முன்னொரு காலத்தில் புரி க்ஷேத்திரத்தில், அர்ஜுன் பண்டா என்று ஒரு பக்தர் வாழ்ந்து வந்தார். அவர் ஸ்ரீ ஜெகந்நாதரின் மேல் அளவு கடந்த பக்தி கொண்டிருந்தார். தினமும் யாசகம் எடுத்து, அதில் வரும் தானியத்தையோ அல்லது வேறு பொருட்களைக் கொண்டோ வீட்டில் மனைவியை உணவு சமைக்கச் சொல்லி குடும்பமே அதில் உண்டு வந்தார்கள்.
அவர் தினமும் பகவத் கீதையை பாராயணம் செய்யும் பழக்கத்தை மேற்கொண்டு இருந்தார். நல்லதோ, கெட்டதோ எது நடந்தாலும் அது ஜகந்நாதரின் சித்தம் போல்தான் அமைகிறது என்கிற பலமான நம்பிக்கையை கொண்டிருந்தார். அவர் பகவத் கீதையை ஆவலுடன், ஆத்மார்த்தமாக நித்தியமும் பாராயணம் செய்து கொண்டு இருந்ததால், அர்ஜுன் பண்டா என்கிற பெயர் மாறி கீதா பண்டா என்கிற பெயரே அவருக்கு நிலைத்தது.
ஒரு சமயம் புரியில், பலத்த மழை பெய்யும் சூழலாக இருந்தது. அதிகமான மழைப்பொழிவால் கீதா பண்டாவினால் யாசகம் கேட்க வெளியில் போக முடியவில்லை. ஆனால், அதற்காக அவர் மனம் வருத்தப்படவில்லை. கீதையை பாராயணம் செய்ய இன்னும் தனக்கு அவகாசம் அதிகமாகக் கிடைத்ததே என்று மகிழ்ச்சிதான் கொண்டார். அவர் யாசகத்திற்கு வெளியில் போகாமல் இருந்ததால் வீட்டில் கையிருப்பில் இருந்த தானியங்கள் குறைய ஆரம்பித்தன. குடும்பமே பட்டினி கிடைக்கும் நிலைக்கு வந்தது.
கீதா பண்டாவின் மனைவிக்கு மிகவும் கவலை உண்டானது. மழை பெய்வதால் வெளியில் போக முடியவில்லை என்பது வாஸ்தவம்தான் என்றாலும், அதனால் சிறிது கூட மனம் கலங்காமல், கணவர் சந்தோஷமாக கீதையை பாராயணம் செய்து கொண்டு இருக்கிறாரே என்று மிகுந்த கோபம்தான் உண்டானது. கணவரை கோபத்துடன் ஏச ஆரம்பித்தாள்.
அப்பொழுது கீதா பாண்டா பகவத் கீதை புத்தகத்தை எடுத்து, அதில் ஸ்ரீ கிருஷ்ண பகவான் கூறி இருக்கும் ஒரு ஸ்லோகத்தை அவளுக்கு படித்துக் காண்பித்தார்.
‘அனன்யாஸ் சிந்தயந்தோமாம் யே ஜனா: பர்யுபாஸதே
தேஷாம் நித்யாபி யுக்தானாம் யோகக்ஷேமம் வஹாம்யஹம்’
(என்னுடைய மங்களகரமான திவ்ய ரூபத்தை யார் ஒருவர் மனதில் நிறுத்தி களங்கமற்ற பக்தியுடன் என்னை துதிக்கிறார்களோ, அவர்களையும் அவர்களுடைய பொருட்களையும் நான் பரிபாலனம் செய்கிறேன்.)
கீதா பண்டா இந்த வரிகளை கூறி பகவத் கீதை புத்தகத்தையும் காட்டினார். மிகுந்த கோபத்துடன் இருந்த அவரின் மனைவி, ‘இதுதான் உங்கள் பகவான் ரட்சிக்கிற அழகா? குடும்பமே பட்டினி கிடக்கிறது. மூன்று குழந்தைகளும் பட்டினியுடன் தூங்குகின்றன. இதை எப்படி உங்கள் பகவான் சகித்துக் கொண்டிருக்கிறார்?' என்று கூறி பகவத் கீதை புத்தகத்தைப் பிடுங்கி, அந்த சுலோகத்தின் மேல் மூன்று விரல்களால் கீறினாள். பிறகு அவளும் பட்டினியுடன் படுக்கச் சென்று விட்டாள். கீதா பண்டாவும் மன வருத்தத்துடன் உறங்கச் சென்றார்.
விடியல் நேரத்தில் வாயிற் கதவு தட்டப்படும் சப்தம் கேட்டு அவரின் மனைவி கதவை திறந்தாள். வெளியில் கருப்பு நிறத்தில் ஒரு சிறுவனும், வெள்ளை நிறத்தில் ஒரு சிறுவனும் கைகளில் பெரிய மூட்டையுடன் நின்று கொண்டு இருந்தார்கள்.
"நீங்கள் இருவரும் யார்?"
"ஓ... நாங்களா? பண்டாவின் சிநேகிதரின் புத்திரர்கள்."
"என்ன வேண்டும் உங்களுக்கு?"
