வரவேற்பு கொடுத்தார்கள். ஒவ்வொருவரும் அவர்களுடைய வெற்றி எப்படி நடந்தது என்பது பற்றி சிலாகித்து பேசிக்கொண்டார்கள். அப்பொழுது லட்சுமணன் இந்திரஜித்தை ஜெயித்த அந்த சம்பவமும் பேச்சில் இடம் பெற்றது.

ஸ்ரீராமருக்கு திடீரென்று ஒரு எண்ணம் தோன்றியது. ‘பதினான்கு வருடங்கள் சாப்பிடாமலும், தூங்காமலும் இருந்த ஒருவரால்தானே இந்திரஜித்தை வெல்ல முடியும். அப்படி இருக்க, நான் உண்ணும்போதெல்லாம் லட்சுமணனுக்கும் அவனுடைய பங்கு அளிக்கப்பட்டதே. லட்சுமணனும் உண்டிருப்பானே. எப்படி அவனால் ஜெயம் கொள்ள முடிந்தது’ என்று யோசித்தார்.

லட்சுமணனைக் கூப்பிட்டார். "லட்சுமணா, நீ பதினான்கு ஆண்டுகள் உறங்கவில்லை என்பது எல்லோருக்குமே தெரியும். நான் உண்ணும் பொழுதெல்லாம் உனக்கும் ஒரு பங்கு அளிக்கப்பட்டது அல்லவா? நீ உண்ணவில்லையா? அந்த உணவை நீ என்ன செய்தாய்? நீ இந்திரஜித்தை வெற்றி கொண்டதால் உணவையும் சாப்பிடவில்லை என்பதை இப்பொழுதுதான் உணர்கிறேன்" என்றார்.

"பிரபு நாம் பஞ்சவடியில் தங்கி இருந்தபொழுது, நீங்கள் தினமும் எனக்கு அளித்த உணவினை, தனித்தனி  மூட்டையாகக் கட்டி,  அங்கு இருக்கும் ஷமி என்னும் மரத்தின் கீழ் உள்ள பெரிய பொந்தில் மறைத்து வைத்திருக்கிறேன்" என்றான்.

"சரி, இன்று மாலையே அந்த விஷயம் மெய்ப்பிக்கப்படும்" என்று ஸ்ரீராமர் கூறினார்.

லட்சுமணர் பொய் கூற மாட்டார் என்பது ஒரு பக்கம் இருந்தாலும், பதினான்கு  ஆண்டுகள் உணவு உண்ணாமல் இருந்திருப்பாரா என்கிற சந்தேகம் அயோத்தி மக்களிடையே வந்து விடக்கூடாது என்பதற்காக, எல்லாம் அறிந்த ஸ்ரீராமர் இப்படி ஒரு நாடகத்தை நடத்தத் துணிந்தார். அன்று மாலை அரச சபையில் ஏகமாக மக்கள் கூடியிருந்தார்கள். எல்லோருக்கும் லட்சுமணர் என்ன சொல்லப்போகிறார் என்கிற ஒரே சிந்தனைதான் இருந்தது.

அன்று மாலை அரசவை கூடியது. ஸ்ரீராமர், அனுமனிடம், "நீ பஞ்சவடி சென்று ஷமி மரத்தின் பொந்தில் இருக்கும் உணவுப் பொட்டலங்களை எடுத்துக் கொண்டு வா" என்று கூறினார். ஆனால், அனுமனுக்கோ சிறிது கர்வம் இருந்தது. ‘இந்திரஜித் எய்த அம்பினால் மயக்கமுற்று விழுந்த லட்சுமணனுக்காக ஒற்றை கையில் சஞ்சீவினி மலையையே தூக்கிக் கொண்டு வந்த நான், உணவுப் பொட்டலங்களை எடுக்கப் போக வேண்டுமா?’ என்று மனதில் தோன்றியது. இருப்பினும் ஸ்ரீராமரின் உத்தரவை மீற மனம் இல்லாமல் பஞ்சவடி சென்று உணவு மூட்டைகளை எடுக்க முயன்றார். ஆனால், அனுமனின் கர்வத்தினால் அவரால் அதைத் எடுக்க முடியாமல் போனது.

