குரு பகவானின் அம்சமாகத் திகழும் குரு தட்சணாமூர்த்தி சிவனாரின் வடிவங்களில் ஒன்றான சிவஞானபோதகம். சிவனாரின் வடிவமான தட்சிணாமூர்த்தி, தெற்குப் பார்த்த கோலத்தில் இருப்பதால்தான், அவரது திருநாமம் தட்சிணாமூர்த்தி என்று அமைந்ததாகச் சொல்கிறது சிவபுராணம். வியாழக்கிழமை என்றதும் முதலில் நினைவுக்கு வருவதும் தட்சிணாமூர்த்தியே.
சனகாதி முனிவர்களுக்கு கல்லால மரத்தடியில் அமர்ந்தபடி, சிவபெருமானே தட்சிணாமூர்த்தி அம்சத்துடன் வந்து, உபதேசித்து அருளினார். அதனால்தான், ஞானமும் யோகமும் வேண்டுவோர், தட்சிணாமூர்த்தியை வணங்குங்கள் என அறிவுறுத்துகிறார்கள் ஆச்சார்யர்கள்.
‘தட்சிணம்’ என்றால் தெற்கு என்றும், ஞானம் என்றும் பொருள் உண்டு. ஞானத்தின் திருவுருவமாக அமர்ந்து தன்னை வழிபடுபவர்க்கு ஞானத்தை வழங்கி அருள்பவர் தட்சிணாமூர்த்தி. இவர் யோகம், ஞானம் (மேதா), வீணா, வியாக்யான தட்சிணாமூர்த்தி என நான்கு நிலைகளில் பெரும்பாலான கோயில்களில் விளங்குபவர் வியாக்யான தட்சிணாமூர்த்தியே ஆவார்.
வேதத்தின் பொருள் புரியாத சனகர், சனந்தனர், சனாதனர், சனத்குமாரர் என்ற நான்கு முனிவர்களுக்கு வேதத்தின் பொருளை விளக்கிக் கூறியதால் நான்கு முனிவர்களும் இவர் பாதத்தின் அடியில் வீற்றிருக்கின்றனர்.
சின்முத்திரை வடிவம்: வலது கை ஆட்காட்டி விரலின் நுனியும், கட்டை விரலின் நுனியும் பொருந்தியிருக்க, நடுவிரல், மோதிரவிரல், சுண்டுவிரல் ஆகிய மூன்றும் தனித்து நிற்கும் அடையாள சின்னத்தையே சின்முத்திரை என்பார்கள். இதில் கட்டை விரல் கடவுளையும், சுட்டுவிரல் மனிதனையும், நடுவிரல் ஆசையையும், மோதிர விரல் கர்மம் ஆகிய செயல்களையும், சுண்டுவிரல் மாயையையும் குறிக்கும். மனிதனை மாயை மறைத்து நின்று, ஆசையை ஏற்படுத்தி,கெட்ட கர்மங்களை செய்ய வைக்கிறது. அந்த மூன்றையும் மறந்துவிட்டு, இறைவனை வணங்கினால், இறைவனோடு ஐக்கியமாகலாம் என்பதே இதன் பொருளாகும்.
தட்சிணாமூர்த்தி மூல மந்திரத்தின் பலன்கள்:
தட்சிணாமூர்த்திக்குரிய மூலமந்திரம்:
‘ஓம் நமோ பகவதே தட்சிணாமூர்த்தயே
மஹ்யம் மேதாம் பிரக்ஞாம் ப்ரயச்ச நமஹ:’
சக்தி வாய்ந்த இந்த மந்திரத்தை தினமும் காலையில் பாராயணம் செய்வது விசேஷம். நற்பலன்களையெல்லாம் வழங்கும். அதேபோல், வியாழக்கிழமைகளிலும் பௌர்ணமி தினங்களிலும் சிவன் கோயில், கோஷ்டத்தில் வீற்றிருக்கும் தட்சிணாமூர்த்திக்கு எதிரே அமர்ந்து இந்த மந்திரத்தை தம்பதி சமேதராக பாராயணம் செய்து வழிபட்டால், தம்பதி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். குடும்பத்தில் வீண் சண்டையோ சச்சரவுகளோ ஏற்பட்டுக்கொண்டிருக்கும் நிலை மாறிவிடும். முகத்தில் தேஜஸ் குடிகொள்ளும். எடுக்கும் காரியங்களில் உங்களுக்கு வெற்றி உண்டாகும். வாக்குவன்மை பலமாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரத்தில் ஈடுபடுவோருக்கு லாபம் பன்மடங்கு பெருகும்.
தட்சிணாமூர்த்தி காயத்ரி மந்திரமும் பலன்களும்:
தட்சிணாமூர்த்தி காயத்ரி மந்திரம்:
‘ஓம் தட்சிணாமூர்த்தியே வித்மஹே
த்யாநஸ்தாய தீமஹி
தந்நோ தீஸஹ் ப்ரசோதயாத்’
வீட்டில் பூஜையறையில் அமர்ந்துகொண்டு, தட்சிணாமூர்த்தி காயத்ரி மந்திரத்தையும் மூல மந்திரத்தையும் ஜபித்து வாருங்கள். வீட்டில் உள்ள தரித்திர நிலை மாறிவிடும். சுபிட்சமும் ஐஸ்வரியமும் குடிகொள்ளும். மாணவர்கள், கல்வி கேள்விகளில் சிறந்து விளங்குவார்கள் என்பது ஐதீகம்.
தட்சிணாமூர்த்தி வழிபாடு: தட்சிணாமூர்த்திக்கு நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், நெய் ஆகியவை கலந்து விளக்கேற்றி வழிபட வேண்டும். 11 அல்லது 21 விளக்குகள் ஏற்றலாம். தட்சிணாமூர்த்தியை வலம் வரும்போது 3, 9, 11 ஆகிய எண்ணிக்கையில் சுற்றி வர வேண்டும். அவருக்குப் பிடித்த முல்லை அல்லது மல்லிகை. கொண்டைக்கடலை மாலை அணிவித்து, வெற்றிலை, பாக்கு, பழத்துடன் வழிபட வேண்டும்.