பாரத் கௌரவ் சுற்றுலா இரயில் - சென்னையில் இருந்து காஷ்மீர் வரை

Bharat Gaurav Train
Tour
Published on

சுற்றுலா செல்ல திட்டமிடுபவர்கள் பொதுவாக பேருந்து, கார் மற்றும் வேன் மூலமாகவே செல்ல நினைப்பர். ஒரு குழுவாக செல்லும் போது இதுதான் வசதியாகவும் இருக்கும். நமது பொருள்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்வதற்கும், நினைத்த இடங்களில் உடனே வண்டியை நிறுத்தி சுற்றிப் பார்ப்பதற்கும் இம்முறையே சரியாக இருக்கும். இன்னும் சிலர் இரயில் மூலமாக சென்று, அங்கிருந்து பேருந்தைப் பயன்படுத்திக் கொள்வர். அவ்வகையில் பொதுமக்கள் சுற்றுலா செல்வதற்காகவே தனியாக சில இரயில்களை ஒதுக்கியுள்ளது இந்தியன் இரயில்வே. அதில் ஒன்று தான் பாரத் கௌரவ் சுற்றுலா இரயில். இந்த சுற்றுலா இரயிலின் சிறப்புகளை இப்போது பார்ப்போம்.

பாரத் கௌரவ் சுற்றுலா இரயில், சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் விதமாக கடந்த 2023 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. பல்வேறு ஆன்மீகத் தலங்கள் மற்றும் சுற்றுலாத் தலங்களை பயணிகள் கண்டுகளிக்கும் வகையில் IRCTC-யின் முயற்சியால் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது. 11 ஸ்லீப்பர் பெட்டிகளுடன் மொத்தம் 14 பெட்டிகளைக் கொண்டது இந்த இரயில். புறப்படும் இடம் மற்றும் சேரும் இடத்திற்கு ஏற்ப பயண நாட்கள் இருக்கும்.

தற்போது தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் இருந்து காஷ்மீர் வரையிலான வழித்தடத்தில் பாரத் கௌரவ் சுற்றுலா இரயில் இயக்கப்பட இருக்கிறது. சென்னையில் தொடங்கும் இந்த இரயிலானது, முக்கியமான நகரங்களில் நின்று செல்லும். அப்போது, சுற்றுலா பயணிகள் தங்கள் உடைமைகளை இரயிலிலேயே வைத்து விட்டு, சாலைப் போக்குவரத்தைப் பயன்படுத்தி அந்நகரத்தில் இருக்கும் சுற்றுலா தலங்களை கண்டு களிக்கலாம். வருகின்ற ஏப்ரல் 2 ஆம் தேதி இந்த இரயில் சென்னையில் இருந்து புறப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த இரயிலானது ஆக்ரா, புதுடெல்லி மற்றும் அமிர்தசரஸ் வழித்தடத்தில் இயங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதிலும் குறிப்பாக தாஜ்மஹால் மற்றும் பொற்கோயிலை சுற்றுலா பயணிகள் கண்டுகளிக்கும் விதமாக பயணம் மேற்கொள்ளப்படும். இதன்மூலம் அதிக பயணிகள் ஈர்க்கப்படுவார்கள் என்பது இரயில்வே நிர்வாகத்தின் எண்ணம். பயணிகளின் உடைமைகளைக் பாதுகாக்க இரயில்வே நிர்வாகம் தீவிர கண்காணிப்பில் ஈடுபடும்.

ஒருசில நகரங்களில் இரயில் இரவு நேரத்தில் நிறுத்தப்படும் போது, தங்கும் விடுதிகளில் ரூம் புக்கிங் செய்தும் பயணிகள் இளைப்பாறலாம். பாரத் கௌரவ் சுற்றுலா இரயில், 650 பயணிகள் பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இரயிலில் பயணிக்கும் சுற்றுலா பயணிகள் அனைவருக்கும் தென்னிந்திய சைவ உணவுகள் கொடுக்கப்படும்.

இதையும் படியுங்கள்:
உலகின் மெதுவான இரயில்: ஆர்வம் காட்டும் சுற்றுலா பயணிகள்! ஏன் தெரியுமா?
Bharat Gaurav Train

இந்தச் சுற்றுலாவிற்கு இரயில்வே நிர்வாகம் சார்பில் 33% மானியமும் வழங்கப்படுகிறது. ஒரு பயணிக்கான டிக்கெட் கட்டணம் ரூ.50,000 முதல் ரூ.65,000 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 73058 58585 என்ற அலைபேசி எண் வாயிலாகவோ அல்லது www.tourtimes.in, www.irctctourism.com ஆகிய இணையதளங்களிலோ சுற்றுலா பயணிகள் முன்பதிவு செய்து கொள்ள முடியும்.

கடந்த ஆண்டு திருநெல்வேலியில் இருந்து புறப்பட்ட பாரத் கௌரவ் சுற்றுலா இரயில், அயோத்தியா வரை பயணித்தது. தென்னிந்தியாவில் அதிகளவில் இயக்கப்படும் இந்த இரயிலானது, வட இந்தியாவிலும் சீசனுக்கு ஏற்ப இயக்கப்படுகிறது. இந்த இரயில் முழுக்க சுற்றுலா தலங்கள் நிறைந்த வர்ணங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com