Allure Of The Seas - உல்லாச கடல் உலா போவோமா?

sea ​​voyage
sea ​​voyage
Published on

- ரெ.ஆத்மநாதன், காட்டிகன், சுவிட்சர்லாந்து

‘க்ரூஸ்’ (cruise) என்பதற்குக் கப்பல் என்றும், கடல் உலா என்றும் பொருள் கூறப்படுகிறது.

என்ன இவன் திடீர்னு க்ரூஸ் ஆராய்ச்சியில இறங்கிட்டான்னுதானே யோசிக்கிறீங்க?ஆராய்ச்சியெல்லாம் அப்புறம் வெச்சுக்கிடுவோம்.

அதோ பாருங்க…நம்ம க்ரூஸ், அலூர் ஆப் தி சீஸ் (Allure of the seas) ... அதாவது ’கடல்களின் கவர்ச்சி’ புறப்படத் தயாரா நிக்குது… வாங்க போய்க்கிட்டே பேசலாம்! வசதிகளும், பொழுது போக்கு அம்சங்களும் நிறைந்த மிகச் சிறந்த க்ரூஸ் இது என்று சொல்கிறார்கள்.

புளோரிடாவின் ஆர்லண்டோ கனவெரல் துறைமுகத்திலிருந்து (Port Canaveral, Orlando, Florida) புறப்பட்டு பஹாமாஸ் வரை சென்று வரும் 3 நாள் டூர் இது.

நமக்கெல்லாம் கப்பலில் அவ்வளவு பரிச்சயம் கிடையாது. வேகமாகப் போய் கவுண்டரில் ஃபார்மாலிடிசை முடித்துக் கொண்டு (விமானத்திற்கு போவதைப் போலவே) உள்ளே செல்கிறோம்.

எங்களுக்கு ஒதுக்கப்பட்ட அறை 9 வது டெக்கில். டெக் என்பதை மாடி என்றும் அழைக்கலாம். அந்த க்ரூஸில் மொத்தம் 18 டெக்குகள். 361 மீட்டர் நீளமும், 65 மீட்டர் அகலமும் கொண்ட பிரமாண்டக் கப்பல் அது. 2742 அறைகளைக் கொண்ட அதில் 5484 பேர் பயணம் செய்யலாமென்றால் அது நிச்சயமாகப் பெரிய கப்பல்தானே!

Ship
Ship

பல டெக்குகளில் தங்கும் அறைகளும்,சிலவற்றில் ஷாப்பிங் காம்பளக்சுகளும் அமைந்துள்ளன. இன்னும் சிலவற்றைப் பொழுது போக்கு அம்சங்களுக்காக ஒதுக்கியுள்ளார்கள்.

குடும்பம்குடும்பமாக வரும் அனைவரும் மூன்று நாட்களுக்கு உற்சாகத்தில் திளைக்க வேண்டுமென்ற ஒரே குறிக்கோளுடன் செயல்படுவதே அவர்கள் நோக்கமாக இருக்கிறது.

அறைகள், நட்சத்திர ஓட்டல் அறைகளுக்கு இணையாக உள்ளன. ஒவ்வொரு அறையிலும்,ஏ.சி.,ஹீட்டர் உண்டு; டி.வி.,யும்,போனும் உள்ளன; மினி ப்ரிஜ்,லாக்கர் வசதி செய்திருக்கிறார்கள்; கட்டிலும்,மெத்தையும்,கம்பர்ட்டும் உண்டு; டேபிள்,சேர்,பொருட்களை வைக்க பீரோ என்று ,அத்தனையும் அடக்கம்.

ஒவ்வொரு டெக்குக்கும் செல்ல மூன்று, நான்கு இடங்களில் லிப்ட்டும்,அருகிலேயே படிக்கட்டுகளும் உள்ளன. உள்ளே சென்று விட்டால் ஒரு நகருக்குள் நுழைந்ததைப்போல இருக்கிறது. கப்பலுக்குள் இருப்பதைப்போலவே தெரியவில்லை.

வெள்ளிக் கிழமை மாலை 4 மணிக்குப் புறப்பட்ட அது, அடுத்த நாள் காலையில் பஹாமாஸ் நாட்டின் தலைநகரான நசாயு (Nassu) சென்றடைந்தது. அங்கு எங்களுக்கு முன்னே இரண்டொன்று நிற்க, எங்களுக்குப் பிறகும் ஒன்றிரண்டு வர,அத் துறைமுகமே கப்பல்களால் நிறைந்து வழிந்தது. (Galaxy of Cruises)

அப்பப்பா…ஒவ்வொன்றுந்தான் எவ்வளவு பெரியது! எவ்வளவு வசதிகள்!

