

ரொம்ப நாட்களாகவே மகாராஷ்டிராவில் அமைந்துள்ள ஜோதிர்லிங்கங்கள் மற்றும் துல்ஜாபூர், சோலாபூர், பண்டரீபுரம், கோலாபூர், நாசிக், அஷ்ட(8)கணபதி என எல்லா கோயில்களையும் பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. 25.11.25 அன்று துல்ஜாபூர் பவானி தரிசனம் கிடைத்தது.
அதற்காக சென்னையில் இருந்து நாகநாதம் சென்று நாகநாத ஜோதிர்லிங்கத்தையும், பர்லி வைத்யநாதம் ஜோதிர்லிங்கத்தையும் தரிசித்துவிட்டு துல்ஜாபூர் சென்று இரவு தங்கினோம். விடியற்காலையில் 1 1/2 மணிக்கெல்லாம் எழுந்து தயாராகி 3 மணிக்கெல்லாம் துர்கா பவானியை கண்குளிர தரிசித்தோம். கோவில் விடியற்காலை ஒன்றரை மணிக்கு எல்லாம் திறந்து விடும். நாங்கள் சென்றபோது ஏகப்பட்ட கூட்டம் அம்மனை தரிசிப்பதற்கு. ஸ்பெஷல் டிக்கெட் வாங்கி அம்மனை தரிசித்தோம்.
துர்கா பவானி:
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள துல்ஜாபூரில் அமைந்துள்ள மிகவும் பழமையான, புகழ்பெற்ற கோவிலாகும். இது 51 சக்தி பீடங்களில் ஒன்றாகவும், துர்கா தேவியின் ஒரு சக்தி வாய்ந்த வடிவமான பவானி தேவிக்காகவும் அர்ப்பணிக்கப்பட்டுள்ள கோவில் இது. பார்வதி தேவியின் அவதாரமாக போற்றப்படும் இவள் அசுரர்களை அழித்து நீதி வழங்கும் சிறந்த தெய்வமாக போற்றப்படுகிறார். இங்குள்ள பெரும்பாலான மக்களுக்கு இவள் தான் குலதெய்வம். இந்தப் புனித தலத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து வணங்குகிறார்கள். இக்கோவில் உஸ்மானாபாத்(தற்போது தாராஷிவ்) மாவட்டத்தில் உள்ள 'பாலா காட்' மலைத்தொடரில் அமைந்துள்ளது.
வீரவாள்:
மராட்டிய பேரரசர் சத்ரபதி சிவாஜி மகாராஜின் குலதெய்வமாக பவானி தேவி கருதப்படுகிறார். இவர் பவானி தேவியை அடிக்கடி தரிசிப்பது வழக்கம் என்றும், இவருக்கு பவானி வாள் எனப்படும் வெற்றி வாளை பவானி அம்மன் அளித்ததாகவும் கூறப்படுகிறது. இக் கோவில் சுமார் 12 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. 51 சக்தி பீடங்களில் இது சதி தேவியின் வலது கை விழுந்த இடமாக போற்றப்படுகிறது.
கோவில் காலை ஒன்றரை மணி முதல் இரவு 10 மணி வரை திறந்திருக்கும். நாங்கள் விடியற்காலை 3 மணிக்கு எல்லாம் கோவிலுக்கு சென்று விட்டோம். அழகான தரிசனம் கிடைக்கப்பெற்றதும் சிறிது நேரம் அமர்ந்து காலை 6 மணிக்கு நடைபெறும் அபிஷேகத்தையும் வெளியில் உள்ள பெரிய ஸ்கிரீனில் கண்டு களித்தோம். அபிஷேகத்தின் போது யாரையும் உள்ளே அனுமதிப்பதில்லை. வெளியில் பெரிய திரை உள்ளது. அதில் தான் கண்ணாரக் கண்டோம். இங்கு அபிஷேகம் செய்ய விரும்புபவர்கள் மற்றும் சிறப்பு தரிசனம் பெற விரும்புபவர்கள் முன்பதிவுகளை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் செய்து கொண்டு செல்ல வசதி உள்ளது.
