
விமானத்தில் பயணம் செய்யும்போது இந்த விஷயங்களைச் செய்தால், எந்த காலத்திலும் உங்களால் விமானத்தில் பயணிக்க முடியாது.
விமானம் என்பது எந்தவித பிடிமானமும் இல்லாமல் அறிவியல் தொழில் நுட்பத்தை மட்டுமே நம்பி வானத்தில் பறக்கும் ஒரு எந்திரம் ஆகும். விமானத்தில் பறக்க ஆகும் செலவு அதிகம். அதே நேரம் பாரம்பரிய போக்குவரத்து எந்திரமான கப்பலில் பயணிக்க, விமானத்தைவிட 10 மடங்கு அதிகம் செலவிட வேண்டும். மேலும் கப்பலில் பயணம் செய்ய மாதக்கணக்கில் ஆகும். விமானம் அதிகபட்சம் நீண்ட தூரத்தை ஒரு நாளில் எட்டிவிடும். இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் கடல் கடக்கும் பயணத்திற்கு விமானம் ஒன்றே தீர்வாக உள்ளது.
நீண்ட தூர பயணத்தை விமானம் எளிதாக்கி உள்ளது. மற்ற பயணங்களைப்போல விமானப் பயணத்திலும் ஆபத்து உள்ளது. அதனால், விமானப் பயணத்தை பாதுகாப்பாக வழங்க விமான நிறுவனங்கள் உறுதியாக உள்ளது. விமானப் பயணத்தில் பயணிகள் ஏதேனும், தவறான செய்கையில் ஈடுபட்டாலோ, விமானத்தின் பாதுகாப்புக்கு (Air travel safety) எதிராக நடந்தாலோ, விமான நிறுவனம் அவரை தடை செய்து கருப்புப் பட்டியலில் சேர்த்துவிடும். அதன் பின்னர் அவர் அந்த நிறுவன விமானத்தில் பயணிக்க முடியாது.
விமானம் என்பது சர்வதேச பயணத்திற்கு மட்டுமல்லாமல், உள்நாட்டு பயணத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. சென்னையிலிருந்து கோவைக்கு அவசரமாக செல்ல காரில் பயணித்தால் 7 மணி நேரம் போக்குவரத்திற்கு ஆகும். இதே விமானத்தில் சென்றால் 1 மணி நேரத்தில் சென்றுவிடலாம். நாட்டின் முக்கிய நகரங்களுக்கு ரயிலில் சென்றால் 2 நாட்களுக்கு மேல் கூட ஆகும். ஆனால், விமானம் இங்கு அதிகபட்சம் 5 மணி நேரத்தில் நாட்டின் வட எல்லைக்கு சென்றுவிடும்.
அவசரமான காலக்கட்டம், மருத்துவ அவசரம் போன்றவற்றிற்கு சரியான நேரத்தில் செல்ல விமானம் தவிர வேறு வழியில்லை. வெளி நாடுகளில் உள்ள உறவுகளை சந்திக்கவும், மேம்பட்ட மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாடு செல்லும் நிர்பந்தம் ஏற்படும் பட்சத்தில் ஒருவர் விமான நிறுவனத்தால் தடை செய்யப்பட்டு இருந்தால் அவர் நிலை பரிதாபம்தான்.
இந்த விதிகளை மீறினால் தடை செய்யப்படுவீர்கள்:
விமானத்தில் பயணம் செய்யும்போது, நீங்கள் விமான ஊழியர்களின் நடவடிக்கைகளில் தலையிட்டாலோ அல்லது விமானப் பாதுகாப்பிற்கு குந்தகம் விளைவித்தாலோ, நீங்கள் தடை செய்யப்படுவீர்கள்.
விமானத்தில் அநாகரீகமான ஆடைகளை அணிந்திருந்தால், அது மற்ற பயணிகளுக்கு சங்கடத்தை ஏற்படுத்தினால், விமான நிறுவனம் உங்களைத் தடை செய்யும்.
விமான ஊழியர்கள் அல்லது சகப்பயணிகளிடம் ஏதேனும் வாய் தகராறில் ஈடுபட்டால், தவறாக தவறாக நடந்து கொண்டால், நீங்கள் தடை செய்யப்படலாம்.
விமானத்தில் யாருடனாவது சண்டையிட்டாலோ அல்லது கை கலப்பில் ஈடுபட்டாலோ, நீங்கள் கருப்புப் பட்டியலில் சேர்க்கப் படுவீர்கள். அதுவும் முக்கியமாக விமானப் பணியாளர்களிடம் சண்டையிட்டால் தண்டனையும் அனுபவிக்க வேண்டி இருக்கும்.
விமானத்தில் சிகரட் பிடிக்க முயற்சி செய்தால், இ சிகரெட் மற்றும் வேப்பரைசரைப் பயன்படுத்த முயற்சித்தால் தடை செய்யப்பட வாய்ப்பு உள்ளது.
சட்டவிரோதமாக விமானத்தில் பயணித்ததை கண்டுபிடித்தால் வாழ்நாள் தடை விதிக்கப்படலாம்.
விமானத்தின் பைலட் அறைக்குள் நுழைய முயற்சி செய்தாலோ, அனுமதிக்கப்படாத பகுதிக்குள் நுழைய முயற்சி செய்தாலும், ஏதேனும் ஆயுதத்தை மறைத்து வைத்திருந்தாலும் வாழ்நாள் தடை விதிக்கப்படும்.
தடையின் கடுமைகள்:
சிலசமயம் தடை ஒரு சில ஆண்டுகள் விதிக்கப்படலாம். அது ஒரு குறிப்பிட்ட விமான நிறுவனத்திலும் அவர்களின் துணை நிறுவனங்களிலும் தடையை பகிரமுடியும். விஷயத்தின் தீவிரத்தை பொறுத்து மற்ற விமான நிறுவனங்களும் ஒருவரது தடையை தங்கள் நிறுவனத்திலும் உறுதிசெய்ய முடியும்.
ஒரு சில நாடுகளுக்கு மற்றும் உள்நாட்டில் ஒரு சில நகரங்களுக்கு விமானத்தில் செல்ல ஒரே விமான நிறுவனம் மட்டுமே செயல்படும். அதுபோன்ற சூழலில் இந்த தடை பெரிய பாதிப்பை தரலாம்.