பயணம் மேற்கொள்ள வயது ஒரு தடையல்ல! வாங்க போகலாம்!
ஒரே மாதிரியான தினசரி நடைமுறைகளைச் செய்து வரும் முதியவர்களுக்கு பயணம் என்பது ஓர் அற்புத மாறுதலை அளிக்கிறது. தினசரி செயல்பாடுகளில் இருந்து மாற்றம் காணவும், சாகசங்களின் மூலம் தங்கள் வாழ்வின் சாரத்தை மீண்டும் கண்டுணரவும் முதியவர்களுக்கு வழிவகுக்கிறது.
முதியவர்களுக்கு பயணம் என்பது ஏன் முக்கியமானது?
பயணம் செல்வது உடலை மட்டுமல்ல, மனதின் செயல்பாட்டையும் தூண்டுகிறது. உணர்வுபூர்வமாக நலமளிக்கிறது. தன்னையே உணரவும் தன்னை நெருங்கியவர்களோடு தொடர்பு கொள்ளவும் அது பயன்படுகிறது. இயற்கையின் அழகில் முழுகுவது, கலாச்சார அடையாளங்களைக் கண்டறிவது, இளவயது நிகழ்வுகளை மீண்டும் நினைவுக்குக் கொண்டுவருவது என கடந்த காலம், நிகழ்காலம், வருங்காலம் ஆகியவற்றுக்கிடையே பயணம் ஒரு பாலமாகத் திகழ்கிறது.
இடங்களைப் பார்ப்பது என்பதைத் தாண்டியும், பயணங்கள் முதியவர்களுக்கு பல பயன்களை அளிக்கின்றன. தோட்டங்களில் நடப்பது, கடற்கரையில் நடப்பது போன்றவை ரத்த ஓட்டத்துக்கு உதவி, உடலுக்கு இலகுத் தன்மையை அளித்து, ஒட்டுமொத்தமாக உடல் உறுதியைக் கூட்டுகின்றன. புதிய சூழல்களும் புதிய அனுபவங்களும் மூளைக்கு புத்துணர்ச்சி அளித்து அறிவாற்றல் குறைவதை தடுக்கின்றன.