காலையில் எழுந்ததும் நடைப்பயிற்சி செய்ய, ஒரு டெக்கில் கப்பலைச் சுற்றி வரும் விதமாக ட்ராக்குகள் அமைத்துள்ளார்கள். அங்கிருந்தபடியே சூரிய தரிசனமும் செய்து கொள்ளலாம்.

ஆங்காங்கே இருக்கும் சின்னச் சின்ன ஷாப்களில் காபி, டீ, பிற பானங்கள் என்று எல்லாவற்றையும் வைத்துள்ளார்கள். நம் விருப்பத்திற்கேற்றவாறு செலக்ட் செய்து சாப்பிடலாம். காபியை அருந்திவிட்டு உடற்பயிற்சிக் கூடம் (Fitness Center) சென்று அங்குள்ள கருவிகள் மூலம் உடலை பிட் ஆக்கிக் கொள்ளலாம்!

பின்னர் அறைக்குச்சென்று, தண்ணீரிலோ-வெந்நீரிலோ, உங்களுக்குப் பிடித்ததில் குளித்து விட்டு, பிரேக்ஃபாஸ்ட் சாப்பிடச் செல்லலாம். அமெரிக்கன்,ஏஷியன், யூரோபியன்,சைனீஸ், இண்டியன் என்று ஏராளமான வகைகளில் உணவுகளும், பழங்களும், விருப்பமான பானங்களும் உண்டு. வெஜ், நான்வெஜ் ஐயிட்டங்கள் என்று அடுக்கடுக்காக உள்ளன. நமக்குப் பிடித்ததைச் சாப்பிட்டுக் கொள்ளலாம். பஃபே டைப்தான்.

‘உண்ட களைப்பு தொண்டனுக்கும் உண்டு’ என்பார்கள். சிறிது நேர ஓய்வுக்குப் பிறகு, ஸ்விம்மிங் பூல் சென்று நீந்தலாம். வெந்நீர் ஊற்றில் சிறிது நேரம் அமர்ந்து விட்டு, பின்னர் பக்கத்திலுள்ள நீச்சல் குளத்தில் இறங்கி நீச்சலடிக்கலாம்.

(நாங்கள் சிறுவர்களாக இருந்தபோது எங்களூர் பிடாரி குளத்தில் காலை11 மணி வாக்கில் இறங்கினால் ஒன்றரை ரெண்டு மணி வரை கூடக் கரையேற மாட்டோம். பிடாரி கோயில் திருவிழா சமயமென்றால், அங்கிருக்கும் பண்டாரம் வந்து கரேயேறச் சொல்லி நிர்ப்பந்தப்படுத்துவார். அதற்குள் கண்,கை,கால்களெல்லாம் ஒருவித வெண்மை படர்ந்து விடும். சிலருக்குக் கண்கள் சிவந்து விடும்.)

ம்!…அவையெல்லாம் பழைய ஞாபகங்கள்!

Swimming Pool on the ship
Swimming Pool on the ship

நீச்சல் குளத்தின் அருகிலேயே ஐஸ் க்ரீம் பார்லர்கள் உள்ளன. நீர் சொட்டும் உடைகளுடன் ஐஸ்க்ரீம் சுவைப்பதிலும் ஓர் ஆனந்தமே!

நடுநடுவே ஆங்காங்கே உள்ள தியேட்டர்களில் ஷோக்கள் நடத்துகிறார்கள்.

குடை ராட்டிணம் ஓடிக் கொண்டே இருக்கிறது. சிறுவர்களும் பெரியவர்களுங்கூட குதிரை, யானைகளில் அமர்ந்தபடி சுற்றி வந்து குதூகலிக்கிறார்கள்.

ஜிப் லைன் (Zip Line) இயங்கிக் கொண்டே இருக்கிறது. கம்பியில் தொங்கியபடி குறிப்பிட்ட தூரத்தைக் கடப்பதே இந்த ஜிப் லைன். கொஞ்சம் துணிச்சல் வேண்டும். சற்றே த்ரில் தரக்கூடியது.

இப்படி நேரத்தை இதமாகக் கடத்தியபின் லஞ்சுக்குச் செல்லலாம்.

