
பூட்டான், இந்தியாவின் வடகிழக்கு எல்லையில், இமயமலைப் பகுதியில் அமைந்துள்ள ஒரு அண்டை நாடு. உலக வரைபடத்தில் மகிழ்ச்சியை மட்டுமே தனது நாட்டின் முதன்மை வருவாயாகக் கருதும் ஒரே தேசம் பூட்டான். நவீன நாகரிகத்தின் இரைச்சல்கள் இன்றி, இயற்கையோடு இயைந்து வாழும் மனிதர்களின் சொர்க்க பூமி இது. மாசுபடாத காற்று, பசுமை போர்த்திய மலைகள், பழைமை மாறாத கலாச்சாரம் என பூட்டான் செல்லும் ஒவ்வொரு பயணிக்கும் அது வாழ்நாளின் மறக்க முடியாத அனுபவங்களைத் தருகிறது. அந்நாட்டிலுள்ள முக்கிய இடங்கள் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
பூட்டானின் நுழைவாயிலாகத் திகழும் பாரோ பள்ளத்தாக்கில் இறங்கும்போதே பிரமிக்க வைப்பது 'டைகர்ஸ் நெஸ்ட்' என்று அழைக்கப்படும் 'பரோ தகத்சாங்' மடாலயம் ஆகும். சுமார் 3,000 அடி உயர செங்குத்தான மலையின் விளிம்பில், மேகங்கள் தவழும் உயரத்தில் அமைந்துள்ள இந்தத் திருத்தலம் பூட்டானின் மிக உன்னதமான ஆன்மிக அடையாளமாகும். அடர்ந்த பைன் காடுகளின் வழியே, குதிரைகளின் மீதோ அல்லது நடைபயணமாகவோ இந்த மலையேற்றத்தை மேற்கொள்ளலாம். பழைமையான பூட்டானியக் கட்டிடக்கலையை பறைசாற்றும் பல சோங்குகள் (கோட்டைகள்) பாரோ நகரின் அழகைக் கூட்டுகின்றன.
பூட்டானின் தலைநகரமான திம்பு ஆகும். உலகின் மற்ற பரபரப்பான தலைநகரங்களைப் போலன்றி, இங்கு நவீனமும் பாரம்பரியமும் மிக அழகாகக் கலந்திருக்கின்றன. திம்பு நகரின் முக்கிய ஈர்ப்பு விசை, மலையுச்சியில் கம்பீரமாக வீற்றிருக்கும் 169 அடி உயர வெண்கலப் புத்தர் சிலை (Buddha Dordenma) ஆகும். இங்கிருந்து முழு திம்பு பள்ளத்தாக்கையும் கண்குளிரக் காணலாம்.
மேலும், பூட்டானின் அரசும் ஆன்மிகமும் இணைந்து செயல்படும் மையமான 'தாஷிச்சோ சோங்' (Tashichhoe Dzong) கோட்டை, மாலையில் விளக்குகளின் ஒளியில் ஒளிரும்போது அத்தனை அழகாகக் காட்சியளிக்கும். உலகிலேயே போக்குவரத்து சிக்னல்களே இல்லாத ஒரே தலைநகரம் திம்பு என்பது இதன் கூடுதல் தனிச்சிறப்பு.
திம்புவிலிருந்து பூட்டானின் பழைமையான தலைநகரான புனாகா செல்லும் வழியில், கடல் மட்டத்திலிருந்து பத்தாயிரம் அடி உயரத்தில் அமைந்துள்ள 'டோச்சுலா கணவாய்' பயணிகளைப் பெரிதும் கவரும் ஒரு இடமாகும். பனிமூடிய இமயமலைத் தொடரின் பின்னணியில், போரில் உயிர்நீத்த வீரர்களின் நினைவாகக் கட்டப்பட்ட 108 நினைவு ஸ்தூபிகள் வரிசையாக அமைந் திருக்கின்றன. அடர்ந்த பனிமூட்டத்திற்கு நடுவே இந்த ஸ்தூபிகளைச் சுற்றி உலா வருவது ஒரு கனவு உலகிற்குள் பயணிப்பது போன்ற உணர்வைத் தரும்.
பூட்டானின் மிக அழகான கோட்டையாகக் கருதப்படுவது 'புனாகா சோங்' ஆகும். 'போ சூ' மற்றும் 'மோ சூ' (ஆண் மற்றும் பெண் ஆறுகள்) ஆகிய இரு ஆறுகள் சங்கமிக்கும் இடத்தில் இந்த பிரம்மாண்டமான கோட்டை அமைந்துள்ளது. வசந்த காலத்தில் இந்த ஆற்றங் கரைகளில் பூத்துக் குலுங்கும் ஊதா நிற ஜகராண்டா மலர்களுக்கிடையே, மரப்பாலத்தைக் கடந்து இந்த வெள்ளைக் கோட்டைக்குள் செல்லும்போது நாம் ஒரு அழகிய ஓவியத்திற்குள் நுழைவது போன்ற உணர்வு ஏற்படும். பூட்டானின் மிக முக்கிய வரலாற்று நிகழ்வுகளும் அரச குடும்ப விசேஷங்களும் நிகழும் இடமாக இன்றும் இது திகழ்கிறது.
பூட்டானின் ஆன்மிக இதயம் என்று அழைக்கப்படும் இப்பகுதியில் பல பழைமையான மடாலயங்களும், அழகிய ஆப்பிள் தோட்டங்களும் நிறைந்துள்ளன. பூட்டான் பயணம் என்பது வெறும் இடங்களைப் பார்த்து ரசிப்பது மட்டுமல்ல, அங்குள்ள மக்களின் எளிய வாழ்க்கை முறை, அவர்களின் பாரம்பரிய ஆடைகள், மற்றும் மிளகாயை முதன்மை உணவாகக் கொண்டு சமைக்கப்படும் 'ஏமா தாட்சி' போன்ற உள்ளூர் உணவுகளைச் சுவைப்பது என ஒட்டுமொத்த வாழ்வியல் தேடலாகும்.
அமைதியையும் இயற்கையின் தூய்மையையும் தேடி அலையும் ஒவ்வொரு பயணக் காதலனும் தன் வாழ்நாளில் ஒருமுறையாவது சென்று வர வேண்டிய உன்னதத் தேசம் பூட்டான்.