அம்பாஜி மாதா திருக்கோவில்!

அம்பாஜி கோவில்
அம்பாஜி கோவில்

51 சக்தி பீடங்களில் அம்பாஜியும் ஒன்று. இறைவனின் பிரபஞ்ச சக்தி இறங்கிய 12 முக்கிய சக்தி பீட தலங்களில் இதுவும் ஒன்றாகத் திகழ்கிறது.

குஜராத், ராஜஸ்தான் எல்லைப் பகுதியில் உள்ள அம்பாஜி நகரம் பிரசித்தி பெற்ற அபு மலைப் பகுதியில் இருந்து 45 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. லட்சக்கணக்கான பக்தர்கள் வந்த வண்ணம் இருக்கிறார்கள். இக்கோவில் எப்போதும் திருவிழா கோலம் பூண்டு காணப்படுகிறது. இத்திருக்கோவிலின் தெய்வமான அம்பாஜி மாதா அம்பாஜி நகரில் இருந்து மூன்று கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கப்பார் எனும் குன்றின் உச்சியில் கோவில் கொண்டு அருள் பாலிக்கிறார்.

இக்கோவில் மிகவும் பழமையானது. அம்பாஜி கோவில் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று கூறப்படுகிறது. ஏனெனில் கிருஷ்ண பரமாத்மா கோகுலத்தில் கண்ணனாக விளையாடி மகிழ்ந்தபோது அவரது மூன்றாவது வயதில் அவருக்கு இங்கு தான் முடி காணிக்கை கொடுக்கப்பட்டதாகவும், நந்தகோபனும் யசோதையும் இவரை கோவிலுக்கு கூட்டி வந்து மொட்டை அடித்ததாகவும் கூறப்படுகிறது. அன்று முதல் இன்று வரை கோவிலில் ஆண் குழந்தைகளுக்கு மட்டும் மொட்டை அடிக்கிறார்கள். பெரியவர்களுக்கோ பெண் குழந்தைகளுக்கோ இங்கு மொட்டை அடிப்பதில்லை.

900 படிக்கட்டுகள் கொண்ட கோவிலுக்கு ரோப் கார் வசதி உண்டு. இங்கு அம்மனின் பாதமும் ஒரு விளக்கு மட்டும் எரிந்து கொண்டிருக்கிறது.

அம்பா பவானி ...
அம்பா பவானி ...

அம்பாஜி என்று அழைக்கப்படும் அம்பா பவானி கோவிலில் உருவச்சிலை ஏதுமில்லை. பீடத்தின் மீது அம்மனின் உடையும், ஆபரணங்களும் அவர் இருப்பதைப் போலவே வைக்கப்பட்டு ஆராதனை நடத்தப்படுகிறது.

யந்திர வழிபாடு என்பது மிகவும் பழமையானது. அம்பாஜி கோவிலில் அம்பிகை ஒரு சிங்க வாகனத்தின் மீது அமர்ந்திருப்பது போல் தோற்றம் இருந்தாலும் உண்மையில் அம்பாள் சிலை அங்கு இல்லை. யந்திரமே வழிபாட்டில் உள்ளது. இந்த யந்திரத்தை ஒரு மார்பிள் ப்ளேட்டில் பொருத்தி நகைகளால் அலங்கரித்துள்ளனர். இந்த யந்திரமே அம்பிகை சிலை போன்ற தோற்றத்தில் உள்ளது. இதை தரிசித்தால் செல்வ வளம் பெருகும் என்பது நம்பிக்கை. இது தங்கத்தில் செய்யப்பட்டது. ஆமை வாகனத்தின் மீது வைக்கப் பட்டுள்ளது.

இதன் மீது 51 எழுத்துக்கள் உள்ளன. யந்திரத்தை அருகில் சென்று பார்க்க யாருக்கும் அனுமதி இல்லை. அம்பாஜி அம்பா பவானியின் சன்னிதி அளவில் சிறியதுதான். ஆனால் மண்டபம் மார்பிள் கற்களால் ஆனது. தலவிருட்சமாக அரசமரம் உள்ளது. கோவிலின் கோபுரத்தின் உச்சியில் 103 அடி உயரத்தில் மார்பிளால் ஆன கலசம் வைக்கப்பட்டுள்ளது. 3 டன் எடையில் செய்யப்பட்டு தங்க கவசத்தால் மூடப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
வாக்குவாதம் செய்யும்போது கடைபிடிக்க வேண்டிய விதிகள் எவை தெரியுமா?
அம்பாஜி கோவில்

இங்கு விநாயகர் சித்தி, புத்தி என்ற மனைவியருடனும் சுப், லாப் (சுபம், லாபம்) என்ற மகன்களுடனும், அவர்களது மகன்களான குஷல் மற்றும் சாம் என்ற பேரன்களுடனும் காட்சி தருவது ஆச்சரியமான ஒன்றாக உள்ளது. விநாயகருக்கு வட மாநில பாணியில் செந்தூரம் பூசப்பட்டுள்ளது.

இங்கு குங்குமம், லட்டு பிரசாதமாக தரப்படுகிறது. கோவில் காலை 6 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும். இக்கோவிலில் நவராத்திரி விழா ஒன்பது நாட்களும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com