உகாண்டா நாட்டில் உள்ள ப்விண்டி காடுகளுக்கு "Impenetrable Forests" அதாவது, 'துளைக்க முடியாத காடுகள்' என்று ஒரு புனை பெயர் உண்டு. இதற்கு காரணம் ஒரு மனிதன் சாதாரணமாக மற்ற காடுகளுக்குள் நுழைவது போல் இங்கே நுழைந்து விட முடியாது.
உலகின் மிக பெரிய சதுப்புநில காடான சுந்தரவன காடுகளுக்குள் ஒரு மாதம் முழுக்க வங்காளதேச மீனவ மக்கள் தங்கி தேன் எடுப்பார்கள். அங்கு புலி இருக்கும்.. முதலை இருக்கும்.. ராஜ நாகம் இருக்கும்.. ஆறு மணி நேரத்திற்கு ஒரு முறை கடல் தண்ணீர் 4-5 அடி மேலே வந்து விடும். ஆனாலும் அந்த காட்டுக்குள் மனிதர்கள் சாதாரண ஆடை அணிந்து சென்று வந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.
ஆனால் ப்விண்டி காடுகள் அப்படி அல்ல. உகாண்டா மற்றும் ருவாண்டா ஆகிய இரண்டு நாடுகளுக்கும் எல்லைகளை உருவாக்கி நிற்கிறது இந்த ப்விண்டி காடுகள். Bwindi என்றால் இருள் என்று பொருள். இந்த காட்டுக்குள் நுழைந்தால் ஏன் இந்த பெயர் வந்தது என்று தெரிந்து கொள்வார்கள் என்று சொல்வார்கள்.
உகாண்டா சென்று இந்த காட்டுக்குள் ட்ரெக்கிங் செல்ல ஒரு நபருக்கு 40 ஆயிரம் ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ரூவாண்டா நாட்டின் வழியாகச் சென்றால் ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் வரை கட்டணம் இருக்கலாம். உலகம் முழுக்க சுமார் 1000 கொரில்லா குரங்குகள் தான் இருப்பதாக கூறப்படுகிறது. அதில் கிட்டத்தட்ட பாதி இந்த காட்டில் தான் உள்ளது. முக்கியமாக இந்த காட்டுக்கு சுற்றுலா பயணிகள் செல்வதற்கு காரணம், இந்த கொரில்லா குரங்குகளை, அதன் இருப்பிடத்தில் காணத்தான்.
ட்ரெக்கிங் பயணத்தின் போது நமக்கு அளிக்கப்படும் உடை மிகவும் சிறப்பானதாக இருக்கும். ஒரு சின்ன எறும்பு கூட உள்ளே சென்றுவிட முடியாதபடி நம்மை பாதுகாப்பதற்காக பிரத்யேக முறையில் தயாரிக்கப்பட்டு இருக்கும். இதிலிருந்தும் நாம் தெரிந்து கொள்ளலாம் இந்த வனத்தின் ஆபத்தை. இந்த வனத்தின் சிறப்பம்சம், இங்கு காணப்படும் பறவை இனங்கள். ஒவ்வொரு பறவையும் அவ்வளவு அழகாக காணப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த காட்டில் ஒற்றை அடி பாதை கூட இருக்காது. இங்கு வனத்தில் மிகவும் உள்பகுதிக்கு நுழைய அனுமதியே இல்லை. ஓரளவு கொரில்லா குரங்குகளை காண்பதற்காக டிரெக்கிங் செய்ய பல நிபந்தனைகள் உண்டு. முன் அனுபவம் வேண்டும். உடல் தகுதி வேண்டும். ஆறு மாதங்களுக்கு முன் பதிவு செய்ய வேண்டும். இப்படி பல...
நீங்கள் உள்ளே போன பிறகும் நிறைய விதிகளை பின்பற்ற வேண்டும். முடிந்த வரை தும்ம கூடாது. கொரில்லா இருக்கும் இடத்தில், பிளாஷ் உடன் கேமராவில் படம் எடுக்க கூடாது. பேச கூடாது. முகத்தை மறைத்து வைக்க வேண்டும். கொரில்லாவை விட்டு குறைந்தது 7 மீட்டர் தூரம் தள்ளி தான் இருக்க வேண்டும்.
அதிலும் ஒரு கொரில்லா குடும்பத்தின் ஆல்ஃபா male ஐ நீங்கள் பார்த்து விட்டால், பேசாமல் மறைந்து உட்கார்ந்து விட வேண்டும். 25 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த காடாக இது கூறப்படுகிறது. 15 வயதிற்கு மேலே உள்ளவர்களுக்கு தான் இங்கு அனுமதி. அதிகபட்சம் ட்ரெக்கிங் பயணத்தில் நேரம் ஆறு மணி நேரம் ஆகும். நாம் சுற்றி பார்க்க போவது 2 கிலோ மீட்டர்க்குள் அடங்கி விடும். அதில் இவ்வளவு ஆபத்து என்றால், காட்டின் அளவு 331 சதுர கிலோமீட்டர். அந்த காட்டி அடர்த்தியை வார்த்தைகளால் கூற முடியாது.
இதிலிருந்து நீங்கள் கணக்கு போட்டு கொள்ளுங்கள், இந்த வனப்பகுதிக்குள் உள்ள ஆபத்துகளை பற்றி. அதனால்தான் இந்த வனப்பகுதியை 'துளைக்க முடியாத காடுகள்' (Impenetrable Forests) என்று கூறுகின்றனர்.