அற்புதப் பலன்களைத் தரும் ஆடி வெள்ளி வழிபாடு!

அற்புதப் பலன்களைத் தரும் ஆடி வெள்ளி வழிபாடு!
Published on

டி மாதம் அம்மனுக்கு மிகவும் உகந்த காலமாகும். அதுவும் ஆடி வெள்ளிக்கிழமையன்று அம்மன் வழிபாடு செய்வது, சகல பாக்கியங்களையும் பெற்றுத் தருவதாகும். எத்தனை வெள்ளிக்கிழமைகள் வந்தாலும், ஆடி வெள்ளிக்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு. சிவனின் சக்தியை விட, ஆடி மாதத்தில் அம்மனின் சக்தி அதிகமாக இருககும். ஆடி மாதத்தில் மட்டும் சிவன், சக்திக்குள் அடக்கம் என்பது ஐதீகமாகக் கருதப்படுகிறது.

பொதுவாக, சுக்ர பலம் பொருந்திய வெள்ளிக்கிழமைகளில் அம்மனையும் மகாலக்ஷ்மியையும் வணங்கும்போது, மாங்கல்ய பலம், செல்வச் செழிப்பு போன்ற அனைத்து நன்மைகளும் கிடைக்கும். எனவே, ஆடி வெள்ளிக்கிழமைகளில் பெண்கள் விரதமிருந்து அம்மனை வணங்கி வழிபட்டால் நல்ல பலன்களைப் பெறலாம்.

அம்மன் கோயில்களில் இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி ஆகிய முப்பெரும் தேவியரும் ஆடி வெள்ளிக்கிழமைகளில், முதல் மூன்று வாரங்கள் பூ அலங்காரம் செய்தும், நான்காவது வாரம் காய் அலங்காரம் செய்தும், ஐந்தாவது வாரம் பழ அலங்காரம் செய்தும் வழிபடப்படுவார்கள். ஆடி வெள்ளியன்று துர்கையம்மனை ராகு காலத்தில் எலுமிச்சை விளக்கு ஏற்றி வழிபட்டால், மணமாகாத கன்னிப் பெண்களுக்கு நல்ல வரன் அமையும்.

ஆடி வெள்ளிக்கிழமைகளில் பெண்கள் விரதமிருந்து வீடுகளிலும் கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் செய்வார்கள். தங்கள் குல வழக்கப்படி, கணவர் நலம் மற்றும் குடும்ப நன்மை வேண்டி அம்மனிடம் பிரார்த்தனை செய்வார்கள். திருமணமாகாத பெண்களுக்கு விரைவில் திருமணம் கைகூடவும் விரதம் இருந்து வேண்டிக்கொள்வார்கள்.

ஆடி வெள்ளிக்கிழமைகளின் மாலை நேரத்தில் ஆலயங்களில் குத்துவிளக்கு பூஜை நடைபெறும். அதில் 108 அல்லது 1008 விளக்குகள் வைத்துப் பூஜை செய்வார்கள். அப்போது சுமங்கலிப் பெண்களுக்கு தேங்காய், பழம், வெற்றிலைப் பாக்கு, மஞ்சள், குங்குமம் ஆகியவற்றோடு ரவிக்கைத் துணியும் வைத்துத் தருவது நலம் சேர்க்கும்.

கோயில்களில் மட்டுமின்றி, வீடுகள்தோறும் விரதம் இருந்து வேப்பிலை தோரணம் கட்டி, அம்மனை வழிபட்டு நேர்த்திக்கடன் நிறைவேற்றி கூழ் ஊற்றுவார்கள். ஆடி வெள்ளியன்று பால் பாயசம், சர்க்கரைப் பொங்கல் படைத்து பூஜை செய்வார்கள். தவிர, இன்று அம்மன் கோயிலில் உள்ள புற்றுகளுக்கு பால் வார்த்துக் குலம் தழைக்க வேண்டிக்கொண்டால் நன்மைகள் கிடைக்கும்.

அம்மனுக்குப் பிடித்த உணவு வகைகள் வேம்பு, எலுமிச்சை, கூழ் ஆகியவை ஆகும். இவை உடல் நலத்துக்கு நன்மை அளிப்பவை. வியாதிகளைத் தடுப்பதற்கும் உதவுகின்றன. ஆடி கடைசி வெள்ளிக்கிழமை மகாலக்ஷ்மிக்கு உகந்த வரலக்ஷ்மி விரதம் மேற்கொண்டு வழிபாடு செய்தால் வளங்கள் அனைத்தும் வந்து சேரும். பக்தர்கள் அனைவரும் ஆடி வெள்ளிக்கிழமையன்று அம்மனை வேண்டி, வழிபாடு செய்து பயன் பெறுவோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com