லஞ்சிலும், பிரேக் ஃபாஸ்ட் போலவே அனைத்து வகை உணவுகளும் உண்டு. பின்னர் ஆங்காங்கே போடப்பட்டுள்ள சாய்வு நாற்காலிகளில் படுத்தபடியும், அமர்ந்தபடியும் கடற்காற்றுடன், இயற்கை அழகையும் ரசிக்கலாம்.

மாலையில், சிறிய கோல்ப் மைதானத்தில் விளையாடலாம். சர்ஃபிங் (Surfing) விரும்பிகள் சர்ஃபிங் செய்ய வசதிகள் உள்ளன. ஷாப்பிங் ப்ளேசை விசிட் செய்யலாம்.

மாலை நேரச் சூரியன் அஸ்தமனத்தையும், நீலக் கடலின் நீண்ட அழகையும் திறந்த வெளி டெக்குகளிலிருந்து கண்டு களிக்கலாம். டான்சில் விருப்பமுள்ளவர்களுக்கென்று டான்ஸ் ஷோக்கள் நடத்துகிறார்கள். மேடையில் நாட்டியத்தை அவர்கள் ஆட, கீழே உள்ள ரசிகர்களும் ஆட்டம் போட்டு மகிழ்கிறார்கள்.

க்ரூசின் ஓர் ஓரத்தில் உள்ள டைவிங் ஏரியாவில் மிகச் சிறந்த நீச்சல் வீரர்கள் டைவ் அடிப்பதும், நீரில் சாகசங்கள் செய்வதும் கண்களுக்கு விருந்து மட்டுமல்ல; மனதுக்கும் துணிச்சலை வரவைக்கும் நிகழ்ச்சி! காலரியின் முன்னே அமர்ந்திருப்போர் அடிக்கடி நீரில் நனைய, காலரி இந்தக் காட்சிகளுக்காக நிரம்பி வழிகிறது!

இப்படியே ஒரு நாள் கழிந்தது.

மாலையானதும், க்ரூஸ் தனது பயணத்தை அடுத்த டெஸ்டினேஷன் நோக்கித் தொடர்ந்தது. அறையில் படுத்து விட்டோமென்றால், க்ரூஸ் செல்வதுகூட நமக்குத் தெரிவதில்லை!

Island
Island

அடுத்த நாள் விடிந்தபோது, அது கொக்கோ கய் (Coco Cuy) என்ற தீவில் நின்றிருந்தது. இந்தத் தீவு க்ரூஸ் நிறுவனத்தின் சொந்தத் தீவாம்! ‘மாலை ஐந்து மணிக்குள் திரும்பி விடுங்கள்’என்ற வேண்டுகோளுடன் க்ரூஸ் பணியாளர்கள் வழியனுப்பி வைத்தார்கள்.

தீவுக்குள் பெரிய நீச்சல் குளம் அமைத்து வைத்திருக்கிறார்கள். சில் ஐலண்ட் (Chill Island), ஒயாஸிஸ் லகூன்(Oasis Lagoon), சவுத் பீச்(South Beach) கோவ் பீச்(Cove Beach), த்ரில் வாட்டர் பார்க்(Thrill Waterpark) என்று பல இடங்கள் இங்குள்ளன.

எல்லா இடங்களுக்கும் சென்று வர ட்ராம் போன்ற வாகனங்களை இயக்குகிறார்கள். விரும்புபவர்கள் நடந்து சென்றும் பார்த்து, ரசித்து, மகிழ்ந்து வரலாம்.

உள்ளே,எல்லா இடங்களிலும் பானங்களும் (Drinks), ஸ்னாக்குகளும், லஞ்ச் ஐட்டங்களும் வழங்க ஏற்பாடுகள் செய்துள்ளார்கள்.

ஆங்காங்கே வாலிபால், ஸ்னூக்கர் கோர்ட்டுகளும் உள்ளன.

பீச்களில் வேண்டும் அளவுக்கு இருக்கைகள் உள்ளன. கடலில் இறங்கிக் குளிப்பதும், பின்னர் சற்று நேரம் வெயிலில் காய்வதும், பிறகு இறங்கிக் குளிப்பதுமாக இருந்தனர் பலர்.

உள்ளே வாட்டர் ஸ்போர்ட்டுகளும் (Water Sports) உள்ளன. மிக நீண்ட ஜிப் லைனும் உள்ளே உண்டு.

Island
Island

சிறுவர்கள் விளையாடவென்று பல வசதிகளைச் செய்து வைத்திருக்கிறார்கள்.

