சிவகங்கையின் சிறப்பு மிக்க 6 இடங்கள்!

சிவகங்கையின் சிறப்பு மிக்க  6 இடங்கள்!

1. கண்ணதாசன் மணிமண்டபம்

காரைக்குடி அருகே உள்ளது பிள்ளையார்பட்டி இதனை அடுத்து உள்ளது சிறுகூடல்பட்டி என்னும் சிறிய கிராமம். இது கவிஞர் கண்ணதாசன் பிறந்த ஊர். 'அர்த்தமுள்ள இந்து மதம்' என்னும் அற்புத நூலும், கருத்தாழமிக்க பாடல்களும் எழுதி அழியாப் புகழ் பெற்ற இந்தக் கவிஞருக்கு காரைக்குடியில் மணிமண்டபம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. காரைக்குடி பேருந்து நிலையத்தின் எதிரே 'கண்ணதாசன் மணிமண்டபம்' அமைந்துள்ளது.

2. சிவகங்கை மருதுபாண்டியர் நினைவாலயம்

வீரத்திற்குப் பெயர்பெற்ற மருதுபாண்டிய சகோதரர்கள். சிவகங்கை சமஸ்தானத்தைத் திறம்பட ஆண்ட மன்னர்கள். வெள்ளையர்களை எதிர்த்துப் போராடி, அவர்களைக் கலங்கடித்த இச்சகோதரர்கள், 1801ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களால் தூக்கிலிடப்பட்டுத் தியாகிகளாகினர். இவர்கள் நினைவாக காளையார் கோவிலில் நினைவாலயம் ஒன்று கட்டப்பட்டது. அவசியம் சிவகங்கைக்குச் செல்கிற போது மறக்காமல் மருதுபாண்டியர் நினைவாலயத்திற்குச் சென்று வரவும்.

3. பிள்ளையார்பட்டி

காரைக்குடியில் இருந்து 12 கி. மீட்டர் தொலைவில் உள்ளது பிள்ளையார்பட்டி. மலையடிவாரத்தில் கற்பகவிநாயகர் திருக்கோயில் அமைந்துள்ளது. கி. பி. 4ஆம் நூற்றாண்டில் பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்ட மிகத் தொன்மையான கோயில் இது. இந்த விவரத்தை இங்குள்ள கல்வெட்டு தெரிவிக்கிறது. குன்று ஒன்றிலிருந்து வெட்டி எடுக்கப்பட்ட பாறையில் கோயில் கட்டப்பட்டுள்ளது. அத்துடன் ஒரே கல்லில் கற்பக விநாயகர் மற்றும் லிங்கவடிவு ஆகிய சிலைகளும் வடிக்கப்பட்டுள்ளது.திருவீங்கைக்குடி, மருதக்குடி ராஜநாராயணபுரம் என்று பலப்பலப் பெயர்களைக் கொண்டிருந்த இவ்வூர், தற்போது பிள்ளையார்பட்டி என்று அழைக்கப்படுகிறது.

4. குன்றக்குடி முருகன் கோயில்

குன்றக்குடி முருகன் கோயில் மிகவும் சிறப்பு வாய்ந்தது. காரைக்குடியில் இருந்து 10 கி. மீட்டர் தொலைவில் உள்ள இக்கோயில் முருகப்பெருமானின் சிறப்பு வாய்ந்த எட்டுக்குடிகளில் ஒன்றாக விளங்குகிறது. கி.பி. 1000வது ஆண்டில் இக்கோயில் கட்டப்பட்டதாக ‘மயூரகிரி புராணம்' கூறுகிறது. இக்கோயிலில் முருகப்பெருமான், சண்முகநாதராகப் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். மருதுபாண்டியர்கள் காலத்தில் புதுப்பிக்கப்பட்ட இக்கோயிலில், பங்குனி உத்திரம், தைப்பூசம், கந்தசஷ்டி ஆகிய விழாக்கள் வெகு விமரிசையாகக் கொண்டாடப் படுகிறது.

5. கண்டதேவி கோயில்

தேவகோட்டையில் இருந்து 3 கி. மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது கண்டதேவி கோயில். தேவகோட்டை, காரைக்குடியில் இருந்து 15 கி. மீட்டர் தொலைவில் உள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இங்குள்ள சுவர்ண மூர்த்தீஸ்வரர், பெரியநாயகி அம்மன் சமேதரராய் வீற்றிருக்கிறார். கிரிகிலி நாதர் என்றும் அழைக்கப்படும் இறைவன் குடியிருக்கும் இக்கோயில் 350 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. ஆண்டுதோறும் ஆனி மாதம் திருவிழா வெகு சிறப்பாக நடைபெறும். அப்போது சுற்றியுள்ள 75 கிராமங்களில் இருந்தும் மக்கள் திரளாக இங்கு கூடுவர்.

6. திருக்கோஷ்டியூர்

ராமனுஜர் வந்து வழிபட்ட தலம் திருக்கோஷ்டியூர். 108 திருப்பதிகளில் ஒன்றான பெருமாள் குடிகொண்டுள்ள திருத்தலம் இது. ஆண்டுதோறும் மாசிமக தீபத் திருவிழா இங்கு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com