ஆசியாவின் மிகப்பெரிய துலிப் மலர்த் தோட்டம் எங்கே இருக்கு தெரியுமா ?

துலிப் மலர்கள்
துலிப் மலர்கள்
Published on

துலிப் மலர்களை நாம் திரைப்படங்களில் கண்டு ரசித்திருக்கிறோம். மகிழ்ந்திருக்கிறோம்.  துலிப் மலர்கள் மனதிற்கு மிகவும் மகிழ்ச்சி தருபவை.  பலப்பல வண்ணங்களில் இவை பூக்கும்.  ஈரானைத் தாயகமாகக் கொண்ட துலிப் பதினேழாம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் அறிமுகமானது. 

காஷ்மீரில் ஸ்ரீநகரில் ஜபர்வான் மலைகளின் அடிவாரத்தில் உலகப் புகழ்பெற்ற தால் ஏரியை ஒட்டி “இந்திரா காந்தி நினைவு துலிப் மலர்த் தோட்டம்” அமைந்துள்ளது.  இந்த துலிப் மலர்த் தோட்டம் முன்பு “சிராஜ் பாக்” என்று அழைக்கப்பட்டது.  இந்த துலிப் மலர்த் தோட்டம் ஆசியாவின் மிகப்பெரிய துலிப் மலர்த் தோட்டமாகும்.

துலிப் மலர்கள்
துலிப் மலர்கள்

சுமார் முப்பது ஹெக்டேர் பரப்பளவு கொண்ட இத்தோட்டத்தில் 1.5 மில்லியன் துலிப் மலர்கள் பல்வேறு வண்ணங்களில் பூக்கின்றன. இத்தோட்டத்தில் சுமார் 60க்கும் மேற்பட்ட துலிப் வகைகள் உள்ளன.  இத்தோட்டத்தில் ஆண்டுதோறும் வசந்த காலத்தில் துலிப் திருவிழா நடைபெறுவது வழக்கம்.  இந்த அபூர்வமான வியக்க வைக்கும் வண்ணமிகு துலிப் மலர்களைக் கண்டு ரசிக்க உலகம் முழுவதிலும் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். இத்திருவிழாவில் சுற்றுலா பயணியரை கவரும் விதத்தில் இசை மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகளை நடத்துவார்கள்.

குளிர்காலம் முடிந்து கோடைக்காலம் தொடங்கும் நேரத்தில் அதாவது மார்ச் இறுதியில் இருந்து ஏப்ரல் முதல் வாரத்தில் துலிப் மலர்கள் பூக்கத் துவங்கும். ஏப்ரல் மாதத்தில் முதல் இரண்டு வாரங்கள் இங்கு துலிப் திருவிழா நடைபெறும்.  

துலிப் மலர்கள்
துலிப் மலர்கள்

துலிப் மலர்கள் குறுகிய காலத்திற்கு மட்டுமே பூக்கும் தன்மை கொண்டது.  இதன் பின்னர் துலிப் மலர்கள் நாம் காண இயலாது.  இதனால் துலிப் மலர்கள் பூக்கும் காலம் மட்டுமே இந்திராகாந்தி நினைவு துலிப் மலர்த் தோட்டம் பொதுமக்கள் பார்வைக்காக சுமார் இருபது நாட்கள் மட்டுமே திறந்திருக்கும்.   இத்தோட்டமானது காலை ஒன்பது மணி முதல் மாலை ஏழு மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.   இத்தோட்டத்தைப் பார்வையிட நுழைவுக் கட்டணமாக பெரியவர்களுக்கு 75 ரூபாயும் சிறுவர்களுக்கு 30 ரூபாயும் வெளிநாட்டவர்களுக்கு 200 ரூபாயும் பெறப்படுகிறது. 

துலிப் மலர்த் தோட்டம் ஸ்ரீநகர் விமான நிலையத்திலிருந்து 22 கிலோமீட்டர் தொலைவிலும் ஸ்ரீநகர் ரயில் நிலையத்திலிருந்து 18 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.  வரும் ஏப்ரல் முதல் வாரத்தில் நீங்கள் ஸ்ரீநகர் சென்றால் இந்த துலிப் திருவிழாவைக் கண்டு ரசிக்கலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com