நாங்கள் ஒயாஸிஸ் லகூனில் நீச்சலடித்து விட்டு, பீச்சில் நீரில் இறங்குவதும் ஏறுவதுமாகப் பொழுதைக் கழித்த பின், ஸ்னூக்கர் விளையாடினோம்.

ஸ்னூக்கர் என்பது பெரிய போர்டில், நடுவில் வைக்கப்படும் பந்து போன்ற காய்களை, அதற்கென பிரத்யேகமாக அமைக்கப்பட்ட குச்சிகளைக் கொண்டு, போர்டின் ஓரங்களில் உள்ள துவாரங்களில் தள்ளி விடுவது.

ஆனால் இங்கோ…

அந்த போர்டைப் பூமியில் அமைத்து,கைப்பந்துகளை உள்ளே வைத்து, குச்சிகளுக்குப் பதிலாகக் கால்களால் உதைத்து விளையாடும் அமைப்பை ஏற்படுத்தி இருக்கிறார்கள். இது புதுமை என்பதால் இதில் விளையாட எப்பொழுதும் கூட்டம் அலைமோதுகிறது!

ஐந்து மணிக்கு முன்னதாகவே க்ரூசுக்குத் திரும்பினோம்.

இரவு உணவை உண்ண மெயின் டைனிங் ஹால் சென்றோம். பிற டைனிங் ஹால்களில் பஃபே முறை பின்பற்றப்படுகையில் இதில் மட்டும் நாம் ஆர்டர் செய்து, சர்வர்கள் சப்ளை செய்யும் முறை பின்பற்றப்படுகிறது.

நாங்கள் தமிழர்கள் என்பதை அறிந்த கல்கத்தா சப்ளையர், தமிழ் தெரிந்த சூபர்வைசர் பிரசன்னாவை அழைத்து வந்தார். அவர் தமிழில் உரையாடி, நமக்கு ஒத்து வரும் நல்ல ஐட்டங்களை ஆர்டர் செய்ய உதவினார். கல்கத்தாகாரரும், திருச்சி லால்குடியைச் சேர்ந்த பிரசன்னாவும் காட்டிய அன்பு மறக்க முடியாதது!வெளிநாடுகளில் இருக்கையில், சொந்த நாட்டுக்காரர்களைச் சந்திக்கும்போது ஓர் இனந்தெரியாத மகிழ்ச்சி இதயத்தை நிறைக்கவே செய்கிறது.

போட்டோ ஷூட்டில் முதல் நாளே எடுத்த போட்டோக்களைக் கலெக்ட் செய்து கொண்டு அறைக்குத் திரும்பினோம்.இரவு நிம்மதியாக உறங்கி விட்டு,காலையில் கண் விழித்தபோது புறப்பட்ட இடத்திற்கே க்ரூஸ் வந்திருந்தது.

Island
Island

இறங்க மனமின்றி இறங்கினோம்!

நமது நாட்டிலும் நீண்ட கடற்கரைகள் உள்ளன. முக்கடலும் சங்கமிக்கும் பீச்கள் உள்ளன.

ரயிலிலும்,பேரூந்திலும் போதுமான இடமின்றி நமது மக்கள் அல்லாடுகிறார்கள்!பண்டிகை சமயங்களிலோ…பயணத்தைப் பற்றிக் கேட்கவே வேண்டாம்.

குறிப்பாக,நமது தமிழ் நாட்டில் தலைநகரம் சென்னை தொடங்கி, பாண்டிச்சேரி, கடலூர், நாகப்பட்டிணம், தூத்துக்குடி, நாகர்கோயில் என்று கடற்பயணம் மேற்கொள்ள வசதிகள் இருந்தும், நாம் அதில் கவனம் செலுத்தாமல் இருக்கிறோம்.

க்ரூஸ் அளவிலான பெருங்கப்பல்கள்கூட வேண்டாம். சிறிய அளவிலான ஃபெரி என்றழைக்கப்படும் போட்டுகளையாவது விட ஏற்பாடு செய்யலாம். அதன் மூலம் ட்ராஃபிக் ஜாம் என்று அழைக்கப்படும் போக்குவரத்து நெரிசல் குறைய வாய்ப்பு ஏற்படும்.

புகை மற்றும் ஒலி மாசால் நமது இந்திய நாட்டின் தலை நகரமே சீர்கேடு அடைந்துள்ளது. நீர்ப்போக்குவரத்து,மாசைக் குறைக்கவும் உதவும்.பொறுப்பில் இருப்பவர்கள் புரிந்து கொண்டு செயல்பட்டால் அனைத்தும் சாத்தியமே!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com