காட்டுப் பாதையில் ஒரு திகில் பயணம்! வால்பாறை to அதிரப்பள்ளி.

வால்பாறை...
வால்பாறை...

- மதுவந்தி

வாழ்க்கையில் ஒரு முறையாவது திகில் சாகசப் பயணம் செய்துள்ளீர்களா? செய்ய ஆசை இருக்கிறதா? அப்படியெனில் இந்தப் பயணத்தை மேற்கொண்டு பாருங்கள். மூன்று மணி நேரக் காட்டு வழிப் பயணம், முடியும் இடத்தில் அருமையான ஒரு நீர்வீழ்ச்சி, மனதை சிலிர்க்க வைக்கும் காட்சிகளும், பயத்தை உண்டாக்கும் காடும். எங்கே எனக் கேட்கிறீர்களா? பலரும் எட்டிப் பார்க்கத் துவங்கிய பொள்ளாச்சி வால்பாறை பகுதியில் தான் இருக்கிறது இந்த காட்டு வழிப் பாதை. 

வால்பாறை தமிழ்நாட்டின் கோவை மாவட்டத்தில் உள்ள ஒரு மலைவாசஸ்தலம். கடல் மட்டத்திலிருந்து 1,059மீ உயரத்தில் உள்ளது. வால்பாறை மலை அடிவாரத்திலிருந்து மேலே செல்ல மொத்தம் 40 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. வால்பாறை யிலிருந்து கேரளாவின் எல்லை ஊரான மலக்கப்பரா 27 கிமீ ஆகும். ஆனைமலை புலிகள் சரணாலயம், கூழாங்கல் ஆறு, சோலையார் அணை, நிரார் ஆறு போன்ற சுற்றுலா தலங்கள் வால்பாறையில் உள்ளன.

வால்பாறையிலிருந்து சோலையார் அணைப் பகுதி வழியாகக் கேரளாவின் புகழ்பெற்ற நீர்வீழ்ச்சியான அதிரப்பள்ளி செல்லும் காட்டு வழிப்பாதையைப் பற்றித்தான் இங்கே பார்க்கப் போகிறோம். காலையிலும் மாலையிலும் பயணம் செய்வதற்கு ஏற்றாற்போல் ரம்மியமான வானிலை இந்த பகுதியில் இருக்கும். இந்த அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் எண்ணற்ற புகழ்பெற்ற திரைப்படப் பாடல் காட்சிகள் படம் பிடிக்கப்பட்டுள்ளன.

இந்த காட்டுப் பாதையின் இரு முனையிலும் தமிழ்நாடு மற்றும் கேரள வனத்துறையின் சோதனைச்சாவடிகள் உள்ளன. ஒரு சோதனைச்சாவடியிலிருந்து மற்றொரு சோதனைச்சாவடிக்கு செல்ல காலை ஏழு மணியிலிருந்து மாலை ஆறு மணிவரை மட்டுமே அனுமதி அளிக்கப்படும். எனவே, இந்த காட்டுப்பாதையில் பயணம் செல்ல விரும்புபவர்கள் அதற்கு ஏற்றாற்போல பயணத்தை அமைத்துக்கொள்ளுமாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையும் படியுங்கள்:
பேச்சு போட்டிகளில் வெற்றி பெறுவது எப்படி?
வால்பாறை...

ஒரு பக்கம் அடர்ந்த காடு; ஒரு பக்கம் பள்ளத்தாக்கு எனப் பாதை முழுவதும் நமக்கு அச்சம் ஊட்டுவதாக உள்ளது. காட்டு விலங்குகள் சகஜமாக உலவும் இந்த பகுதியில் யானைகளின் நடமாட்டம் மிக அதிகம். எப்பொழுது வேண்டுமானாலும் யானைகள் வாகனங்களைத் துரத்துவதற்கு வாய்ப்புகள் உண்டு. நிசப்தமான மூங்கில் காட்டு வழியில் திடீரென கேட்கும் யானையின் பிளிறல் நம் அடிவயிற்றைக் கலக்கச் செய்யும். சாலையில் தென்படும் யானையின் சாணம் அப்பொழுதுதான் ஒரு யானை கடந்து சென்றிருப்பதை நமக்கு உணர்த்தும் பொழுது ஒரு கணம் நாம் தப்பித்தோம் என யோசிக்கத் தோன்றும். நமக்கு அதிர்ஷ்டம் இருந்தால் பிற வனவிலங்குகளான சிறுத்தை, புலி, காட்டுப் பன்றி, மான், குரங்கு முதலியவற்றைக் காண முடியும்.

யானை...
யானை...

இந்த காட்டுப் பாதையைக் கடக்க இரண்டு மணி நேரத்திற்கு மேல் எடுக்கும். அந்த இரண்டு மணி நேரமும் வன விலங்குகளின் குறிப்பாக யானையின் குறுக்கே நாம் மாட்டாமல் இருப்பது நல்லது. வனத்துறை அதிகாரிகள் தக்க சோதனைக்கு பிறகே அனுமதித்தாலும் வழியில் நிறுத்தி புகைப்படம் எடுப்பது, சாப்பிட நிறுத்துவது போன்றவற்றை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.  பாதுகாப்பாகச் சென்றோமேயானால் இரண்டு பக்கமும் இருக்கும் அருமையான இயற்கைக் காட்சிகளை ரசிக்க இயலும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com