
மகாராஷ்டிரா மற்றும் கர்நாடக எல்லைகளுக்கிடையே மிகச்சிறிய மாநிலமாக கோவா அமைந்திருந்தாலும், இந்திய மண்ணிலுள்ள பண்டைய போர்த்துக்கீசிய ஆதிக்கத்திற்குரிய பகுதியாக உலகத்தினர் கோவாவை கருதுகின்றனர். அயல் நாட்டினர்களை அதிகம் கவரும் இடம் கோவா.
வட கோவா மற்றும் தென் கோவா ஆகிய இரண்டு பகுதிகளிலும், அழகான, அருமையான கடற்கரைகள் அமைந்துள்ளன. சுமார் 125 கிமீ நீளமுள்ள கடற்கரைப் பகுதியைக்காண பல இடங்களிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் வருடம் முழுவதும் கோவா வருகின்றனர்.
வட கோவா கடற்கரைகள்:
கலங்குட்
வட கோவாவிலுள்ள ஒரு கிராமமானா கலங்குட் எனுமிடத்தில் இருக்கும் கடற்கரை "கோவாவின் ராணி" மற்றும் "கலங்குட் பீச்" என்று அழைக்கப் படுகிறது. ஆயிரக்கணக்கில் சுற்றுலாப் பயணிகள் வந்து கடல் நீரில் விளையாடி, மீன் சாப்பிட்டு செல்கின்றனர்.
பாகா
சுறுசுறுப்பான பாகா கடற்கரை, வட கோவா மத்தியிலுள்ளது. மழைக்காலத்திலும் ஒரே கூட்டம்தான். வித விதமான உணவு வகைகளை சாப்பிடலாம். நாட்டியமாடலாம். டிஸ்கோக்கள், டோரட் கடைகள், டாட்டூ பார்லர்கள் என ஏராளமான அட்ராக்க்ஷன்ஸ்.
டோனா பௌலா
தேனிலவிற்கு செல்லும் தம்பதியினருக்கு ஏற்ற கடற்கரை டோனா பௌலா. குளிப்பதற்கு ஏற்றதல்ல." ஏக் துஜே கேலியே" மற்றும் "சிங்கம்" படங்களின் காட்சிகள் இங்கே எடுக்கப்பட்டவைகளாகும்.
கண்டோலிம்
கண்டோலிம் கடற்கரை இயற்கை காட்சிகளையும், அருமையான சூழலையும் கொண்டதாகும். நீச்சல் செய்ய பாதுகாப்பான கடற்கரை. நீர் சம்பந்தமான பலவகை விளையாட்டுக்களுக்கு கண்டோலிம் பிரபலமானது.
தென் கோவா கடற்கரைகள்
கோல்வா
சுமார் 24 கி.மீ. நீளமுடைய, வெண் மணலைக் கொண்ட கோல்வா கடற்கரை, தென் கோவாவில் அமைந்துள்ள அருமையான கடற்கரையாகும். நீச்சல் பகுதிகளில் பாதுகாப்பு கருதி, உயிர் காக்கும் பணியாளர்கள் உள்ளனர்.
மஜோர்டா
"லேட் நைட் பீச்" என்று அழைக்கப்படும் மஜோர்டா கடற்கரையில், இரவு நேரப் பார்ட்டிகள் கொண்டாடப்படுகின்றன. கடற்கரையின் அழகை ரசிப்பதோடு, சுவையான மீன் உணவுகளையும் மஜோர்டாவில் சாப்பிடலாம்.
பெனோலிம்
பெனோலிம் கடற்கரை மணலும் வெண்ணிறம் கொண்டதாகவும், மிருதுவாகவும் இருக்கும். நடைப் பயிற்சி மேற்கொள்ள ஏற்ற கடற்கரை பெனோலிம்.
கடற்கரை மணலில் விளையாட, கடலலைகளில் கால் நனைத்து விளையாட, கடலில் நீச்சலடிக்க, சலோ ..! கோவா சலோ!