
ஜனவரி மாதம் என்றாலே விடுமுறைகளும் கொண்டாட்டங்களும் நிறைந்த மாதமாக இருக்கிறது. அதிலும் பொங்கல் விடுமுறை விசேஷமானது. அத்தகைய பொங்கல் விடுமுறையில் இந்தியாவில் கண்டு களிக்க வேண்டிய 6 சிறந்த கடற்கரைகள் குறித்து இப்பதிவில் காண்போம்
இந்தியாவின் தூய்மையான கடற்கரைகளில் அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு நிச்சயம் ஒரு சிறப்பான இடம் உண்டு. ஏனெனில் இங்கு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை என்பதால் இது இயற்கை அழகு எழில் கொஞ்சும் விதமாக பசுமையாகவே உள்ளது. பொங்கல் விடுமுறைக்கு சுற்றுலா செல்ல நினைப்பவர்களுக்கு சிறந்த இடமாக இருப்பதோடு இங்கு சென்றால் நிச்சயம் வெளிநாட்டுக்கே சுற்றுலா சென்ற உணர்வை பெறமுடியும்.
நீண்ட ஜனவரி விடுமுறையை மகிழ்ச்சியாகவும், எவ்வித சிரமமும் கவலையின்றியும் கொண்டாட கோவா கடற்கரை மிகச்சிறந்த தேர்வாகும். ஜனவரியில் வானிலை இங்கு மிகவும் சிறப்பாக இருக்கும் என்பதோடு கொண்டாட்டத்திற்கு குறைவில்லாத நகரமாக கோவா விளங்குவதால் பொங்கல் விடுமுறைக்கு ஏற்ற கடற்கரை இது என்பதில் சந்தேகமே இல்லை
தெளிவான நீல நிற கடல் நீரும் ,வெள்ளை மணலும் உள்ள மகாராஷ்டிராவின் மால்வன் பகுதியில் உள்ள தர்காலி கடற்கரை ஜனவரியில் சுற்றுலா செல்ல வேண்டிய கடற்கரைகளில் ஒன்றாக உள்ளது . மேலும் இங்குள்ள குட்டிலே கடற்கரை மற்றும் பாரடைஸ் கடற்கரையும், சிந்துதுர்க் கோட்டையும் பொங்கல் விடுமுறையில் காணவேண்டிய இடங்களில் ஒன்றாக உள்ளது.
பழமை மாறாத கர்நாடகாவில் உள்ள கோகர்னா கடற்கரை ஜனவரியில் சுற்றிப் பார்க்க வேண்டிய அருமையான கடற்கரைகளில் ஒன்றாக உள்ளது. மேலும் அமைதியான சூழலை விரும்புபவர்களுக்கு இங்குள்ள ஓம் கடற்கரை மிகச் சிறந்த தேர்வாகும்.
கேரளாவில் மிகவும் புகழ்பெற்ற கடற்கரை நகரங்களில் ஒன்றான வர்கலா சாகச விளையாட்டுகளை அதிகம் கொண்டுள்ளதோடு அழகிய இயற்கை காட்சிகளை உள்ளடக்கி ரம்மியமான உணர்வை தருவதால் பொங்கல் விடுமுறையில் கடற்கரையின் அழகை ரசிக்க நினைப்பவர்களின் தேர்வாக வர்கலா கடற்கரை உள்ளது.
தமிழ்நாட்டின் எந்தப்பகுதியில் இருப்பவர்களும் சரி, சென்னையில் இருப்பவர்களும் சரி எங்கிருந்தாலும் பொங்கல் விடுமுறைக்கு அல்லது வேறு எந்த விடுமுறை நாட்களுக்கு, சுற்றுலா செல்லவேண்டும் என்று நினைப்பவர்கள் கண்ணை மூடிக்கொண்டு புதுச்சேரி கடற்கரையை தேர்வு செய்யலாம். பிரெஞ்சு காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்ததால் இதனுடைய பிரதிபலிப்பு இன்றும் புதுச்சேரியில் உள்ள தெருக்களில் காண முடிகிறது. மறக்க முடியாத பொங்கல் விடுமுறை அனுபவத்தை பெற மறக்காமல் புதுச்சேரி செல்லுங்கள் .
மேற்கூறிய ஆறு கடற்கரைகளும் பொங்கல் விடுமுறைக்கு உங்களுக்கு மறக்க முடியாத அனுபவங்களை கொடுக்கும் என்பதில் சற்று ஐயம் இல்லை.