பாதாள குகையில் ஒரு திகில் பயணம்!

பேலம் குகை...
பேலம் குகை...

சுற்றுலாப் பயணங்களில் சில திகிலூட்டும் பயணமாக அமைந்துவிடும். அந்த வகையில் நாங்கள் சென்ற பேலம் குகைப் பயணம் திகில் நிறைந்த மறக்க முடியாத பயணமாக இருந்தது.

ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள பெலும் (BELUM) குஹாலு என்று அழைக்கப்படும் பேலம் குகைகள் இந்தியாவின் இரண்டாவது நீளமான குகையாகும்.  இந்த குகை மேகாலயாவில் உள்ள கிரெம் லியாட்பிரா குகைகளுக்குப் பிறகு இரண்டாவது இயற்கை குகையாகும்.

தட்டையான விவசாய நிலத்தின் மத்தியில் அமைந்துள்ள இந்த நிலத்தடி குகைகள் ஆந்திரப் பிரதேசத்தின் கர்னூல் மாவட்டத்திலிருநிது 110 கி.மீ. தூரத்தில் உள்ள கோலிமிகுண்ட்லா கிராமத்தில் சுண்ணாம்பு பகுதியில் அமைந்துள்ள 3.5 கி.மீ நீளமுள்ள குகையாகும்.  இந்த குகைகள் ஸ்டாலக்டைட் மற்றும் ஸ்டாலக்மைட் அமைப்புகள் போன்ற ஸ்பெலியோதெம் கட்டமைப்பு களுக்கு புகழ் பெற்றவை. ஸ்டாலக்டைட்டுகள் என்பது குகையின் கூரையிலிருந்து கனிமங்கள் படிந்து நீண்ட கூர்மையான பனிக்கட்டிகள் போல தொங்குகின்றவை. அதே நேரத்தில் ஸ்டாலக்மைட்டுகள் குகைத் தளங்களில் எண்ணற்ற வடிவங்களில் காணப்படுபவை.

பேலம் குகைகள் 4500 ஆண்டுகள் பழமையானவை. பிரிட்டிஷ் புவியியலாளரும் தொல்பொருள் ஆராய்ச்சியாளருமான ராபர்ட் புரூஸ் ஃபூட்,  பேலம் குகைகளைப் பற்றி 1884 ஆம் ஆண்டு தெரியப் படுத்தினார். அதன் பிறகு ஒரு நூற்றாண்டு வரையில் பேலம் குகைகள் பற்றிய தகவல்கள் இல்லை. 1980 களில் பேலம் குகைகள் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டன, ஆனால் கிராம மக்களால் குப்பை கொட்டும் இடமாக அது இருந்தது. இறுதியாக 1988 ஆம் ஆண்டில், குகைகள் தொல்பொருள் மற்றும் புவியியல் முக்கியத்துவம் வாய்ந்தவை என்று ஆந்திர அரசு முடிவு செய்து அவற்றை பாதுகாக்கப்பட்டதாக அறிவித்தது  ஆந்திர மாநில சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தால் (ஏ.பி.டி.டி.சி) வளர்ச்சிப் பணிகள் 1999 இல் தொடங்கப்பட்டு இறுதியாக  2002 இல்  பொதுமக்களுக்கு திறக்கப்பட்டது.

நாங்கள் கர்னூல் வழியாக பேலம் குகைகளை சென்றடைந்தோம். குகைகளுக்கு அருகில் ஒரு சிறிய குன்றின் மீது ஒரு பெரிய புத்தர் சிலை நம்மை வரவேற்கிறது  படிக்கட்டுகள் வழியாக தரை மட்டத்திலிருந்து சுமார் 30 அடி கீழே குகைகள் உள்ளன. ஆந்திர மாநில சுற்றுலா வளர்ச்சிக் கழகம் நிறுவிய மேல் தளத்தில் அமைக்கப்பட்ட குழல்களிலிருந்து சுத்தமான காற்று வந்தாலும், நாங்கள் சென்றபோது வெளிப்புறம் சூடாக இருந்ததால், உள்ளே  உலைக்களமாக இருந்தது.

பேலம் குகை
பேலம் குகை

இயற்கையின் அற்புதமான அழகைக் கண்டு வியந்தவாறு, குகையின் வெவ்வேறு பாதைகளின் வழியாக  செல்லலானோம். உயரமான மற்றும் தாழ்வான, அகன்ற மற்றும் குறுகிய பாதைகளின் வழியாக செல்ல வேண்டும். கீழேயிருந்து மேலே பார்க்கும்போது பிரமிப்பாக இருந்தது. ஆனால் ஒரு பாறையின் மீது பல பாறைகள் நிற்பதைப் பார்த்த போது நம் மேல் விழுந்து விடுமோ என திகிலாக இருந்தது.

