

மன அழுத்தங்களை சமாளிக்கவும் மற்றும் மன சோர்வு நீங்கி புத்துணர்வு பெறவும் தற்போதைய சூழலில் பெரும்பாலோர் பயணங்களை மேற்கொள்கிறார்கள். பயணம் மூளையின் செயல்திறனை மேம்படுத்தி, படைப்பாற்றலை வளர்க்கிறது. வெளிநாட்டு பயண அனுபவங்கள் நம்முடைய சிந்தனைகளின் நெகிழ்வுத்தன்மையும் ஆழமும் ஒருங்கிணைந்த தன்மையும் அதிகரிக்க செய்கின்றன.
கடந்த ஜூன் மாதம், வியட்நாமில் உள்ள சுற்றுலா தலமான ஹோ சி மின் என்ற இடத்திற்கு ஐந்து நாள் பயணமாகச் சென்று வந்தது மறக்க முடியாத மன நிறைவைத் தந்த அனுபவமாக இருந்தது.. ஹோ சி மின் நகரம் முன்னர் சாய்கான் என்று அழைக்கப்பட்டது,. வியட்நாம் விடுதலை இயக்கத்தின் முக்கிய தலைவராக இருந்த ஹோ சி மின் என்பவர் பிரெஞ்சு காலனித்துவ ஆட்சியில் இருந்து வியட்நாமை விடுவிக்க போராடினார். அவர் நினைவாக இந்த நகரம் ஹோ சி மின் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இது வியட்நாமின் பொருளாதார இதயமாகவும், தெற்கு பிராந்தியத்தின் முக்கிய மையமாகவும் உள்ளது.
ரீயூனிபிகேசன் அரண்மனை (Reunification Palace)
இது ஒரு வரலாற்று நினைவுச் சின்னமாகவும், சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் இடமாகவும் இருக்கிறது. 1871ஆம் ஆண்டு கவர்னர்-ஜெனரலுக்கான குடியிருப்பாக சாய்கானில் (தற்போதைய ஹோ சி மின் நகரம்) இந்த மாளிகை கட்டப்பட்டதாக வரலாறு.
1945ஆம் ஆண்டில், ஹோ சி மின் "வியட்நாம் ஜனநாயகக் குடியரசு" என அறிவித்தபோது, இந்த கட்டிடம் அதன் நிர்வாகக் கட்டுமானமாக மாற்றப்பட்டது.. பின் 1955 இல், தென் வியட்நாம் குடியரசின் தலைமை அலுவலகமாக இது மாறியது, இந்த மியூசியத்தில் போரினால் ஏற்பட்ட பாதிப்புகளைப் பற்றிய காட்சிகளைப் பார்த்தபோது. சுதந்திரத்திற்காக நடைபெற்ற பெரிய போராட்டம், குறிப்பாக ரசாயன ஆயுதப்போர் எவ்வளவு கொடூரமானது என்பதை உணரச்செய்கிறது.
நோட்ரே டேம் தேவாலயம்
ஹோ சி மின் நகரின் மையத்தில் அமைந்துள்ள பழமையான சாய்கான் நோட்ரே டேம் தேவாலயம், புத்த, சீன மத ஆலயங்களான பகோடாக்கள். பகோடா (Pagoda) என்பது பல அடுக்குகளைக் கொண்ட கூரையுடன் அமைந்த கோபுரம் உள்ள கோயில்கள் ஆகும். பெரும்பாலான பகோடாக்கள் மதநோக்குடன் பெரும்பாலும் புத்தமத அடிப்படையில் கட்டப்பட்டவை.
சாய்கான் மத்திய தபால் நிலையம்
இந்தத் தபால் நிலையம் ஒரு தொடர்பு மையமாக மட்டுமில்லாமல், நகரத்தின் கட்டிடக் கலையும் வரலாற்றுச் சின்னமாகவும் திகழ்கிறது. வியட்நாமின் தபால் அமைப்பை நவீனமாக்கும் நோக்குடன் பிரஞ்சு குடியேற்றக்காரர்களால் கட்டப்பட்டது. இங்கு தற்போதும் இந்த தபால் நிலையம் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது.
