வேலியில்லா மலர்த்தோட்டம்; ஆளில்லா வியாபாரம்!

Flower garden
Flower garden
Published on

‘ஏலேல சிங்கன் பொருள் எங்கே கிடந்தாலென்ன?’என்பதும்,

‘ஏலேல சிங்கன் பொருள் ஏழு கடல் போனாலும் திரும்பும்!’ என்பதும், நமது தமிழ் நாட்டுப் பழமொழிகள்.

அவை விளம்புவது நமது முன்னோர்களின் நேர்மை மற்றும் நெறி பிறழாத வாழ்வு முறையைத்தான்!

ஏலேல சிங்கர் திருவள்ளுவரின் காலத்தவர் என்றும், தெய்வப் புலவருக்குப் பொருளுதவிகள் செய்தவர் என்றும் கூறப்படுகிறது. கப்பல் வணிகத்தின் மூலம் பெரும் பொருள் ஈட்டியவர் என்றும், தயாள குணத்துடன் தாராளமாக வழங்கிய செல்வம் போக, மீதியைத் தங்கக்கட்டிகளாக்கிக் கடலில் போடச் செய்தாரென்றும் செய்திகள் கூறுகின்றன. அந்தத் தங்கக் கட்டிகளைக் கடலில் உள்ள சுறா மீன்கள் விழுங்கினவாம். பின்னர் அவை மீனவர் வலைகளில் சிக்கியபோது, அவற்றின் வயிற்றிலிருந்த தங்கக் கட்டிகளில் ஏலேல சிங்கர் பெயர் பொறிக்கப்பட்டிருந்ததால் அந்தத் தங்கக் கட்டிகளை மீனவர்கள் கொண்டு வந்து ஏலேல சிங்கரிடமே ஒப்படைத்தார்களாம்!

நாம் நேர்மையாகச் சேர்க்கும் சொத்து, நம் கையை விட்டு நிரந்தரமாகப் போகாது!

என்பதே இவர் வாழ்க்கை உணர்த்தும் பாடம்! இவ்வளவு பாடத்தையும் உலகுக்கு உணர்த்திய நாம், இன்று அவற்றையெல்லாம் மறந்து விட்டோம். ஆனால் வளர்ந்த நாட்டினர் அவற்றைத் தங்கள் வாழ்க்கை நெறிகளாக இன்றும் பின்பற்றி வருகின்றனர் என்பதுதான் நிதர்சனம்!

சூரிக்கின் புறநகர்ப் பகுதியில் ஒரு மலர்த்தோட்டம் அமைத்தார்கள். சில வாரங்களில் மலர்கள் பூக்க ஆரம்பித்தன. தோட்டத்திற்கு வேலிகள் கிடையாது.

ஒரு பெயர்ப்பலகை மட்டும் தூரத்தில் தெரியுமாறு வைத்திருந்தார்கள். சில நாட்களில் நாங்கள் அவ்விடத்தைக் கடக்கையில் சிலர் மலர்களைப் பறிப்பது தெரிந்தது.

அருகில் சென்று பார்த்ததும்தான் விபரம் புரிந்தது!

பெயர்ப்பலகைக்குக் கீழே ஒரு சிறு விலைப்பட்டியல். பக்கத்திலேயே காசைப் போடுவதற்கான ஓர் உண்டியல்! மூன்று விதமான வண்ண மலர்களைப் பயிரிட்டு இருந்தார்கள்.

Flower garden
Flower garden

இதுபோன்று ஆங்காங்கே பழங்கள், முட்டைகள், காய்கறிகள் விற்கும், ஆளில்லாக் கடைகள் நிறைய உண்டு.

உண்மையும், நேர்மையும் கொண்ட மக்கள் உள்ளதால்தான் இவை சாத்தியமாகின்றன.

‘பாய் முடைபவன் வீட்டில் படுக்கப் பாய் இருக்காது!’ என்பதுபோல உலகத்திற்குப் பலவற்றைப் பக்குவமாய் எடுத்துச் சொன்ன நாம், இன்று அவற்றைப் பின்பற்றுவதில்லை. அதற்குக் காரணமும் உண்டு. பொருளாதாரச் சமத்துவம் நம் நாட்டில் வெகுவாகக் குறைந்து வருகிறது. உலகின் பெரும் பணக்காரர்களும் நம்மிடையே உண்டு. ஒன்றுமற்ற ஏழைகளும் அதிகமுண்டு. நூறு ரூபாய்க்கே ஏங்குபவர்கள் உள்ள இந்த நாட்டில்தான் பல நூறு கோடி செலவு செய்து திருமணம் நடத்துபவர்களும் இருக்கிறார்கள். பெரும் ஏற்றத் தாழ்வுகளே பல குற்றங்களுக்கு அடிப்படையாக அமைகின்றன.

நாம் வளர்ந்த நாடாக மாற வேண்டுமானால் இந்த ஏற்றத் தாழ்வுகள் களையப்பட வேண்டும்!

அந்நாள் எந்நாளோ? அந்த நாளை அடைந்து விட்டால் நம்மூரிலும் ஆளில்லாத் தோட்டங்கள் அமைக்கலாம்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com