
சுற்றுலா செல்வதற்கு கோடைகால விடுமுறை நாட்களில் மட்டுமல்ல, குளிர் காலத்திலும் செல்ல ஏற்ற இடங்களில் ஒன்றுதான் நம் அண்டை மாநிலமான கேரளா. கேரளாவில் உள்ள மலைப் பிரதேசங்கள். அக்டோபர் முதல் பிப்ரவரி வரை மிகவும் அழகாக பனிப்படர்ந்து அற்புதமாக காட்சி தரும். அந்த வகையில் குளிர்காலத்தில் கேரளாவில் சுற்றுலா செல்ல ஏற்ற 5 இடங்கள் குறித்து இப்பதிவில் காண்போம்.
குளிர்காலத்தில் அமைதியான இயற்கை எழில் சூழ்ந்த இடம் தேடுபவர்களுக்கு மிகச்சிறந்த இடம் இந்த சைலன்ட் வேலி. அடர்ந்த காடுகள் வழியாக, வழிகாட்டியுடன் செல்லக்கூடிய ட்ரக்கிங் ஒரு புதுவித அனுபவத்தை தரும். மேலும் காடு மலைகளுக்கு இடையே உள்ள நடைபாதைகள் மெய் சிலிர்ப்பை உண்டாக்கி மறக்க முடியாத நினைவை ஏற்படுத்தும்.
குளிர்காலத்தில் கேரளாவில் ரசிக்கக்கூடிய இடங்களில் ஒன்றாக தேக்கடி இருக்கிறது. குளிர் அதிகமாக இருந்தாலும் படகு சவாரியின் போது வனவிலங்குகளை காணும் வாய்ப்பு அதிகமாக உள்ளது .மேலும் தேக்கடிக்குச் செல்லும் வழியே மிகவும் அழகாக ரம்மியமாக காட்சி தரும்.
குளிர்காலத்தில் குதூகலத்தை அனுபவிக்க பொன்முடிக்கு சென்று வரலாம். ஏனெனில் இங்குள்ள பனி மூடிய மலைச் சிகரங்கள் ,அழகான வளைவு, தெளிவான சாலைகள், அடர் காடுகள், பள்ளத்தாக்குகள் என குளிர்காலத்தில் அமைதியான அழகான சுற்றுலா செல்ல ஏற்ற இடமாக உள்ளது.
ஆண்டு முழுவதும் பார்க்கக்கூடிய இடங்களில் ஒன்றுதான் கேரளாவில் உள்ள மூணாறு. ஆனாலும் குளிர் காலத்தில் வெப்பநிலை குறைவாகவே இருந்தாலும் மலை சிகரம், படகு சவாரி, ட்ரெக்கிங் என அனைத்தையும் கண்டு களிக்க ஏற்ற இடமாக மூணாறு உள்ளதால் குளிர்காலத்தில் மூணாறை மிஸ் செய்யாதீர்கள்.
பனி சூழ்ந்த குளிர்ச்சியான இடமாக கோடை காலத்திலேயே இருக்கும் கேரளாவின் வயநாடு, குளிர் காலத்தில் உறைபனியில் மிகவும் அசத்தலான அனுபவத்தை வழங்குகிறது. இங்குள்ள ட்ரெக்கிங், போட்டிங், அட்வென்சர் முதலியவை வேறு எங்கும் கிடைக்காத ஒரு புதுவித அனுபவத்தை வழங்கும் என்பதில் சற்றும் ஐயமில்லை.
மேற்கூறிய கேரளாவில் இருக்கும் இடங்களுக்கு குளிர்கால விடுமுறையில் சுற்றுலா சென்று சுத்தமான காற்றை சுவாசித்து மகிழுங்கள்.