அயோத்திக்கு திரும்பி வந்த அனுமான், தனது இயலாமையை ஸ்ரீராமரிடம் கூறிய பொழுது, அனுமனின் கர்வம் குறைந்ததை எண்ணி மகிழ்ந்த ஸ்ரீராமர்,  லட்சுமணனிடமே அந்தப் பொறுப்பை ஒப்படைத்தார். பஞ்சவடிக்குச் சென்ற லட்சுமணன் அந்த மூட்டைகளை எடுத்துக் கொண்டு வந்து, சபையில் ஸ்ரீராமரின் முன்பு பரத்தி வைத்தார்.

ஸ்ரீராமர் அனுமனைக் கூப்பிட்டு, ‘பதினான்கு வருடங்களில் உண்ணாமல் சேமித்து வைத்திருந்த பொட்டலங்கள் சரியாக இருக்கிறதா என்று கணக்கு பார்க்கச் சொன்னார். அப்படி எண்ணியபொழுது, அதில் ஏழு  உணவு முட்டைகள் குறைவாக இருந்தன. ஏழு மூட்டைகள் குறைவாக இருப்பதற்கு உண்டான காரணத்தை ஸ்ரீராமர் லட்சுமணரிடம் விசாரித்தார்.

"பிரபு, நம் தந்தை பூலோக வாழ்க்கையை நீத்த அன்று நாம் யாருமே உணவு உண்ணவில்லை. இரண்டாவதாக தாய் சீதம்மாவை இலங்கேஸ்வரன் கடத்திச் சென்ற அன்று நீங்கள் எனக்கு உணவு கொடுக்கவில்லை. அடுத்து, லங்கேஸ்வரிக்கு பலி கொடுப்பதற்காக இரண்டு பேரும் பாதாள லோகம் சென்றபொழுது, நாம் இருவருமே உணவு எடுத்துக் கொள்ளவில்லை. நான்காவதாக, இந்திரஜித் என் மீது அம்பு எய்தபொழுது நான் மயக்கமுற்று கீழே விழுந்த அந்த நாளில் நான் உணவு சாப்பிடவில்லை. ஐந்தாவதாக இந்திரஜித்தின் தலையைத் துண்டித்த அன்றும் ஆறாவதாக இலங்கேஸ்வரனின் சிரசை நீங்கள் துண்டித்த அன்றும் அந்த இரண்டு நாட்களும் நாம் உண்ணவில்லை. ஏழாவதாக ராவணனைக் கொன்றதால் பிரம்மஹத்தி தோஷம் பீடித்ததாக நீங்கள் உணர்ந்தீர்கள். இலங்கையில் ராவணனுக்காக துக்கம் அனுஷ்டித்தபொழுது, நாம் இருவருமே உணவு உண்ணவில்லை. உண்ணாமலேயேதான், நாம் இருவரும் அங்கிருந்து கிளம்பி விட்டோம். இதுவே அந்த ஏழு நாட்கள் உணவு இல்லாமல் இருப்பதற்கான காரணம்" என்றார்.

லட்சுமணனின் உயர்ந்த தியாகச் செயலையும் அர்ப்பணிப்பு மனப்பான்மையையும் கேள்வியுற்ற அயோத்தி மக்கள், நா தழுதழுக்க லட்சுமணனை போற்றி வானளாவப் புகழ்ந்தார்கள். லட்சுமணனின் சகோதர பாசத்தையும், பக்தியையும் குடும்பத்தினரும், அயோத்தி மக்களும் நன்கு புரிந்து கொண்டார்கள். எல்லாம் அறிந்த ஸ்ரீராமர் மற்றவர்கள் அறியும் பொருட்டு நிகழ்த்திய ஒரு விளையாட்டுதானே அது. ‘தம்பி உடையான் படைக்கு அஞ்சான்’ என்று சும்மாவா சொன்னார்கள்?

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com