

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் பிராகார நந்தி, அதிகார நந்தி, அஷ்ட நந்தி ஆகியோருக்கு மாட்டுப் பொங்கலன்று சிறப்பு அபிஷேக அலங்காரங்களுடன் பூஜைகள் நடைபெறும். அப்போது சர்க்கரை பொங்கல், கரும்பு மற்றும் பல வகையான பழங்கள், வேர்க்கடலை உள்ளிட்டவை சமர்ப்பிப்பார்கள். அந்த சமயத்தில் கருவறை நந்தி தேவருக்கு முன்பாக அண்ணாமலையார் எழுந்தருளி காட்சி தருவார். சிவபெருமான் இன்று நந்திக்குக் காட்சி கொடுத்து ஆசி வழங்குவதாக ஜதீகம்.
வேலூர் மாவட்டம், ஆம்பூர் என்னும் ஊரிலிருந்து 5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது துத்திப்பட்டு வரதராஜ பெருமாள் ஆலயம். இங்கு அருள்புரியும் பெருமாள் (உத்ஸவர்) தை மாதம் காணும் பொங்கலன்று இத்திருக்கோயிலுக்கு அருகே உள்ள நிமிஷாசல மலையைச் சுற்றி வலம் வரும் நிகழ்ச்சி நடைபெறும். இந்த மலையில் ரோமாரிஷி என்னும் மகரிஷி இன்றும் தவம் இருப்பதாகவும் அவருக்குக் காட்சி கொடுக்கவே பெருமாள் மலையை வலம் வருவதாகக் கூறப்படுகிறது. காணும் பொங்கலன்று பெருமாளுடன் திருமணமாகாத ஆண்களும், கன்னியரும் வலம் வந்தால் நல்ல இடத்தில் திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளது வேந்தன்பட்டி கிராமம். இங்கு அருள்பாலிக்கும் நெய் நந்தீஸ்வரர் கோயில் நந்திக்கு நெய் அபிஷேகம் செய்வர். அந்த நெய்யின் மீது ஈக்களோ, எறும்போ அமருவதில்லை. மாட்டுப் பொங்கலன்று 21 வகை மலர் மாலைகளால் நந்தி தேவரை அலங்கரித்து தீப ஆராதனைகள் நடைபெறும்.
மாட்டுப் பொங்கலன்று மந்தைவெளி பொங்கல் என்று வைக்கப்படும். மேய்ச்சலுக்கு செல்லும் மாடுகள் உச்சி வெயிலில் படுத்து ஓய்வெடுக்க உண்டாக்கப்பட்ட இடமே மந்தைவெளி எனப்படும். ஊர் மக்கள் அனைவரும் பொதுவாக பொங்கல் வைத்து வழிபடுவதை மந்தைவெளி பொங்கல் என்பர். கொங்கு நாட்டில் இப்படிப் பொங்கல் வைப்பது மரபு.
சிவாலயங்களில் நந்தியை பொதுவாக அமர்ந்த கோலத்திலேயே தரிசிப்போம். ஆனால், ஏழு இடங்களில், சிவத்தலங்களில் நின்ற கோலத்தில் நந்தி அருள்பாலிப்பதை சப்தவிடங்கத் திருத்தலங்கள் என்பர். திருவாரூர், திருநள்ளாறு, நாகப்பட்டினம், திருக்காரவாயில், திருக்குவளை, வேதாரண்யம் ஆகிய திருத்தலங்களில் நந்தியை நின்ற கோலத்தில் தரிசிக்கலாம்.
மைசூரு பெரிய நந்தி மலையில் வீற்றிருக்கும் நந்திக்கு மாட்டுப் பொங்கலன்று அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். அந்த ஊர் மக்கள் தங்கள் நிலத்தில் விளைந்த வேர்க்கடலை, தானியங்களை மூட்டை மூட்டையாக சமர்பித்து விளைச்சலுக்கு நன்றி சொல்வர்.
தஞ்சாவூர் பெரிய நந்திக்கு மாட்டு பொங்கலன்று பலவிதமான அபிஷேகங்களும், பொங்கல், கரும்பு, பழங்கள் என படைத்து காய்கறி அலங்காரம் சிறப்பாக செய்வித்து வழிபாடு நடைபெறும்.
இப்படிப் பல்வேறு தலங்களில் பலவிதமாக மாட்டுப் பொங்கல் மாடு, கன்றுகளை சிறப்பிப்பதோடு, ஆலயங்களில் நந்தி தேவருக்கு சிறப்பு ஆராதனைகள் செய்யப்படுகிறது.