ஆலப்புழா கேரள மாநிலத்தின் அழகிய சுற்றுலாத் தலங்களில் ஒன்று. கிழக்கின் வெனிஸ் நகரம் என்று கூறப்படும் ஆலப்புழா படகு பந்தயங்களுக்கும், தேங்காய் நார் தொழிலுக்கும் பேர் பெற்றது.
காஷ்மீரில் பாரம்பரிய சின்னமான படகு வீடுகள் இருப்பதுபோல் கேரளாவிலும் உள்ளது. நம் ரொட்டீன் வாழ்க்கையிலிருந்து கொஞ்சம் வித்தியாசமான சூழலுக்கு நம்மை அழைத்துச் செல்கிறது.
இந்த படகு வீட்டை இரண்டு ஆட்கள் கவனித்துக் கொள்கிறார்கள். இவர்களே சமையலும் செய்து கொடுக்கிறார்கள். மதிய உணவுக்கு நம்மிடமே மெனு கேட்டு சமைத்து தருகிறார்கள். கடல் உணவுகள் மெனுவில் இருந்தால் கரையோர சந்தை பகுதியின் முன் படகினை நிறுத்தி வாங்கிக் கொண்டு பயணிகளுக்கு சுவையான விருந்தளிக்கிறார்கள்.
போட்டிலேயே மாலை 6:00 மணி வரை பயணம் செய்தோம். பிறகு படகை ஓரிடத்தில் நிறுத்தி விடுகிறார்கள். மறுநாள் காலை 9 மணிக்கு தான் திரும்பவும் பயணம் ஆரம்பிக்கிறது. இரவு உணவும் நாம் விரும்பியதை செய்து தருகிறார்கள்.
அடுத்த நாள் காலை சூரியனின் ஒளி படகிலும் தண்ணீரிலும் படும்போது நம் கண்களுக்கு நிறைய மாயாஜாலங்களை செய்கிறது. சூரிய ஒளியில் தண்ணீர் பொன் கலரில் மின்னுவதை பார்க்க மிகவும் அழகாக இருந்தது.
தூங்கி எழுந்ததும் காலையில் ஆப்பமும், கடலைக் கறியும் சுடச்சுட பரிமாற அதன் சுவையில் சொக்கிப் போனோம்.
படகு வீடு தண்ணீரில் மிதந்து செல்லும்போது தண்ணீரின் சத்தமும் இயற்கை காட்சிகளும் நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது.
மிக மிக ரம்யமான பயணம். மறக்க முடியாத பயணம். சீக்கிரம் முடிந்து விட்டது போல் தோன்றியது.
கேரளாவில் ஆலப்புழாவில் படகு வீட்டில் ஒரு நாள் முழுவதும் தங்கி வந்த அனுபவம் உண்மையிலேயே மிகவும் அலாதியானது. 10,000 ரூபாய் முதல் படகு வீடுகள் வாடகைக்கு கிடைக்கின்றன. சீசனிலும், விடுமுறை நாட்களிலும் அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் வருவதால் அந்த நேரங்களில் கட்டணங்கள் மிகவும் அதிகரிக்கின்றன.
நாங்கள் ஆலப்புழாவிலிருந்து ஒரு நாள் வாடகைக்கு போட் ஹவுஸ் எடுத்துக் கொண்டோம். பாலக்காட்டில் ஒரு நிகச்சிக்கு சென்றுவிட்டு அடுத்த நாள் விடியற்காலை ட்ரெயின் பிடித்து ஐந்து மணி நேர பயணம் செய்து காலை 10:30 மணிக்கு எல்லாம் போட் ஹவுஸ் இருக்கும் இடம் சென்றடைந்தோம்.
எங்களுக்கு (check in time 12 to check out time 9am) 12 மணி முதல் அடுத்த நாள் ஒன்பது மணி வரை ஒதுக்கப்பட்டிருந்ததால் போனதும் முதலில் வெல்கம் டிரிங்க்ஸ் குடித்து எங்கள் லக்கேஜ்களை ஓர் இடத்தில் வைத்து ஃப்ரஷ்அப் பண்ணிக் கொண்டோம். ஹவுஸ் போட்டில் ஒரு நாள் முழுவதும் மிகவும் அழகாக கழிந்தது.
ஆலப்புழா மற்றும் குமரக்கோம் இரண்டும் பேக் வாட்டர் மற்றும் படகு சவாரிக்கு மிகவும் புகழ் பெற்றது. ஆலப்புழாவில் நிறைய (இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட) படகுகள் உள்ளன. அதனால் இங்கு போட் ஹவுஸ் ஓரளவுக்கு குறைவான வாடகைக்கு கிடைக்கிறது. குமரக்கோவில் இந்த அளவுக்கு நிறைய போட் ஹவுஸ் இல்லாததால் வாடகையும் ஜாஸ்தி.
படகு வீட்டில் உள்ளே நுழைந்ததும் வசதியான வரவேற்பும், அலங்கரிக்கப்பட்ட படுக்கையறை, பாத்ரூம், நவீன வசதிகளுடன் கூடிய சமையல் அறை, படி ஏறி சென்றால் மேல்பகுதியில் அழகான டைனிங் ரூமும் உள்ளது.
வாய்ப்பு கிடைத்தால் நீங்களும் ஒருமுறை இந்த அழகான படகு வீட்டில் தங்கி வாருங்கள். மறக்க முடியாத அனுபவம் ஏற்படும்.