அச்சம் தீர்க்கும் சரபேஸ்வரர் வழிபாடு!

Worship of Sarabeswarar who removes fear
Worship of Sarabeswarar who removes fear

சாவதாரங்கள் வரிசையில் பக்தன் பிரகலாதனுக்காக எடுத்தது நரசிம்ம அவதாரம். இந்த அவதாரத்திற்கும் பரமேஸ்வரன் எடுத்த சரபேஸ்வர அவதாரத்துக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. ஐம்பெரும் பூதங்களிலும், ஆத்மாவிலும் உறைந்து எங்கும் வியாபித்துள்ள விஷ்ணு பகவான்  விலங்கும் இன்றி, மனிதனுமின்றி அதி அற்புதமான வடிவத்தில் கூடியிருந்த அனைவரும் காண வெளிப்பட்டார். ‘திசை திறந்து அண்டங்கீறி சிரித்தது செங்கட்சியம்’ என்பார் கம்பர்.

அடிபணிய மறுத்த அரக்கனைக் கொன்று குருதியை குடித்து ஆரவாரத்துடன் இருந்த நரசிம்மத்தின் சினம்  கண்டு தேவரும் அஞ்சினர். ‘நரசிம்மன் எங்கே உலகங்களை அழிந்து விடுமோ’ என அனைவரும் அதிர்ந்தபோதுதான் நரசிம்மத்தின் உக்ரம் தணிக்க சரபேஸ்வர அவதாரம் நிகழ்ந்தது.

தேவர்கள் சிவனிடம் வேண்ட, பரமேஸ்வரன் நரசிம்ம சினம் அடக்க வீரபத்திரரை அனுப்பினார். வீரபத்திரரும் நரசிம்ம மூர்த்தியின் முன் சென்று துதித்தார். “அரக்கனை அழித்து உலகிற்கு நன்மை செய்த தாங்கள் இந்த கோர ரூபத்தையும் கோபத்தையும் அடக்கி சாந்தமடைய வேண்டும்" என பணிந்தும் சினமடங்காமல் நரசிம்மர் வீரபத்திரரை கட்டி துன்புறுத்த, வீரபத்திரர் சிவபெருமானை நோக்கி  தியானம் செய்தார். அதுசமயம் ஒரு ஜோதி வீரபத்திரரின் உடலில் புக, பாதி பயங்கர மிருகமாகவும் மீதி பாதி பயங்கர பட்சியாகவும் உருவெடுத்தது. அதுவே சரபம். அப்படித் தோன்றிய சரபேஸ்வரர் இறக்கைகளாலும் கால்களாலும் நரசிம்மத்தை கட்டி அணைத்து சினம் தணித்து உலகைக் காப்பாற்றினார். குருதியை குடித்ததால் ஏற்பட்ட  ராஜகுணம் நீங்கி, ஸ்ரீமன் நாராயணனும் சாந்தமானார்.

ஈஸ்வரனின் அம்சமான சரபேஸ்வரர் சந்திரன், சூரியன், நெருப்பு மூன்றையும் கண்களாகக் கொண்டு கூர்மையான நகங்கள், நான்கு புறமும் சுழலுகின்ற அதி உக்ரமான நாக்கு, காளி, துர்கா இருவரையும் இறக்கைகளாகக் கொண்டு சண்ட மருதம் போல் மித வேகத்துடன் பறந்து எல்லா பகைவர்களையும் அழிக்கும் பட்சிகளின் அரசனாக, ‘சாலுவேஷன்’ என்ற திருநாமத்துடன் விளங்குகிறார் சரபேஸ்வரர்.

சரபேஸ்வரரின் சக்திகளாக விளங்குபவர்கள் பிரத்யங்கிராவும் சூலினி துர்காவும்.  அவர்கள் இருவரும் சரபேஸ்வரரின்  இரு இறக்கைகளாக விளங்குகிறார்கள்.  நரசிம்மத்தை அடக்க உதவிய பிரத்யங்கிரா என்பவள் அதர்வண பத்ரகாளி எனப்படுகிறார்.

சரபர் தனது கையில் மான், மழு, சர்பம், தீ இவற்றை வைத்துக்கொண்டு உள்ளார்.  நான் எனும் அகந்தையை அழிக்க சத்துவ குணம் கொண்டு மனதை ஒரு நிலைப்படுத்தி குண்டலினி சக்தியை எழுப்பி, ஆத்ம ஞானம் பெற வேண்டும் என்பதையே இந்த வடிவமைப்பு விளக்குகிறது. கொடிய பகைவரை அழித்து, தீராத இன்னல் தீர்த்து சரண் அடைந்தவருக்கு அபயம் அளிக்கும் தெய்வம் சரபமூர்த்தி என்று வேதங்கள் போற்றுகின்றன. பகைவர், நோய், வனத்தில் பயம், தீ விபத்து, பாம்பு, எலி, பெருச்சாளி முதலான உயிரினங்களால் உண்டாகும் இழப்பு, யானை, கரடி மற்றும் உள்ள பூதங்களால் ஏற்படும் கொடுமைகளிலிருந்து மக்களைக் காக்க வேண்டும் சரபரே என்று அதர்வண வேத மந்திரம் குறிப்பிடுகிறது.

இதையும் படியுங்கள்:
உடல் அழுக்கானால் நீராடலாம்; உள்ளம் அழுக்கானால்…?
Worship of Sarabeswarar who removes fear

பகைமையை அழிப்பதே சரப மந்திரத்தின் மிகப்பெரிய சக்தியாகும். மனிதர்களின் அகப்பகையாகிய காமம், குரோதம் முதலானவற்றை அழித்து மனிதனை செம்மைப்படுத்துவதே சரப மந்திரத்தின் நோக்கமாகும்.

ஸ்ரீ சரபரின் தரிசனம் சத்ருக்களால் ஏற்படக்கூடிய ஏவல், பில்லி, சூனியம் போன்ற தோஷங்களை நீக்கி நம்மைக் காக்கும். பிரதோஷ காலம் மற்றும் ஞாயிறு மாலை ராகு காலத்தில் சரபேஸ்வரரை வழிபட்டால் சத்ரு பயம் நீங்கி, மன அமைதியுடன் வாழலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com