அம்மனின் சுயம்பு தோற்றம்:
3 அடி உயரம் 2 அடி அகலம் கருப்பு நிற கண்டகி கல்லால் ஆன சுயம்பு வடிவம். எட்டு கைகளிலும் ஆயுதங்களை ஏந்தியபடி கொல்லப்பட்ட அரக்கன் மகிஷாசுரனின் தலையை தாங்கி நிற்கிறாள். அம்பாளின் அருகில் மார்க்கண்டேய ரிஷி துர்கா சப்தசதி ஸ்லோகங்களை படிக்கிறார். அநுபூதி தேவி அம்மனின் இடதுபுறம் தலைகீழாக நின்று தவக்கோலத்தில் காட்சி தருகிறாள் அம்பாளின் எதிரில் வெள்ளை பளிங்கினால் ஆன சிம்ம வாகனம் காணப்படுகிறது. இங்கு உற்சவமூர்த்தி கிடையாது. கருவறைக்கு வலப்புறம் அம்மனின் பள்ளியறை உள்ளது. இங்கு மூலவரையே ஆண்டுக்கு மூன்று முறை பள்ளியறைக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.
தீர்த்தங்கள் மற்றும் நுழைவாயில்:
கோவிலில் நுழைவாயிலுக்குள் வலது புறத்தில் மார்க்கண்டேய ரிஷிக்கு ஒரு சிறிய கோவில் உள்ளது. படிக்கட்டுகளில் இறங்கும் பொழுது வலது பக்கத்தில் 'கோமுக் தீர்த்தம்' மற்றும் இடது பக்கத்தில் 'கல்லோல் தீர்த்தம்' என்று அழைக்கப்படும் 'காலக்' உள்ளது. தேவியை தரிசனம் செய்வதற்கு முன்பு பக்தர்கள் இந்த தீர்த்தங்களில் நீராடி விட்டு செல்கின்றனர். கோவிலில் மூன்று நுழைவாயில்கள் உள்ளன. அவற்றில் இரண்டு நுழைவாயில்கள் மராட்டிய பேரரசர் சத்ரபதி சிவாஜியின் தந்தை சஹாஜி மற்றும் அவரது தாயார் ஜிஜாபாய் ஆகியோரின் பெயரில் அமைந்துள்ளன.
இக்கோவில் வளாகத்தில் உள்ள மற்றொரு தனித்துவமான கோயிலாக சரஸ்வதி தேவியின் தாந்திரீக வெளிப்பாடான மாதங்கி தேவி கோவில் உள்ளது. பிரதான வளாகத்தில் அன்னபூர்ணா தேவியின் கோவிலும் உள்ளது. இக் கோவிலில் அபிஷேகம் மற்றும் ஆரத்தி மிகவும் விசேஷமாக நடைபெறுகிறது. இக்கோவிலில் நவராத்திரி மற்றும் தசராவின் ஒன்பதாம் நாளில் ஆடுகள் பலியிடப்படுகின்றன. இக்கோவிலில் உள்ள பூஜாரிகள் மஹர் சமூகத்தை சேர்ந்தவர்களாக உள்ளனர்.
கோரிக்கைகளை தீர்க்கும் சிந்தாமணிக் கல்:
சிந்தாமணி கணேஷ் சன்னிதியில் ஒரு உருண்டையான கல் உள்ளது. இது கோரிக்கைகளை தீர்க்கும் சிந்தாமணிக் கல் என்று கூறப்படுகிறது. மனதில் ஒரு விருப்பத்தை எண்ணி இக் கல்லின் மீது கை வைத்தால், அது வலப்புறம் திரும்பினால் விருப்பம் நிறைவேறும் என்று நம்பப்படுகிறது. இந்தக் கல் ஒரு புனிதமான மற்றும் மந்திர சக்தி வாய்ந்ததாக கருதப்படுகிறது.
திருவிழாக்கள்:
இக்கோவிலில் நவராத்திரி, தசரா, கணேஷ் சதுர்த்தி, ஹோலி மற்றும் தீபாவளி போன்ற முக்கிய இந்து பண்டிகைகள் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.
எப்படி செல்வது?
அருகில் உள்ள ரயில் நிலையம் உஸ்மானாபாத். இங்கிருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் கோவில் அமைந்துள்ளது.