
சித்திரதுர்க்கா கோட்டை (Chitradurga Fort) - இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் சித்ரதுர்கா மாவட்டத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த அழகிய மலைக்கோட்டையாகும்.
சித்ரதுர்காகோட்டை, 15 ஆம் நூற்றாண்டில் விஜயநகரப் பேரரசின் சித்ரதுர்காவின் நாயக்க மன்னர்களால் கட்டப்பட்டது. தரை மட்டத்திலிருந்து சுமார் 300 மீட்டர் உயரத்தில் முழு கோட்டைப் பகுதியும் உள்ளது.
சித்ரதுர்காவின் வெல்ல முடியாத கோட்டை சமகால போர் நுட்பங்களுக்கு ஏற்றவாறு திட்டமிடப்பட்டுள்ளது. இது சித்ரதுர்காவின் வீரம் மிக்க நாயக்கர்களின் நுண்ணறிவுக்கு ஒரு எடுத்துக்காட்டாக நிற்கிறது. ஏழு சுற்றுச்சுவர்களைக் கொண்ட இந்தக் கோட்டை பல நூற்றாண்டுகளாக இயற்கையின் அழிவுகளைத் தாங்கி நிற்கிறது. இந்தக் கோட்டையில் 19 பிரதான நுழைவாயில்கள், 38 பின்புற நுழைவாயில்கள், 35 ரகசிய நுழைவாயில்கள் 4 கண்ணுக்குத் தெரியாத நுழைவாயில்கள் இருந்திருக்கின்றன இவற்றில் பல இப்போது மறைந்து விட்டன.
கதவுகள் இரும்புத் தகடுகளால் கட்டப்பட்ட வலுவான மற்றும் அடர்த்தியான மரக் கற்றைகளால் செய்யப்பட்டன. உயரும் கோபுரங்கள் பாறைகளால் வெட்டப்பட்டு, பாறை நிலப்பரப்பை நிறைவு செய்கின்றன. மேலும் ஒவ்வொரு கோட்டையும் கீழே உள்ள மற்றவற்றைக் கவனிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
அரச அரண்மனையின் எச்சங்கள், தானியக் கிடங்கு மற்றும் எண்ணெய் தொட்டிகள், உடற்பயிற்சி கூடம், 40 அடி உயர ஊஞ்சல் ஸ்டாண்ட், கண்காணிப்பு கோபுரங்கள், துப்பாக்கி துளைகள், இராணுவ குடியிருப்புகள் மற்றும் பிற நினைவுச்சின்னங்கள் இருப்பதால் சுற்றுலா ஆர்வமுள்ளவர்களுக்கு பிரமிப்பை ஏற்படுத்துகிறது.
இப்போது மேல் கோட்டையில் மொத்தம் 14 புனிதமான கோயில்களும், கீழ் கோட்டையில் ஒரு பெரிய கோவிலும் உள்ளது.
சித்ரதுர்கா கோட்டை அதன் அதிநவீன நீர் சேகரிப்பு முறைக்கு பெயர் பெற்றது. ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட நீர்த்தேக்கங்கள் மழைநீரை சேகரித்து சேமித்து வைத்தன. அவை ஒவ்வொரு தொட்டியிலிருந்தும் அதன் கீழே உள்ள மற்ற தொட்டிகளுக்குள் பாய்ந்தன. அத்தகைய பயனுள்ள அமைப்பு கோட்டையில் தண்ணீர் ஒருபோதும் தீர்ந்து போகாமல் பார்த்துக் கொண்டது. இந்த தொட்டிகள் அனைத்தையும் நிரப்பிய பிறகு, கோட்டைச் சுவர்களைச் சுற்றியுள்ள அகழிகளுக்கு தண்ணீர் பாயும்.
சித்ரதுர்கா மாவட்டம் கோட்டைகளுக்கு மட்டும் பெயர் பெற்றதல்ல. சந்திரவள்ளி, அங்காளி மடம், ஆடு மல்லேஸ்வரா வனவிலங்கு பூங்கா, வாணி விலாஸ் சாகர், காயத்ரி ஜலாஷியா, தொட்டதரங்கப்பா மலை போன்ற பல்வேறு பாரம்பரிய மற்றும் இயற்கை காட்சிகளையும் கொண்டுள்ளது.
இவ்வளவு சிறப்பு வாய்ந்த சித்தரதுர்கா கோட்டை பெங்களூருவிலிருந்து 200 கி.மீ தொலைவில் உள்ளது. பெல்லாரியில் உள்ள சித்ரதுர்கா கோட்டை அனைத்து நாட்களிலும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும்.