மன அழுத்தத்தையும் அன்றாட வேலை பளுவையும் குறைப்பதில் பயணத்திற்கு முக்கிய பங்கு உண்டு. சுற்றுலா செல்பவர்களின் முதல் தேர்வாக இருப்பது கடற்கரைகள், மலைப்பிரதேசங்கள் அருவிகள். ஆனால் சிலரோ அதிக மக்கள் நடமாட்டம் இல்லாத இடங்களுக்கு செல்ல விரும்புவார்கள் .இத்தகைய தனிமை விரும்பிகளுக்கு ஏற்ற 5 இடங்கள் குறித்து இப்பதிவில் காண்போம்.
"லிட்டில் திபெத்" என்று அழைக்கப்படும் இந்தப் பகுதி மலைகள் மற்றும் தெளிவான ஆறுகளால் சூழப்பட்டுள்ளதோடு, நீண்ட காலம் குளிராக இருப்பதால் கோடையை சமாளிப்பதற்கு ஏற்ற இடமாகவும் உள்ளது. மேலும்' ஸ்பிட்டி' உயரமான குளிர்ந்த பாலைவன நிலப்பரப்பில் இருப்பதால், அமைதியான அழகோடு மறக்க முடியாத அனுபவத்தை வழங்குகிறது .பழங்கால மடங்கள், காசா மற்றும் டாபோ போன்ற தொலைதூர கிராமங்கள் மற்றும் நட்சத்திரங்கள் நிறைந்த இரவுகள் ஸ்பிட்டியின் அழகை மெருகூட்டுகின்றன.
அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள ஜிரோ பள்ளத்தாக்கில் நெல் வயல்கள் மற்றும் பாரம்பரிய அபதானி பழங்குடி கிராமங்கள் உள்ளன. நகர வாழ்க்கையிலிருந்து விலகி அமைதியான வாழ்க்கையை நீங்கள் விரும்பினால், நெல் வயல்கள், அழமான மலைகள் மற்றும் ஏராளமான இயற்கையுடன் கூடிய பசுமையான சொர்க்கத்தை உங்களுக்கு வழங்குகிறது. மன அழுத்தத்தைக் குறைக்க விரும்புவோருக்கும், அழகிய நடைப்பயணங்களையும் மெதுவான வாழ்க்கையையும் அனுபவிக்க விரும்புவோருக்கும் இந்த இடம் சரியானது.
வெள்ளை பனிபோர்த்திய மலைகள், நாகோ ஏரி மற்றும் உள்ளூர் மக்களின் அமைதியான வாழ்க்கை முறை கொண்ட நாகோ இமாச்சலப் பிரதேசத்தின் கின்னார் மாவட்டத்தில் கடல் மட்டத்திலிருந்து 3,600 மீ உயரத்தில் அமைந்துள்ளது.நகரத்திலிருந்தும் நெரிசலான சுற்றுலா இடங்களிலிருந்தும் தப்பித்து தனிமையை தேடினால் நாகோ உங்களை தேடுகிறது என்று அர்த்தம்.
வெள்ளை மணல் கடற்கரைகளில் நடப்பதற்கும், நீல நிற நீரில் நீந்துவதற்கும் பவளப்பாறைகளை கண்டு ரசிப்பதற்கும் ஏற்ற இடமான அகட்டித் தீவு லட்சத்தீவு பகுதியில் அமைந்துள்ளது. ஒரு சில விமானங்கள் மட்டுமே இயக்கப்படுவதால் இந்த தீவுக்கு அதிக மக்கள் வருவதில்லை. ஆகவே தனிமையை விரும்புபவர் களுக்கும் ஸ்நோர்கெல்லிங், டைவிங்கை விரும்புபவர் களுக்கும் அகட்டி தீவு தான் பெஸ்ட் சாய்ஸ்.
இந்தியாவின் மிகவும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியான மெச்சுகா இந்தோ திபெத்திய எல்லைக்கு அருகில் உள்ளது. சியோம் நதியின் பின்னணியில் பனியுடைய மலைகள், அழகான பசுமையான காடுகள் நிறைந்த மலைகளோடு உள்ள பள்ளத்தாக்கு சொர்க்கத்திற்கே அழைத்துச் சென்றுவிடுகிறது.
ஜன சந்தடி இல்லாமல் அமைதியாக இயற்கையை ரசிக்க அனுபவிக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு மேற்கூறிய ஐந்து இடங்களுமே அற்புதமான தேர்வாக இருக்கும்.