குகையின் மிகவும் குறுகலான பாதைகளில் குனிந்து சென்றபோது  நாங்கள் எங்களை ஆசுவாசப்படுத்திக் கொள்ள வேண்டியிருந்தது, மூச்சு திணறுவது போல் உணர்ந்தால் மேலே போகாமல் உடனே திரும்பி வந்து விடுவது நல்லது.

சில பகுதிகளில் நீரின் சலசலப்பைத் தவிர குகைக்குள் அமைதி நிலவியது. ஏதோ திகில் படக் காட்சிகளைப் பார்ப்பதைப் போல உணர்ந்தேன். இங்கு 1.5 கி.மீ தூரம் மட்டுமே சுற்றுலாப் பயணிகளுக்காக அனுமதிக்கப் பட்டுள்ளது. சிம்ஹத்வரம் (சிங்கத்தின் தலையைப் போல தோற்றமளிக்கும் இயற்கையான வளைவு போன்ற அமைப்பு) வழியாக ஒரு குறுகிய பாதை உள்ளது, இது கோட்டிலிங்கம் அறை அல்லது 'கோட்டிலிங்காலு' என்று அழைக்கப்படும் ஒரு பெரிய அறைக்கு இட்டுச் செல்கிறது. இங்கே உள்ள குகைகளில் ஒன்று "தியான மண்டபம்" என்று அழைக்கப்படுகிறது, இது பௌத்த துறவிகளால் பயன்படுத்தப்பட்டது என நம்பப்படுகிறது.

குகைக்குள் கட்டுரையாசிரியர்...
குகைக்குள் கட்டுரையாசிரியர்...

குகையின் முடிவில் பாதாளகங்கைக்கு இறங்கும் பாதை தென்படுகிறது. ஆனால் என்னால் அதுவரை போக முடியவில்லை. தென்கிழக்கிலிருந்து வடமேற்காக ஓடி, பூமியில் மறைந்திருக்கும் வற்றாத நீரூற்று ஒன்று உள்ளது. இதன் மேலே சிவலிங்கத்தைப் போல ஒரு ஸ்டாலக்மைட் அமைந்துள்ளது. வேறு பாதையில் உச்சிக்குச் சென்று, சப்தஸ்வர குகையில் (இசை அறை)  இசையை உருவாக்கி மகிழ்ந்தோம். இங்குள்ள தனித்துவமான அம்சம் ஒரு மரக் குச்சியால் அல்லது ஒருவரின் விரல்களால் அடிக்கும்போது ஸ்டாலக்டைட்டுகள் உருவாக்கும்  ஒலிகள் ஆச்சரியப் படுத்துகின்றன,

பேலம் குகைகள் அனைத்து நாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்திருக்கும். பார்வையாளர் கள் தாங்களாகவே குகைக்குள் செல்ல அனுமதிக்கப் படுவதில்லை.  ஒரே நேரத்தில் 10 முதல் 15 குழுக்களை குகைகளின் வழிகாட்டிகள் அழைத்துச் செல்கின்றனர். நுழைவுக் கட்டணம் உண்டு.

இதையும் படியுங்கள்:
நமது உடலில் கெரட்டின் அளவு அதிகமானால் என்னவாகும் தெரியுமா?
பேலம் குகை...

அவசியம் கவனத்தில் கொள்ள வேண்டியவை...

தண்ணீர் எடுத்துச் செல்ல வேண்டும். குகைக்குள்ளே ஒன்றுமே கிடைக்காது.

கைக்குட்டை அல்லது ஒரு சிறிய துண்டு  தேவைப்படலாம், பெரும்பாலும் வேர்வையில் முழுவதுமாக நனைந்துதான் வெளியே வருவோம்,

வெகு தூரம் நடக்க வேண்டியிருப்பதால் வசதியான காலணிகள் அணிவது அவசியம்

குகைக்குள் சிறிய விளக்குகள் ஒளிர்ந்தாலும் சிறிய டார்ச் கைவசம் வைத்திருப்பது நல்லது.

சாகஸப் பிரியர்களுக்கு ஏற்ற சுற்றுலா பயண இடம் பேலம் குகைகள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com