ஜேட் எம்பெரர் பகோடா (Jade Emperor Pagoda)
ஹோ சி மின் நகரத்திற்கு பயணம் செய்யும் போது தவற விடக்கூடாத இடமாகும். ஆன்மிகம் மட்டுமன்றி, இந்த பகோடா பண்டைய சீனக் கட்டிடக் கலை அழகையும் கொண்டுள்ளது. ஜேட் எம்பெரர் வியட்நாம் புராணங்களில் மிகவும் முக்கியமான மற்றும் பிரபலமான கடவுள்களில் ஒருவர். இங்குள்ள மக்கள் காதல் வெற்றி பெறவும், குழந்தைச் செல்வத்திற்காகவும் விளக்கேற்றி இக் கோயிலில் வழிபடுகிறார்கள். மேலும் இங்குள்ள பழமையான நொக் ஹோங் கோயிலின் வளாகத்தில் ஒரு வயதான மூதாட்டி ஒரு பெண்ணின் முன் அமர்ந்து தீய சக்திகளை விரட்டும் மந்திரங்களை உச்சரித்தபடி மந்திரிப்பதைப் பார்க்க வியப்பாக இருந்தது.
மீகாங் டெல்டா
மீகாங் டெல்டா ஹோ சி மின் நகரத்திலிருந்து இரண்டு மணிநேர கார் பயணம். பின் அங்கிருந்து படகில் அழைத்துச் செல்கிறார்கள். படகில் ஏறியவடன், ஆற்று நீரில் கை வைக்காதீர்கள். இங்கு முதலைகள் அதிகம்’ என பயமுறுத்தினார்கள்..அரைமணி நேரத்தில் ஒரு அழகான மிகவும் அறியப்படாத கிராமத்தை வந்தடைந்தோம். தென்னை மரங்கள் சூழ எங்கும் பசுமையாக மனதைக் கொள்ளைகொண்டது. மழைக் காலமாதலால் லேசான தூறல். ரம்யமாக இருந்தது. உள்ளே சுற்றி வர குதிரை வண்டி, பேட்டரி கார் வசதிகள் உண்டு. முதலில் தேங்காய் பால் சேர்த்து தயாரிக்கப்படும் மிட்டாய் தொழிற்சாலை, பின் தேனைப் பயன்படுத்தி தயாரித்த உணவுகள் மற்றும் அழகுசாதனப் பொருட்களைப் பார்த்தோம்.
அடுத்ததாக எங்களை வியட்நாமின் பாரம்பரிய பாடல்கள், நடனங்கள் என கலை நிகழ்ச்சிகள் நடக்கும் இடத்துக்கு அழைத்துச் சென்றனர். அருமையாக இருந்தது. வெளியே வந்தபோது ஒரு இடத்தில் பெரிய பாட்டில்களில் உள்ள திரவங்களில் பாம்புகள் ,மற்றும் பெரிய தேள்கள் விற்பனைக்கு வைத்திருந்தனர். Snake Wine என்று சொல்கிறார்கள் பார்க்க பயமாக இருந்தது. மேலும் சிறிது துரத்தில் ஒருவர் மலைபாம்பை கைகளில் வைத்துக் கொண்டு நம் கழுத்தில் போட வருகிறார். அங்கிருந்து விரைந்தோம்.
குறைந்த பட்ஜெட்டில் பயணம் செய்ய உகந்த இடம் ஹோ சி மின் நகரம். வியட்நாமின் உணவுத் தலைநகரம் என்று இது அழைக்கப்படுகிறது ஹோ சி மின் நகரில் பல்வேறு உயர்ரக ஹோட்டல்கள், சர்வதேச உணவகங்கள் மற்றும் ஷாப்பிங் வசதிகள் உள்ளன, இங்கு நான்கு கடைகளில் ஒரு கடை காபி ஷாப்பாக இருக்கிறது. கோகனட் காபி, எக் காபி, வியட்நாம் காபி என பல வகை காபி கிடைக்கிறது. நம் மனமும் உடலும் புத்துணர்வு பெற சில நாள்கள் ஹோ சி மின்னில் இருந்துவிட்டு வரலாம்.