"எங்களுக்கு எதுவும் வேண்டாம். அவரின் சிநேகிதர் இதை உங்கள் இல்லத்தில் கொடுத்து வரச் சொன்னார். அதற்காகத்தான் வந்தோம். இதில் நிறைய சமைப்பதற்கு உண்டான தானியங்களும் காய்களும் இருக்கின்றன. சமைத்து வயிறார உண்ணுங்கள்."
"அப்படியா? மிகவும் சந்தோஷம். என் கணவரின் சிநேகிதரா கொடுத்து அனுப்பினார்? நான் சமைக்கிறேன். நீங்கள் இருவரும் இங்கேயே இருந்து எங்களுடன் சேர்ந்து சாப்பிடலாமே."
"நன்றி அம்மா. வேண்டாம். ஏனென்றால் இதோ என் நாக்கைப் பாருங்கள். மூன்று கீறல்கள் விழுந்து இருக்கின்றன அல்லவா? புண்ணாகி இருக்கிறது. என்னால் எதுவும் சாப்பிட முடியாது. நான் சாப்பிடவில்லை என்றால் அவனும் சாப்பிட மாட்டான். அதனால் சென்று வருகிறோம்" என்று கூறிவிட்டு இருவரும் தானிய முட்டையை வைத்து விட்டு அகன்றனர்.
பண்டாவின் சிநேகிதர் தானியங்களைக் கொடுத்த அனுப்பியதை கூறுவதற்காக, கணவரின் அறைக்குச் சென்று அவரை எழுப்பி நடந்தவற்றைக் கூறினாள்.
"வந்தவர்களுக்கு சமைத்து பிரசாதம் ஏதாவது கொடுத்தாயா?"
"இல்லை. நான் பிரசாதம் சாப்பிட்டு விட்டு போகும்படிதான் சொன்னேன். ஆனால், கருப்பாக இருந்த சிறுவன், தனது நாக்கில் கீறல்கள் விழுந்திருப்பதைக் காட்டி உணவு உண்ண முடியாது. அதனால் சென்று வருகிறோம் என்று கூறிவிட்டு போய்விட்டான். இருவருமே அகன்று விட்டார்கள். அதனால் அவர்களுக்கு எதுவும் என்னால் கொடுக்க முடியவில்லை. நான் என்ன செய்ய முடியும்?" என்று கூறிவிட்டு சமையல் வேலையைத் தொடங்க ஆரம்பித்தாள்.
தன் மனைவி பகவத் கீதையில், குறிப்பிட்ட ஸ்லோகத்தில், மூன்று விரல்களால் கீறியதை கீதா பண்டா நினைவு கூர்ந்தார்.
தனது மனைவியிடம், "பகவான் தன் நாக்கினால் மொழிந்த ஸ்லோகத்தை நீ உன் விரல்களால் கீறினாய் அல்லவா? அதுதான் அவரின் நாக்கில் கீறல்களாக விழுந்து உள்ளன. இது புரியவில்லையா உனக்கு? அந்த ஸ்லோகத்தின் அர்த்தத்தை இப்பொழுதாவது புரிந்து கொள்கிறாயா? பகவான் தன்னுடைய பக்தனையும், அவன் பொருட்களையும் நிச்சயம் ரட்சிப்பான் என்பதை நன்கு உணர்ந்துகொள். உனக்கு நம்பிக்கை இல்லை என்றால் விலகிப்போ. என்னுடைய நம்பிக்கையில் குறை காணாதே" என்றார்.
ஸ்ரீமத் பகவத் கீதையில் கூறியபடி தனது பக்தனுக்கு அருள்பாலித்ததை உணர்ந்த கீதா பண்டாவின் மனைவி, கணவரிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டு, தனக்கு ஜெகந்நாதரை தரிசனம் செய்ய வேண்டும் என்று கூறி, அவரை கோயிலுக்கு அழைத்தாள். கீதா பண்டாவும், அவரது மனைவியும் ஜகந்நாத சுவாமியை தரிசிக்க கோயிலுக்குச் சென்றார்கள். கோயிலின் பலி பீடத்தை அடைந்தவர்கள், ஜகந்நாதரின் உதடுகளில் மூன்று தழும்புகள் இருப்பதை கவனித்தார்கள். பகவானுக்கு தன்னால்தான் அவ்வாறு தழும்பு ஏற்பட்டு இருப்பதை கீதா பண்டாவின் மனைவி உணர்ந்தாள். இருவரும் பகவான் இடத்தில் கண்ணீர் மல்க மன்னிப்பைக் கேட்டுக் கொண்டு, பொருட்கள் கொடுத்து ரட்சித்ததற்கு நன்றியையும் தெரிவித்துக் கொண்டார்கள். பகவானின் மேல் முழு நம்பிக்கையை வைத்து, பக்தையாகி, 'ஜெய் ஜெகந்நாத்' என்று ஆவேசம் பொங்க கைகளைக் கூப்பி கதறிய மனைவியை, சந்தோஷத்துடன் கூட்டிக்கொண்டு இல்லம் திரும்பினார் கீதா பண்டா.
நம்பினார் கெடுவதில்லை இது நான்குமறை தீர்ப்பு.