
முப்பெரும் தெய்வங்களில் ஒருவரான பிரம்மாவுக்கு இருந்த பெருமைகளில் ஒன்று தான் ஐந்து முகங்கள். தனக்கு ஐந்து முகங்கள் இருந்த பெருமையில் ஆணவத்தின் காரணமாக பிரம்மா தனது ஒரு முகத்தை சிவபெருமான் மூலம் பெற்ற சாபத்தினால் இழந்து நான்முகனாக வழிபடும் பெருமை இழந்த கதையும் அறிவோம்.
ஆனால் எந்த ஆணவமும் இல்லாமல் தெய்வங்களிலேயே பராக்கிரமிக்க அதே சமயம் பணிவுடன் விசுவாசம் மிக்க தெய்வமாக மனிதர்களின் வாழ்வியலோடு பொருந்தி எவ்வித வேறுபாடுமின்றி அனைவராலும் ஏற்றுக்கொள்ளும் ஒரு தெய்வமாக வழிபடப்படுபவர் தான் ஆஞ்சநேயர் எனும் அனுமன். இவரும் ஐந்து முகங்களுடன் பஞ்சமுக ஆஞ்சநேயராக வழிபடப்படுவது சிறப்பு. அத்துடன் இவரது தனித்துவமான உருவம் குழந்தைகளிடம் கூட கவனத்தையும் ஆர்வத்தையும் ஈர்ப்பது சிறப்பு.
புராண வரலாறு:
பஞ்சமுக ஹனுமானின் கதை ராமாயணத்தின் பகுதியாக கூறப்படுகிறது. மாயையில் வல்லவரும் ராவணனின் சகோதரருமான அஹிரவணா அல்லது மயில்ராவணன் காளிதேவிக்கு பலி தரும் எண்ணத்துடன் ராமரையும் லட்சுமணனையும் கடத்திச் சென்று பாதாள லோகத்தில் சிறை வைத்தான்.
அவர்களை மீட்க வந்த அனுமனால் அரக்கனை வதம் செய்ய முடியவில்லை. காரணம் அஹிரவன் ஒரு தனித்துவமான வரம் பெற்றிருந்தான். அவனது உயிர் ஐந்து திசைகளில் வைக்கப்பட்ட ஐந்து எண்ணெய் விளக்குகளில் சேமிக்கப்பட்டு ஐந்தும் ஒரே நேரத்தில் அணைக்கப்பட்டால் மட்டுமே அவன் மரணம் நிகழும் என்பதே அது.
அஹிரவணுடன் போரிட்ட அனுமன் பஞ்சமுக அனுமனாக மாறி, ஐந்து தலைகளையும் மகத்தான சக்தியையும் பெற்றார். ஒவ்வொரு முகமும் வெவ்வேறு திசையில் பார்த்த தெய்வீக வடிவத்துடன் இருந்த அனுமன் ஒரே நேரத்தில் விளக்குகளை ஊதி, அரக்கனை அழித்து, ராமரையும் லட்சுமணனையும் மீட்டார் என்கிறது புராணக்கதைகள்.
இந்த ஐந்து முகங்களும், கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு மற்றும் மேல் திசைகளை நோக்கியுள்ளன. ஒவ்வொரு முகமும் ஒரு குறிப்பிட்ட ஆற்றலையும், பலனையும் குறிப்பதாக கூறப்படுகிறது. 'பஞ்சமுக ஆஞ்சநேயர் தத்துவம்' என ஆன்மிகம் சிறப்பிக்கும் இந்த ஐந்து முகங்கள் நமக்கு சொல்லும் செய்தி என்ன? இங்கு காண்போம்.
1. கிழக்கு முகம் (அனுமன் முகம்): ஆஞ்சநேயரின் உண்மையான சுயரூபத்தைக் குறிக்கும் இந்த முகம் கிழக்கு, புதிய தொடக்கங்கள் மற்றும் ஞானத்துடன் தொடர்புடைய கிழக்கு நோக்கி உள்ளது. இது பக்தி, தீர்க்கமான அறிவு, புத்திக்கூர்மை, மற்றும் செயலில் வலிமை ஆகியவற்றைக் குறிக்கிறது.
2. தெற்கு முகம் (நரசிம்ம முகம்): ஸ்ரீநரசிம்மரின் அம்சத்துடன் மரணம் மற்றும் மாற்றத்தைத் தரும் தெற்கு திசை நோக்கிய இந்த முகம் பயம், எதிர்மறை ஆற்றல் மற்றும் தீய சக்திகளை அழிக்கும் ஆற்றலுடன் அச்சத்தில் இருந்து நம்மை விடுவிக்கிறது.
3. வடக்கு முகம் (வராக முகம்): வளர்ச்சி மற்றும் நிலைத்தன்மையைக் குறிக்கும் வடக்கு முகம் வராகரின் அம்சத்தைக் குறிக்கிறது. விஷ்ணுவின் பன்றி அவதாரமான இது பூமிக்குரிய வலிமை, சாபங்கள் மற்றும் எதிர்மறையிலிருந்து ஒருவரை விடுவித்தல், செல்வ செழிப்பு, அமைதி மற்றும் நல்ல அதிர்ஷ்டத்தைக் குறிக்கிறது.
4. மேற்கு முகம் (கருட முகம்): தீமைகளிலிருந்து பாதுகாத்தல் மற்றும் நீக்குதல் ஆகியவற்றைக் குறிக்கும் மேற்கு முகம் கருடனின் அம்சமாக சரும நோய், விஷ நோய், ஊழ்வினை நோய்களை போக்கி அருள்தருகிறது. மேலும் விஷங்கள், பாம்புக்கடிகள் மற்றும் சூனியம் ஆகியவற்றிலிருந்து பாதுகாப்பு தருகிறது.
5. மேல் முகம் (ஹயக்ரீவ முகம்): ஆன்மீக விழிப்புணர்வைக் குறிக்கும் விதமாக மேல் நோக்கி காணப்படும் இந்த முகம் ஹயக்ரீவரின் அம்சத்தைக் குறிக்கிறது. இது அறிவு, தெளிவு, ஞானம், கல்வி மற்றும் பேச்சுத்திறன் ஆகியவற்றைக் குறிக்கிறது.
பஞ்சமுக அனுமனை வழிபடுவதால் கிடைக்கும் நன்மைகள்:
பில்லி சூனியம் ,தீய சக்திகள் அச்சம் அல்லது கெட்ட கனவுகள், கடுமையான உடல்நலக் கவலைகள் ,மன உளைச்சல், நிதி உறுதியற்ற தன்மை, வாழ்க்கையில் நம்பிக்கை இழத்தல் போன்ற அனைத்து கவலைகளில் இருந்தும் பஞ்சமுக அனுமன் காக்கிறார் என்பது பக்தர்கள் நம்பிக்கை. இதன் காரணமாகவே அவரது சிலைகள் அல்லது படங்களை அலுவலகங்கள் மற்றும் வீடுகளில் வைத்து வழிபடுகின்றனர்.
பக்தர்களை அனைத்து திசைகளிலிருந்தும் பாதுகாக்கின்றன - மேலும் ஐந்து புலன்கள் மற்றும் ஐந்து கூறுகள் (பூமி, நீர், நெருப்பு, காற்று மற்றும் ஆகாயம்) மீதான பாதுகாப்பு தரும் பஞ்சமுகங்களை நாமும் ஆராதித்து நன்மைகள் பெறுவோம்.