அமிர்தம் வேண்டி தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது அதிலிருந்து மின்னலாகத் தோன்றியவள்தான் மகாலட்சுமி. தாமரையில் அமர்ந்திருந்த மகாலட்சுமி தனது இரு கைகளிலும் தாமரைகளையே ஏந்தி இருந்தாள். முனிவர்கள் வேத மந்திரங்களாலும், கந்தர்வர்கள் இன்னிசையாலும் அவளைத் துதித்தார்கள்.
யானைகள் தங்கப் பானைகளால் மகாலட்சுமியின் மேல் பன்னீரை சொரிந்தன. இந்திரன் அவளுக்குச் சிம்மாசனமும், கடலரசன் பட்டு வஸ்திரமும், வருண பகவான் மாலைகளும், விஸ்வகர்மா நகைகளும் அளித்தார்கள். இவளே அனைத்து உலகுக்கும் அரசி என்று சொன்ன தேவர்களும் ரிஷிகளும் அவளுக்குப் பட்டாபிஷேகம் செய்து வைத்தார்கள்.
அங்கேயே தனது சுயம்வரத்தை நடத்த விரும்பினாள் மகாலட்சுமி. தேவர்களும் முனிவர்களும் ஆவலுடன் வரிசையில் நின்றார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் தம்மிடம் அனைத்து நற்பண்புகளும் இருப்பதாகவும், மகாலட்சுமி தன்னையே தேர்ந்தெடுப்பாள் என்றும் கருதினார்கள்.
அந்த வரிசையில் முதலாவதாக துர்வாச முனிவர் நின்று கொண்டிருந்தார். அவர் பெரிய தபஸ்வி. ஆனால், கோபம் மிகுந்தவர். அதனால், அவரை நிராகரித்தாள் மகாலட்சுமி.
அடுத்து நின்றவர் சுக்ராச்சார்யார். மகா ஞானி. ஆனால், புலனடக்கம் இல்லாதவர். அடுத்து நின்ற சந்திரனோ, அளவில்லாத ஆசை உடையவர். கார்த்தவீர்யார்ஜுனன் பெரும் வீரனாக இருந்தாலும்,நிலையில்லாத செல்வங்களை நிலையென எண்ணி வாழ்பவன்.
சனத்குமாரர் போன்றோர் எப்போதும் தவத்தில் ஈடுபட்டிருப்பதால், மனைவியைக் கவனிக்க மாட்டார்கள் என்ற அடிப்படையில் அவர்களையும் நிராகரித்தாள் மகாலட்சுமி.
இப்படி ஒவ்வொரு காரணத்தைச் சொல்லி தேவர்களையும் முனிவர்களையும் நிராகரித்து வந்து மகாலட்சுமி, இறுதியாகத் திருமாலின் முன்னே வந்து நின்றாள். அவரிடம் அனைத்துக் கல்யாண குணங்களும் பரிபூர்ணமாக நிறைந்திருப்பதைக் கண்டாள் மகாலட்சுமி.
திருமால், "திருமகளே வருக!" என்று ஒரே ஒரு வார்த்தையில் அவளது இதயத்தையே கவர்ந்து விட்டார். திருமாலின் அழகாலும், நற்பண்புகளாலும், இளமையாலும், கருணையாலும், ‘வருக!’ என்ற வார்த்தையாலும் ஈர்க்கப்பட்ட மகாலட்சுமி அவருக்கு மாலையிட்டாள். மாலையிட்டதோடு மட்டுமின்றி, அவரது மார்பில் ஏறி அமர்ந்து கொண்டாள்.
அதுவரை திருமாலின் மார்புக்கு ஆபரணமாக இருந்த வனமாலை அன்று முதல் மகாலட்சுமிக்கு ஊஞ்சலாக மாறிவிட்டது என்று ஸ்ரீகுணரத்ன கோசத்தில் பராசர பட்டர் தெரிவிக்கிறார்.
இப்படித்தான் மகாலட்சுமி மாதவனின் கழுத்தில் மாலையிட்டு மார்போடு ஒட்டி உறவாடி வையத்தை கோவிந்தனோடு சேர்ந்து காத்து வருகிறாள்.