சுற்றுலாவுக்கேற்ற கடற்கரைகளும் சில தகவல்களும்!

சுற்றுலாவுக்கேற்ற கடற்கரைகளும் சில தகவல்களும்!
Published on

ஆசியாவின் சிறந்த கடற்கரைகள் கோவா மாநிலத்தில் அதிகம் உள்ளது. கோவா கொங்கன் பகுதியில் 103 கி.மீ நீளத்திற்கு கடற்கரை உள்ளது. இதில் 30க்கும் அதிகமான பகுதிகளில் பொழுதுபோக்கு கடற்கரைகள் உள்ளன. அனைத்து பொழுதுபோக்கு வசதிகளுடன் சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக பல அம்சங்களை கொண்டுள்ளது இக்கடற்கரைகள்.

கோவாவில் பலோலெம் மிக அழகான கடற்கரை. அரை வட்ட வடிவில் அமைந்துள்ளது. வரலாற்று சிறப்பு மிக்க மார்கோ நகரிலிருந்து 43 கி.மீ தொலைவில் உள்ளது. காரில் ஒரு மணி நேர பயணம்.

இந்த கடற்கரை அருகே உள்ள தீவில் நூதன கற்சிலை ஒன்று உள்ளது. பணச்சிலை எனப்படும் இதன் பீடத்தில் 'கிவ் இஃப் யூ கேன்', டேக் இஃப் யூ ஹேவ் டூ' என ஆங்கிலத்தில் பொறிக்கப்பட்டுள்ளது. சிலையை உருவாக்கியவர் ஜாசிக் டைலிக். அமெரிக்காவைச் சேர்ந்தவர். இந்த கற்சிலை அருகே சிலர் பணத்தை போட்டுச் செல்கின்றனர். தேவைப்படும் பணத்தை சிலர் எடுத்து செல்கின்றனர்.

ஒடிசா மாநிலத்தில் கதிர் மாதா என்ற கடற்கரை உள்ளது. ஆலிவ் ரிட்லி வகை ஆமைகள் முட்டையிட இங்கு அதிகம் வருகின்றன. ஆமைக் குஞ்சுகள் பொரிப்பது இங்கு அதிகமாக உள்ளது.

ஜலந்தர் என்றவுடன் பஞ்சாப் தான் நினைவுக்கு வரும். ஆனால் டையூவில் உள்ள கடற்கரை பெயர் ஜலந்தர்.

அந்தமான் நிக்கோபார் தீவில் ராதாநகர் கடற்கரை அமைந்துள்ளது. நீலவண்ணத்தில் ஜொலிக்கும் கடல்நீர் அருகே வெள்ளை மணலில் கடற்கரை அழகும், அமைதியும் நிறைந்த இடம்.

கர்நாடகா மாநிலத்தில் உள்ள கோகர்ணா கடற்கரை மிகவும் பிரபலமானது. இயற்கை சூழலில் கண்ணையும், கருத்தையும் கவரும் சொர்க்கம். ஓம் மற்றும் பாதி சந்திரன் என்ற பெயரில் மூன்று கடற்கரைகளும் அருகருகே அமைந்துள்ளன. கடற்கரை அழகும், அமைதியும் நிறைந்த பேரெழில் பிரதேசங்கள்.

தமிழ்நாட்டில் சென்னையில் மெரீனா, மாமல்லபுரம் மற்றும் பல கடற்கரைகள் சிறந்த பொழுதுபோக்கு இடங்களாகவும், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகள் நடந்த இடங்களாகவும் பல செய்திகளையும், சந்தோஷங்களையும் தரும் விதமாகவும் அமைந்துள்ளது.

கேரளாவில் இரண்டு கடற்கரைகள் மிகவும் பிரபலம். வர்கலா கடற்கரை. இது செங்குத்தான மலைப்பகுதி. அரபிக்கடல் சேரும் பகுதியில் பக்கவாட்டில் உள்ளது. மிக அழகான கடற்கரை பிரதேசம். ஆயுர்வேத சிகிச்சைக்கு பிரபலமானது. மார்ச், ஏப்ரல் மாதத்தில் இங்கு சென்றால் அங்கு நடைபெறும் திருவிழாக்களையும் கண்டு மகிழலாம்.

மற்றொன்று கோவளம் கடற்கரை. இங்கு உயரமான இடத்தில் கலங்கரை விளக்கம் அமைந்துள்ளது. சிறப்பான நீச்சல் குளங்களும், குளிப்பதற்கேற்ற அமைதியான கடல்பகுதியும் கொண்டது. கடல்வழியை கண்டுபிடித்த வாஸ்கோடகாமா முதலில் வந்து இறங்கியது கேரள மாநில கோழிக்கோடு அருகேயுள்ள கப்பாட் கடற்கரை. இது மற்றொரு பிரபலமான கடற்கரை.

மகாராஷ்டிரா மாநிலத்தில் கண்பதி புலே சாகச விளையாட்டுக்கு ஏற்ற கடற்கரை. கொங்கன் கடற்கரை பகுதியில் அமைந்துள்ளது. இயற்கை எழில் கொஞ்சும் இதன் அருகிலேயே மாங்குரோவ் காடுகள், தென்னந்தோப்புகள் நிறைந்த பகுதிகளை காணலாம்.

இதுபோல் பல சிறப்பு வாய்ந்த பிரபலமான அதிகம் அறியப்படாத கடற்கரைகள் உள்ளன. தேடிப் பார்த்து முறையாக பிளான் பண்ணி செல்ல, அருமையான அனுபவத்தை பெற்று வரலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com