ஸ்ரீ கிருஷ்ணன் குடிகொண்ட தலத்துக்கு குருவுக்கும் வாயுவுக்கும் ஏன் மரியாதை?

ஸ்ரீ கிருஷ்ணன் குடிகொண்ட தலத்துக்கு குருவுக்கும் வாயுவுக்கும் ஏன் மரியாதை?
Published on

கேரளம் மாநிலம், திருச்சூர் மாவட்டத்தின் குருவாயூரில் உள்ளது அருள்மிகு குருவாயூரப்பன் திருக்கோயில். இக்கோயில் மூலவர் உன்னிகிருஷ்ணன் என அழைக்கப்படுகிறார். இப்பெருமான் கல்லிலோ அல்லது வேறு உலோகத்திலோ வடிக்கப்பட்டவர் இல்லை. ‘பாதாள அஞ்சனம்’ எனப்படும் மையால் உருவாக்கப்பட்டவர். பகவான் ஸ்ரீ கிருஷ்ணனின் இந்தத்  திருச்சிலை குருவாயூர் திருத்தலத்தில் பிரதிஷ்டையானதற்கு ஒரு சுவாரஸ்யமான வரலாறு கூறப்படுகிறது.

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தமது அவதார நோக்கம் முடிவுற்றதும் மீண்டும் வைகுந்தம் செல்வதற்கு ஆயத்தமானார். அப்போது ஸ்ரீ கிருஷ்ணரின் நண்பரும் சீடருமான உத்தவர், “கிருஷ்ணா! நீங்கள் இல்லாத இந்த உலகைக் கற்பனைகூடச் செய்துபார்க்க முடியவில்லையே!” என்றார்.

அதற்கு பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், “உத்தவா, எனது அவதார நோக்கம் பூர்த்தியானதும் எனது யதா ஸ்தானம் திரும்புவதுதானே முறை?” என்றார்.

அதைக்கேட்ட உத்தவர், “நீங்கள் இல்லாமல் எங்களால் எப்படி இவ்வுலகில் இருக்க முடியும்? நாங்கள் என்ன செய்வோம்?” என்று கவலையுடன் ஸ்ரீ கிருஷ்ணரிடமே வேண்டினார்.

உடனே பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், “கவலையை விடு உத்தவா! நான் இல்லாத குறையை இதோ பிரம்மா எனக்கு வழங்கிய இந்த ஸ்ரீமந்நாராயண விக்கிரகம் தீர்த்து வைக்கும். எனது இந்த அவதார முடிவில் ஏழு நாட்களுள் துவாரகையைக் கடல் கொள்ளும். அப்போது அந்த வெள்ளத்தில் இந்த விக்கிரகம் மிதந்து வரும். தேவகுரு பிருஹஸ்பதியைக் கொண்டு இதைத் தகுந்த இடத்தில் பிரதிஷ்டை செய்” என பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் உத்தவரிடம் கூறினார்.

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் சொன்னதுபோலவே துவாரகையை கடல்கொள்ளத் துவங்கியது. கண்ணபரமாத்மாவின் கட்டளையை சிரமேற்கொண்ட வாயு பகவான் புயலாய் மாறினார். அடைமழை கொட்டித் தீர்த்தது. கடல் துவாரகைக்குள் புகுந்தது. உத்தவர் வசம் இருந்த ஸ்ரீமந்நாராயண விக்கிரகம் கடலில் மிதந்தது. குரு பகவான் அதை எடுத்துச் சென்று பூலோக சொர்க்கமான குருவாயூரில் பிரதிஷ்டை செய்ததாக வரலாறு. இவ்விதமே குரு பகவானும், வாயு பகவானும், கண்ணனின் திருச்சிலையை குருவாயூரில் பிரதிஷ்டை செய்தனர். பகவான் ஸ்ரீகிருஷ்ணன் தாம் குடிகொண்ட திருத்தலத்துக்கு தமது பெயரை சூட்டிக்கொள்ளாமல், தமது சிலை பிரதிஷ்டையாகக் காரணமாக இருந்த குருவுக்கும் வாயுவுக்கும் மரியாதை செய்யும் விதமாக, குரு + வாயு + ஊர் = குருவாயூர் எனப் பெயர் சூட்டினார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com