சிங்கங்கள் நிறைந்த வனத்தில் ஒரு ஜாலி பயணம்..!

A fun journey in a forest full of lions..!
Payanam articles
Published on

பொதுவாக நமக்கு சிங்கத்தின் மீது தனி பிரியம் உள்ளது. பார்ப்பதற்கு பிடரி முடியுடன் கம்பீரமாக தோன்றும் அந்த அழகிய விலங்கை நேரில் பார்க்க பலருக்கும் ஆர்வம் உள்ளது. சிங்கத்தை நேரில் பார்க்க குஜராத் மாநிலத்தில் உள்ள கிர் தேசிய பூங்காவிற்கு செல்லலாம்.

இந்தியாவில் ஏராளமான விலங்குகள் வாழும் பல தேசிய பூங்காக்கள் உள்ளன. அதில் சிங்கங்கள் அதிகம் வாழும் இடமாக கிர் தேசிய பூங்கா உள்ளது. இங்கு காட்டு சஃபாரியின்போது நிறைய சிங்கங்களை பார்க்கலாம், கூடவே சில சிறுத்தைகளையும் ரசிக்கலாம்.

ஜூனாகத் நவாப்பின் கட்டுப்பாட்டில் இருந்த கிர் காடுகளில் நவாப் மற்றும் பிரிட்டிஷ்காரர்கள் வேட்டையாடி இறுதியில் 12 சிங்கங்கள் மட்டுமே எஞ்சி இருந்தது. அதன் பின்னர் நவாப்பும் பிரிட்டிஷ் வைஸ்ராயும் சேர்ந்து சிங்கங்களை பாதுகாக்க முடிவு செய்தனர். அதன் பின்னர் பாதுகாக்கப்பட்ட வனமாக கிர் பகுதி மாறியது.

கிர் காட்டுப்பகுதியில் 7 ஆறுகள் ஓடி வானத்தை வளப்படுத்துகின்றன. மேலும் இந்த பகுதியில் 4 நீர்த்தேக்கங்கள் உள்ளது. நீர்நிலைகள் அதிகம் இருப்பதால் வனவிலங்குகளின் வாழ்க்கைக்கு உகந்ததாக உள்ளது. சிறியதாக 300 நீர் நிலைகள் அங்கங்கு பாய்ந்து வனவிலங்குகளின் தாகத்தை தணிக்கிறது.

மேலும், ஏராளமான தாவரங்கள் உருவாகி தாவர உண்ணிகள் வளர்ச்சிக்கு உதவுகிறது. கோடை காலத்தில் நீர் நிலைகள் வறண்டு போகும், அப்போது வன ஊழியர்கள் நீர் நிலைகளில் தண்ணீர் கொண்டு சேர்க்கும் முயற்சிகளில் ஈடுபடுவார்கள்.

கிர் தேசிய பூங்காவில் ஆசிய சிங்கங்கள், சிறுத்தைகள், கழுதைப் புலிகள், பெங்கால் நரிகள், காட்டுப் பூனைகள், கீரிகள், தங்க நிற நரிகள், முதலை, மானிட்டர் பல்லிகள் உள்ளிட்ட ஏராளமான ஜீவராசிகள் வாழ்கின்றன. மேலும் கழுகுகள், பருந்துகள், கிளி, ஆந்தை உள்ளிட்ட ஏராளமான பறவைகளும் உள்ளன. இந்த வன உயிர்களை எல்லாம் ஜீப் சவாரியில் நீங்கள் பார்த்து ரசித்துக்கொண்டே செல்லலாம். ஜீப்பில் செல்ல ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம் அல்லது இங்கு வந்த பிறகு நீங்கள் சஃபாரியை முன்பதிவு செய்யலாம்.

இதையும் படியுங்கள்:
இரவே இல்லாத 7 உலக நாடுகள் பற்றி தெரியுமா?
A fun journey in a forest full of lions..!

கிர் பூங்காவிற்கு செல்ல  அக்டோபர் முதல் நவம்பர் வரை மற்றும்  பிப்ரவரி முதல் மார்ச் மாதம் வரை சிறந்ததாக கருதப்படுகிறது. இந்த மாதங்களில்  ஆசிய சிங்கங்கள், சிறுத்தைகள் மற்றும் பிற காட்டு விலங்குகள் சுற்றித் திரிவதைக் கண்டு ரசிக்கலாம். பருவமழைக் காலத்தில் ஜூன் முதல் செப்டம்பர் வரை தேசிய பூங்கா மூடப்பட்டிருக்கும்.

ஜங்கிள் சஃபாரி தொடங்கும் நேரம் காலை 6:30 மணி முதல் காலை 9:30 மணி வரை. இரண்டாவது சுற்று பிற்பகல் 3:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை. ஜங்கிள் சவாரியை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்புவார்கள். சிறப்பான வனவிலங்கு வாழிடத்தை சுற்றி பார்த்த நல்ல ஒரு அனுபவத்தை கிர் காடுகள் வழங்கும்.

கிர் தேசியப் பூங்காவிற்கு செல்ல சென்னையிலிருந்து ராஜ்கோட் வரை விமானம் அல்லது ரயிலில் செல்லலாம். அங்கிருந்து ரயில், பஸ் அல்லது டாக்சி மூலம் கிர் தேசியப் பூங்காவை அடையலாம். அந்த பகுதியில் தங்க நிறைய ரிசார்ட்களும் விருந்தினர் மாளிகைகளும் உள்ளன. ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் சிங்கத்தை ரசிக்க ஆகும் செலவை விட இங்கு ஆகும் செலவு மிகவும் குறைவுதான். அதே நேரம் போதுமான பாதுகாப்பும் இங்கு வழங்கப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com