கனடா, அமெரிக்கா போன்ற நாடுகளில் இந்து பண்டிகைகள் மற்றும் விரதங்கள் சில சமயங்களில் தமிழ் நாட்டில் நடப்பதற்கு ஒரு நாள் முன்னதாகவே நடக்கும். உதாரணத்திற்கு, தமிழ் நாட்டில் ஆடிப்பெருக்கு ஆகஸ்ட் 3ம் தேதி, சனிக்கிழமை. ஆனால், கனடாவில் ஆகஸ்ட் 2ம் தேதி வெள்ளிக்கிழமை. ஆடி அமாவாசை கனடாவில் ஆகஸ்ட் 3, சனிக்கிழமை. தமிழ்நாட்டில் அடுத்த நாள் அமாவாசை. இதைப் போலவே பிரதோஷம், ஏகாதசி, சதுர்த்தி போன்ற விரத நாட்களும் சில சமயங்களில் முன்னதாக வந்து விடும். கனடாவின் கால நேரம், இந்திய நேரத்திற்கு ஒன்பதரை மணி நேரம் பின் தங்கியிருக்கும் நிலையில் இது எப்படி சாத்தியம் என்று கேட்கிறீர்களா?
முக்கியக் காரணம், இந்து பண்டிகைகளும், விரத நாட்களும் தேதியைக் குறித்து கணக்கிடப்படுவதில்லை. இந்த நாட்கள் திதி, நட்சத்திரம் ஆகியவற்றைப் பொறுத்து அனுஷ்டிக்கப்படுகின்றன. ஆடி மாதப் பிறப்பு, அதாவது ஆடி மாதம் முதல் நாள் தமிழ் நாட்டில் ஜூலை 17, புதன் கிழமை. ஆனால், கனடாவில் ஜூலை 16, செவ்வாய்க்கிழமை ஆடி மாதம் முதல் நாள். இது எப்படி என்று அறிய மாதத்தின் முதல் நாள் எப்படிக் கணக்கிடப்படுகிறது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
பூமி தன்னைத்தானே சுற்றிவரும் நேரத்தை ஒரு நாள் என்றும், சூரியன் ஒரு ராசியில் சஞ்சரிக்கும் கால அளவை தமிழ் மாதங்கள் என்றும் கணக்கிடுகிறோம்.
இந்து சமய முறைப்படி ஒரு நாளின் தொடக்கம் சூரிய உதயம். ஆகவே, இந்து நாட்காட்டியின்படி ஒரு நாள் என்பது குறிப்பிட்ட நாளின் சூரிய உதயம் முதல் அடுத்த நாள் சூரிய உதயம் வரை. பூமி தன்னைத்தானே சுற்றுவதும், சூரியன் ஒரு ராசியில் நுழைவதும் இரண்டு தனித்தனி நிகழ்வுகள். ஆகவே, சூரிய உதயமும், சூரியனின் ராசி பிரவேசமும் ஒரே சமயத்தில் நிகழ முடியாது. சூரியன் குறிப்பிட்ட ராசியில் நுழையும் நேரம் மாதத்தின் முதல் நாளாகக் கணக்கிடப்படுகிறது.
சூரியன் ராசியில் நுழையும் நேரம் அந்த நாளில் சூரிய உதயத்திற்கும் சூரியன் மறைவிற்கும் நடுவில் நிகழ்ந்தால், (அதாவது நாளின் முன் பகுதி) அந்த நாள் மாதத்தின் முதல் நாளாகக் கொள்ளப்படுகிறது. அதுவே சூரியன் மறைவிற்குப் பிறகு (நாளின் பிற்பகுதி) சூரியன் ஒரு ராசியில் பிரவேசித்தால் அடுத்த நாள் மாதத்தின் முதல் நாளாகக் கருதப்படுகிறது.
சூரியன் கடக ராசியில் பிரவேசித்தது இந்திய நாட்காட்டியில் ஜூலை 16ம் தேதி பின்பகுதி. ஆகவே, ஜூலை 17ம் தேதி ஆடி மாதம் ஒன்றாம் தேதி என்று எடுத்துக்கொள்ளப்பட்டது. சூரியன் கடக ராசியில் பிரவேசித்த நேரம் கனடாவில் ஜூலை 16ம் தேதியின் முன்பகுதி. ஆகவே, கனடா தமிழ் பஞ்சாகத்தில் ஜூலை 16ம் தேதி ஆடி மாதம் முதல் நாள்.
தமிழ் புத்தாண்டான குரோதி பிறந்தது கனடாவில் ஏப்ரல் 13, சனிக்கிழமை. தமிழ் நாட்டில் ஏப்ரல் 14, ஞாயிற்றுக்கிழமை. அதைப்போலவே, அடுத்த தமிழ் புத்தாண்டான விசுவாவசு, கனடாவில் ஏப்ரல் 13 உதயமாக, தமிழ் நாட்டில் அடுத்த நாள் வருடப் பிறப்பு. குரோதி வருடத்தில் சித்திரை, ஆனி, ஆடி, ஆவணி, ஐப்பசி, மார்கழி, மாசி, பங்குனி ஆகிய எட்டு மாதங்களில் மாதப் பிறப்பு, கனடாவில் தமிழ் நாட்டிற்கு ஒரு நாள் முன்னதாகவே வரும்.